என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் நகராட்சி 10-வது வார்டு சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    பொன்னேரியில் நகராட்சி 10-வது வார்டு சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம்

    • பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ராட்சத பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 10-வது வார்டு பர்மா நகர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்டு முடிவடைந்த நிலையில் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் அண்மையில் பெய்த மழையால் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    குழந்தைகளின் பள்ளி சீருடை அழுக்காகி பள்ளிக்கு செல்வதாகவும் வயதானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் சேற்றில் நடந்து கால்களில் சேற்றுப்புண், தோல் வியாதி வருவதாகவும் தெருக்களில் சாலை அமைத்து தரக் கோரி வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இந்த நிலையில் வார்டு சபை கூட்டம் 10-வது வார்டு பர்மா நகர் பகுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் கூட்டத்தை புறக்கணித்து திடீரென்று பர்மா தெரு சாலையில் அமர்ந்து சாலையை சீமரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பருவ மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி வார்டு கவுன்சிலர் வேலா கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×