என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 884 மி.கன அடி (9.8 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10.1 டி.எம்.சி. இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் கோடை காலத்திலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    ஏற்கனவே செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வரும் மாதங்களில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா தண்ணீரை பெற முடியும். எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,524 மி.கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு 1,081 மி.கனஅடி. இதில் 831 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 2,962 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு கொள்ளளவான 3,645 மி. கன அடியில் 3,067 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

    • திறக்கப்படாமல் இருந்த காவலர்களின் குடியிருப்பை ஆவடி ஆணையர் திறந்து வைத்தார்.
    • பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என ஆணையர் பேச்சு

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடசென்னை அனல் மின் நிலையம் காமராஜர் துறைமுகம் அதானி துறைமுகம் மற்றும் எல் அண்ட் டி துறைமுகம் மற்றும் சுவாரி சிமெண்ட் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில் அதிக குற்ற செயல்கள், போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அவைகளை தடுக்கும் பொருட்டு அத்திப்பட்டு தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் துணை ஆணையர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆணையர் முருகேசன் மலைச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் காட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவலர்களுக்கு வெகு காலங்களுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த காவலர்களின் குடியிருப்பை ஆவடி ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைத்து, 12 காவலர்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'புறக்காவல் நிலையத்தின் மூலமாக போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். நெடுஞ்சாலைகளில் சில மாதங்களாக பொது மக்களுக்கு சாலை ஓரங்களில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதனை சமூக அமைப்புகளின் மூலமாகத்தான் இணைந்து தடுக்க முடியும். கடந்த இரண்டு மாதத்தில் ஆவடி காவல் சரகத்தில் 90 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேஷ், காவல் ஆய்வாளர்கள் டில்லி பாபு, சிரஞ்சீவி, பன்னீர்செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கடம்பத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாலமன் அருண்ராஜ் என்பவர் ஆனந்தராஜை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடம்பத்தூர்:

    கடம்பத்தூர் பஜார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 53). இவர் கடம்பத்தூர் பஜாரில் கயலான் கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வழக்கம் போல் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாலமன் அருண்ராஜ் (26) என்பவர் ஆனந்தராஜை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சாலமன் அருண்ராஜ், கடைகாரரை கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

    இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சாலமன் அருண்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.500 யும், ஒரு கத்தியையும் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

    • உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் திருநெல்வேலி ஜியான் செமினேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.டெக் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவரது பெற்றோர் பொன்னேரி பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ஹரிணியை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை ரூ.1000-க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பூனைகளை ஏழு கிணறு போலீசாரின் உதவியோடு மீட்டனர். மீட்கப்பட்ட 11 பூனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இது குறித்து ஸ்ரீராணி கூறியதாவது:-

    நான் மத்திய அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவை திருடப்பட்ட செல்லப்பிராணிகள் ஆகும். இந்த செல்லப்பிராணிகளை இரவு நேரங்களில் வலைகளை பயன்படுத்தி பிடித்துள்ளனர்.

    சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஒரு பூனையை ரூ.1000-க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமல்லாது மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து, உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சளி மற்றும் வறட்டு இருமலில் தொடங்கும் இந்த வைரஸ் காய்ச்சல் கடுமையான உடல் வலி, கை, கால், மூட்டு வலி, உடல் சோர்வுடன் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமான பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

    ஒருவருக்கு காய்ச்சல் காணப்படும் நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் பரவி வருகிறது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் 2 வாரத்திற்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு காணப்படுகிறது. பொன்னேரி நகராட்சி 15-வது வார்டு, 19-வது வார்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பேருக்கு காய்ச்சல் பரவி உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் 15-வது வார்டு, 19-வது வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணி 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது.

    கிண்டி - போரூரை இணைக்கும் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருன்றன.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேருடன் ஆலந்தூர் நோக்கி மவுண்ட- பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

    ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரெயில் பணிக்காக இரும்பு கம்பிகளை "டிரெய்லர் லாரியில்" ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத கிரேனில் இருந்து இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது. இதில் மாநகர பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

    இது தொடர்பாக ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.

    அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • ஓடும் மின்சார ரெயிலில் மல்லிகா ஏற முயன்றார். இதில் அவர் தவறி கீழே விழுந்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது45). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்யவந்தார்.

    அப்போது நடைமேடை 4-ல் இருந்து மினசார ரெயில் மெதுவாக புறப்பட்டது. எனினும் ஓடும் மின்சார ரெயிலில் மல்லிகா ஏற முயன்றார். இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
    • தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    பொன்னேரி:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது வழக்கம். ரெயிலில் ரூட்டு தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்களிடையே மோதலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களது மோதல் நீடித்தது.

    இதையடுத்து பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரெயிலில் இருந்து கிழே குதித்தனர். அப்போதும் அவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஓடும் மின்சார ரெயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் காரணமாக மின்சார ரெயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மாணவனின் தாய் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் மனு அளித்து உள்ளார்.

    ரெயிலில் கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க ரெயில்வே போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட் டத்தில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் வகையில் தரிசு நிலங்களை கணக்கெடுத்து அதனை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப் பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 141 கிராங்களில் 173.6 ஏக்கர் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.7.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால் வாய்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்புடன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    கடம்பத்துார் ஒன்றியத்தில் திருமேணிக்குப்பம் ஊராட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 11.72 ஏக்கர் தரிசு நிலம் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த பணிகளை தமிழக அரசின் திட்ட கண்காணிப்பு அலுவலரும், நுகர்பொருள் வாணிபக்கழக ஆணையருமான வி.ராஜாராம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இதைத்தொடர்ந்து தரிசு நிலத்தொகுப்பு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பார்வையிட்டார்.

    இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் கட்டமாக தேர்வாகி உள்ள, 1,997 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள மாநில நிதியில் இருந்து ரூ.227.06 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.

    2023-24-ம் நிதியாண்டில், 3,204 கிராம பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 141 கிராமங்களில் ரூ.7.09 கோடியில் தரிசு நிலத்தொகுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி, வேளாண் இணையதளங்கள் மற்றும் வேளாண்மை அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ரிஷப் பண்ட், வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ், வேளாண்மை நேர்முக உதவியாளர் வி.எபினேசர், தோட்டக் கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரிஅனி, வேளாண்மை வணிக துணை இயக்குனர் ராஜேஸ் வரி, கடம்பத்துார் வேளாண்மை அலுவலர் எஸ். தீபிகா, கடம்பத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் கே.பூர்ணிமா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது.
    • உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது53) விவசாயி. இவர் பாகல்மேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 மாடுகளை கொண்டு உழுது கொண்டு இருந்தார்.

    அந்த விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு விளைநிலத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் திடீரென பாய்ந்தது.

    இதில் உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன. விவசாயி வாசுதேவனும் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்த டிரான்ஸ்பாரர்மரில் மின்சப்ளையை துண்டித்தனர். இதைத்தெடர்ந்து வாசுதேவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.
    • நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி ஊராட்சி பகுதியில் உள்ளது காட்டுத்தாங்கள் ஏரி. இந்த ஏரி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    கடந்த வடகிழக்குபருவ மழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. எனினும் காட்டுத்தாங்கல் ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் ஏரி தற்போது வறண்டு மணல் மற்றும் முட்புதர்களாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீ பெரும்புதூர், இருங்காட்டு கோட்டை மற்றும் அரண்வாயல், போளிவாக்கம், வெள்ளவேடு, திருமழிசை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தொழிற்சாலை கழிவுகள் இந்த ஏரியில் கொட்டி எரிக்கப்படுகிறது.

    இதனால் இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப பட்ட ஊராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-

    பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை தினமும் லாரி, லாரியாக கொண்டு வந்து காட்டுத் தாங்கள் ஏரியில் கொட்டி எரித்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×