என் மலர்
திருவள்ளூர்
- மப்பேடு அடுத்த மேட்டுக் கண்டிகை பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.
- காமேஷ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரது செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து மாணவி மப்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மப்பேடு அடுத்த மேட்டுக் கண்டிகை பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். காமேஷ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளது.
- குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அசோக். இவர் கடந்த வாரம் போலீஸ்காரர்க்ள வல்லரசு, மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் பாடிய நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த கும்பல் அரிய வகையான உராங்குட்டான் குரங்கை வெளிநாட்டுக்கு கடத்த சென்னை விமான நிலையம் நோக்கி செல்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பலுடன் நடத்திய பேச்சுவார்தையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட போலீசார் 4 பேரும் கடத்தல் கும்பலை அரிய வகை குரங்குடன் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் குரங்கு கடத்தல் கும்பலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவியதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாகன சோதனையின் போது உராங்குட்டான் குரங்கு கடத்தல் கும்பலிடம் பணத்தை பெற்று கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் அசோக் உள்பட 4 போலீசாரும் அவர்களை அங்கிருந்து தப்பி செல்ல அனுமதித்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குரங்கு கடத்தல் கும்பலுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் அசோக், போலீஸ்காரர்கள் வல்லரசு,மகேஷ், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
ஒரே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது
- காயமடைந்த வாசுதேவனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக சேடை உழும் பணி இன்று நடைபெற்றது. புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன்(வயது53) என்ற கூலி தொழிலாளி, இரண்டு காளை மாடுகளுடன் பலகையை அமைத்து சேடை உழுது கொண்டிருந்தார்.
இந்த விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததாம். இதனால் சேடை உழுது கொண்டிருந்த சேறு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் சேற்றில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகின. மின்சாரம் தாக்கியதால் வாசுதேவன் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரக் கம்பத்துக்கு வரும் மின் இணைப்பை துண்டித்தனர். இதற்குள் வாசுதேவன் மயங்கி சேற்றில் விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தம்பாக்கம் கிராமம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது24) ஆவார். இந்த வாலிபர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு வாலிபர் மகேஷ் பரிதாபமாக பலியானார்.
இந்தச் சம்பவம் குறித்து மகேஷின் தந்தை நடராஜன் நேற்று வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது
- முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
பொன்னேரி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னேரி தொகுதி அதிமுக மாவட்ட செயலாளர் பலராமன், நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆலோசனைபடி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் தலைமையில் பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் நாகராஜ், சம்பத்மதி, மெதுர் ரமேஷ், வாசுகி, திருக்குமரன், ரவி, வெங்கடேச ரங்கராவ், சங்கர், சீனு, ஆனந்தன் மணிமாறன், சுதாகர், பிரகாஷ் மற்றும், பேரூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் இருப்பதால் கால தாமதம் ஏற்படாது
- சென்னை கோட்ட அதிகாரிகள் ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர்.
சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டுமே நிற்கும். வேறு எந்த நிலையத்திலும் நிற்காது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று கோட்ட ரெயில் பயணிகள் நல உறுப்பினரும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவருமான ஜெயபால்ராஜ் கோரிக்கை வைத்தார்.
தொழிற்சாலைகள் மிகுந்த ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளிவந்த பொருளாதார ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலை 4 நிமிடங்கள் நிறுத்தி எடுப்பதால் கால தாமதம் ஏற்படாது. இந்த ரெயிலை நிறுத்துவதன் மூலம் வர்த்தக பிரமுகர்கள், ஊழியர்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் பயன் அடைவார்கள் என்று வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சென்னை கோட்ட அதிகாரிகள் ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று வந்தே பாரத் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
- உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர்.
- மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூரில் நடுரோட்டில் மாணவிகள் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் காமரா ஜர் சிலை அருகே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் கேக் ஒன்றை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது தோழி ஒருவரது பிறந்தநாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர். அந்த நுரை சாலையில் சென்ற பொதுமக்கள் மீது விழுந்தது. இதனை பொதுமக்கள் கண்டித்தும் மாணவிகள் கண்டுகொள்ளாமல் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகளின் விபரத்தை சேகரித்து அவர்களுக்கு அறிவுரை கூற போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.
- கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வெள்ளை குலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணய்யா (வயது46) விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களது மகள் இந்துஜா(16). சரவணய்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மருத்துவ முகாம் சேவை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
- கனரா வங்கியின் இயக்குனர் நளினி பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் சேவா பாரதி இயக்கம் இணைந்து நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவையை துவக்கியுள்ளது. இதற்காக நடமாடும் மருத்துவ வாகனத்தை கனரா வங்கி தனது சிஎஸ்ஆர் நிதியில் வழங்கி உள்ளது. இம்மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக இந்த நடமாடும் மருத்துவ முகாம் சேவை வாகனம் மூலம் மருத்துவ சேவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு, வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கி நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், கனரா வங்கியின் இயக்குனரும், சார்ட்டட் அக்கவுண்டன்டுமான நளினி பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கனரா வங்கியின் துணைப் பொது மேலாளர் ஐ.ஜெகதீசன்,ராஷ்ட்ரிய சேவா பாரதி பொருளாளர் சந்திரசேகர், ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில், சிறப்பு விருந்தினராக ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தென் மண்டல மக்கள் தொடர்பு அமைப்பாளர் பி.பிரகாஷ் கலந்து கொண்டு நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனத்தின் பயன்களை விளக்கி கூறி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், சேவா பாரதி மாநில தலைவர் ராபு மனோகர், சிவராமன், ரகு மனோகர், கல்லூரி டீன் டாக்டர் குமுதா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் நாராயணன் வரவேற்றார். முடிவில், டாக்டர் சதீஷ் நன்றி கூறினார்.
- சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மாணவர்கள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- வேண்டும், வேண்டும் சாலை வசதி வேண்டும். அகற்று, அகற்று ஆக்கிரமிப்பை அகற்று! என்று கோஷம் எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அரியப்பாக்கம் கிராமம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்திலிருந்து இந்த பள்ளிக்குச் செல்லும் வழியில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்னை-ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து நிறைந்த அச்சாலை வழியாக செல்லும் போது மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளிச் செல்லும் மாணவர்களை கேலியும், கிண்டலும் செய்கின்றார்களாம்.
எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மாணவர்கள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளியை புறக்கணித்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு வேண்டும், வேண்டும் சாலை வசதி வேண்டும். அகற்று, அகற்று ஆக்கிரமிப்பை அகற்று! என்று கோஷம் எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
- மாயமான திருநம்பியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி என்கிற அம்மு (35). திருநங்கையான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புட்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சகோதரன் அமைப்பு மூலம் திருநம்பியாக மாறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா என்கிற செய்யது செரீப் (21) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முவின் வீட்டுக்கு சிலர் வந்து செய்யது செரீப்பை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் அம்மு புகார் செய்தார். அதில் மாயமான திருநம்பி செய்யது செரீப்பை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
- புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள லாட்ஜூகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில் சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் சன்னதி தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். இன்று காலை திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் அறைகளுக்குள் புகை மூட்டம் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அறைகளில் தங்கி இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர்.
அப்போது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரைராஜ் என்பவர் வெளியே வர முடியாமல் அறையில் சிக்கிக் கொண்டார். புகை மூட்டம் அதிகம் ஏற்பட்டு தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






