என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலத்த மழை: பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
- ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 510 கன அடி, மழைநீர் வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் வரத்து திட்டத்தின்படி கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்த்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணா நீர் வருகையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். இதில் 3.300 டி. எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி ஆகும். இதில் 3.645 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதிநீர் வருகை மற்றும் அவ்வப்போது பெய்து வரும் பலத்த மழையால் புழல் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நீர் மட்டும் கிடுகிடுவென்று உயர்ந்து வந்தது.
நேற்று இரவு இந்த 2 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. அதாவது புழல் ஏரியில் 3.076 டி.எம்.சி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3.509 டி.எம்.சி.தண்ணீரும் இருப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.20 அடியாக பதிவானது. 1.018 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 510 கன அடி, மழைநீர் வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் கண்டலேறு அணையில் இருந்து இனி வரும் நாட்களில் கிருஷ்ணா நதி நீர் முழுவதையும் பூண்டி ஏரியில் சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியபின் சோழவரம, ஜமீன்கொரட்டூர் ஏரிகளுக்கு நீர் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.






