என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பிளஸ்-2 தேர்வு முடிவில் திவாகர் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
    • பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு, வி.ஜி.எஸ் நகரை சேர்ந்தவர் வினோத். இவரது மகன் திவாகர்(வயது17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் திவாகர் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

    இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை திவாகர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது மகன் திவாகர் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுக்குறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு அத்திப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் சுகந்தி வடிவேல் துணைத்தலைவர் கதிர்வேல் ஆகியோர் பேரிடர் பாதுகாப்பு கண்காணிப்பாளரிடம் தாங்கல் கால்வாய் பகுதியில் செல்லும் வடசென்னை அனல்மின் நிலைய சாலையின் குறுக்கே சிறிய பாலத்சிதை அகற்றி பெரிய பாலமாக மாற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதிய தரைப்பாலம் அமைக்க காமராஜர் துறைமுக சமுதாய வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இரண்டு மாதத்திற்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ளது திரிபுர சுந்தரி கோவில்.
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் :

    கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ள திரிபுர சுந்தரி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 4-ந்தேதி சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    நேற்றுகாலை விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து மாலை மூன்றாம் கால யாக பூஜை ஹோமம், நாடி சந்தானம், மற்றும் தீபாராதனையும் நடை பெற்றது. இன்று காலை திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பி.ஜி.பிரபாகரன், இணை ஆணையர் சி.லட்சுமணன், கோயில் தக்கார் எம்.டில்லிபாபு, மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
    • மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை எப்படி உள்ளது என ஆய்வு மேற்கொண்டார்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அப்போது பூந்தமல்லி பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்மனம்பேடு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். பின்னர் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை எப்படி உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களிடம் தூய்மையாக இருக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார்.

    • ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
    • ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மீஞ்சூர் பைபாஸ் சாலையில் காவல் ஆய்வாளர் சுந்தரம்பாள் தலைமையில், தலைமைக் காவலர்கள் திருப்பதி, சுந்தரபாண்டியன், செந்தில்குமார், டேவிட் சந்தானம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மைக்கேல் லோகநாதன் ஆகியோர் என்றும் மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி அதை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 டன் ரேசன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
    • 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    பழவேற்காட்டில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு அதிகமாக ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், அசாம் மற்றும் தமிழ கத்தின்பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பழவேற்காட்டில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி பழவேற்காட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தெரிவித்த இடத்தில் சிறிய துறைமுகம் அமைத்தால் கடல் அரிப்பு ஏற்படும் எனவும் இதனால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அதிகாரிகள் மீனவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

    எனவே கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன்பிடி துறைமுகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவகிராமமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் கடல் அரிப்பு ஏற்படாது எந்த கிராமத்திற்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுபற்றி அமைச்சர், எம். எல்.ஏ மற்றும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது.
    • வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவரது வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது. முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து வினோத்தை கைது செய்தனர்.

    அவர் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர்.
    • சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மகும்பல் பதுங்கி இருப்பதாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்துபோலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த மேலும் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ், கல்லூரி மாணவரான அஜய் மற்றும் பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் சிறையில் இருக்கும் ஒரு ரவுடியின் திட்டப்படி அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரிந்தது. சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை திட்டம் தடுக்கப்பட்டு உள்ளது.

    கைதானவர்களிடம் இருந்து அரிவாள், பட்டாக் கத்தி மற்றும் அதனை கூர்மைப்படுத்த பயன் படுத்தும் எந்திரம், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 3 பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உண்ணாவிரத போராட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா தலைமை தாங்கினார்.

    இதில் மாநில செயலாளர் ஆனந்த பிரியா, லோகநாதன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆரியா சீனிவாசன், சீனிவாசன், ஜெய்கணேஷ், நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

    • திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகம்மாள் ( வயது 76). இவர் மேச்சலுக்குச் சென்ற மாடுகளை தேடிக்கொண்டு சென்றார்.

    திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி நாகம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த நாகம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×