search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காக்களூர் ஏரியில் 50 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
    X

    காக்களூர் ஏரியில் 50 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெற்றது. திருவள்ளூரில்-111, திருத்தணி-121, ஊத்துக்கோட்டை-209, பொன்னேரி-46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

    நேற்று முதல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர் பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஆயில் மில் பகுதிக்கு டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்தனர். பின்னர் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்த குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு கொண்டு சென்றனர்.

    திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மு.வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோவில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து காக்களூர் ஏரியில் ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்த் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×