search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் சென்னை கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
    X

    மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி

    பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் சென்னை கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்

    • பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
    • தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    பொன்னேரி:

    சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வது வழக்கம். ரெயிலில் ரூட்டு தல பிரச்சினையால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்களிடையே மோதலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் கட்டிப்புரண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இதில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    பொன்னேரி அருகே பெரியக்காவனம் ரெயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவர்களது மோதல் நீடித்தது.

    இதையடுத்து பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து மின்சார ரெயிலை நிறுத்தினர்.

    உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரெயிலில் இருந்து கிழே குதித்தனர். அப்போதும் அவர்கள் கற்களை வீசி மோதிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் ராஜ்குமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஓடும் மின்சார ரெயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் காரணமாக மின்சார ரெயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மாணவனின் தாய் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் மனு அளித்து உள்ளார்.

    ரெயிலில் கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க ரெயில்வே போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×