என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தீவிபத்தில் குடிசை வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
    • வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 சவரன் தங்க நகை, டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த சிவாடா காலனியை சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலின்டர் வெடித்து சிதறியது. மேலும் குடிசை வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20) என்பவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டு கருகினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் இருந்த வெடிக்காத மற்றொரு கியாஸ் சிலின்டரை பத்திரமாக வெளியில் எடுத்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இந்த தீவிபத்தில் குடிசை வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 சவரன் தங்க நகை, டி.வி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

    வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதா? அல்லது மின்கசிவு காரணமாக? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை ரத்து செய்யக்கோரியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பொன்னேரியில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    • கும்மிடிப்பூண்டியை அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்டோர வசித்து வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்டோர வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி உள்ள சத்தியவேடு-கவரப்பேட்டை நெடுஞ்சாலையை பூதூர், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபுத்தூர், பூவலம்பேடு, சின்ன புலியூர் உள்ளிட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து சாலையை சீரமைக்ககோரி அமரம்பேடு கிராமமக்கள் 100-க்கும்மேற்பட்டோர் இன்று காலை கவரப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராமன், டி.எஸ்.பி. ரீத்து, உதவிப் பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி அறையை அவர் பார்வையிட்டார்.
    • கம்ப்யூட்டர் ஆய்வறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் திடீரென்று ஆய்வு செய்தார்.

    பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டரை அரசு பள்ளி தலைமையாசிரியர் ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபாலன் உட்பட ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    பின்னர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆய்வு செய்தார். பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி அறையை அவர் பார்வையிட்டார். அப்போது கம்ப்யூட்டர் ஆய்வறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன், கடம்பத்துார் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன்சுமதி உட்பட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 23.48 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3,509 மில்லியன் கன அடி நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடி எட்டும் நிலையில் உள்ளது.

    வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டினால் உபரி நீர் திறந்து விடுவது வழக்கம்.

    தற்போது பெய்து வரும் கனமழையை கருத்தில்கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தினர்.

    எனினும் ஏரி முழுகொள்ளவை எட்டி வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

    இன்றும் பலத்த மழை இருந்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி சுற்றிலும் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கோடை காலத்தில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பட்டரவாக்கம் யாதவா தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (29).
    • கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பட்டரவாக்கம் யாதவா தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (29). இவர் தனது மினி வேனில் தண்ணீர் தொட்டி அமைத்து வீதி வீதியாக சென்று தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் ஜெகநாதன் நகரில் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த 2 பேர் எங்களுக்கு போட்டியாக இந்த ஏரியாவில் எப்படி தண்ணீர் வியாபாரம்  செய்யலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் கட்டையால் முனியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ராஜமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர்.

    • ஊத்துக்கோட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
    • படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் சிவகுமார் (வயது 14). இதில் சரவணன் கூனிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவகுமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    நேற்று இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி புறப்பட்டனர். அம்மம்பாக்கம் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (வயது 54). தனது மகள் நான்சி (23)யுடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
    • ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 510 கன அடி, மழைநீர் வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் வரத்து திட்டத்தின்படி கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்த்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணா நீர் வருகையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். இதில் 3.300 டி. எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இதில் 3.645 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதிநீர் வருகை மற்றும் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையால் புழல் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நீர் மட்டும் கிடுகிடுவென்று உயர்ந்து வந்தது.

    நேற்று இரவு இந்த 2 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. அதாவது புழல் ஏரியில் 3.076 டி.எம்.சி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3.509 டி.எம்.சி.தண்ணீரும் இருப்பு உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.20 அடியாக பதிவானது. 1.018 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 510 கன அடி, மழைநீர் வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் கண்டலேறு அணையில் இருந்து இனி வரும் நாட்களில் கிருஷ்ணா நதி நீர் முழுவதையும் பூண்டி ஏரியில் சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியபின் சோழவரம, ஜமீன்கொரட்டூர் ஏரிகளுக்கு நீர் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    • தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
    • பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 25.71அடி ஆக பதிவாகியது. 947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 588 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் சென்று கொண்டிருந்தது.

    மழைநீர் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.105 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.
    • சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் பழுதாகியும் சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்தது. திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து புல்லரம்பாக்கம், பூண்டி, நம்பாக்கம் வழியாக பென்னலூர்பேட்டை சென்ற அரசு பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    கனமழை காரணமாக பஸ்சின் மேற்கூரையில் ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர். பலர் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்தனர்.

    இதனை சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாகி பரவி வருகிறது. பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக மாற்று பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில் கன்சிராம் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.
    • திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில் கன்சிராம் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அடகு கடையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்.
    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது26) ஆட்டோ ஓட்டுனர்.

    நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் ஈக்காடு அருகே புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பூண்டி இணைப்பு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பூண்டி இணைப்பு கால்வாயில் 831 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் திடீரென ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முன்றும் முடிய வில்லை.

    இது குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஹரிசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இணைப்பு கால்வாயில் திறந்து விடப்பட்ட நீரை பொதுப் பணித் துறை அதிகாரிகளின் உதவியோடு நிறுத்தப்பட்டன. ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் தீயணைப்பு துறையினர் கால்வாயில் இறங்கி தேடும் பணியை கை விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரீசின் நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக ஹரிசை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

    ஆவடி அடுத்த மோரை கால்வாயில் ஹரிஷின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. புல்லரம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

    ×