என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
- பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சளி மற்றும் வறட்டு இருமலில் தொடங்கும் இந்த வைரஸ் காய்ச்சல் கடுமையான உடல் வலி, கை, கால், மூட்டு வலி, உடல் சோர்வுடன் காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமான பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.
ஒருவருக்கு காய்ச்சல் காணப்படும் நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் பரவி வருகிறது. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் 2 வாரத்திற்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல், உடல் சோர்வு காணப்படுகிறது. பொன்னேரி நகராட்சி 15-வது வார்டு, 19-வது வார்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பேருக்கு காய்ச்சல் பரவி உள்ளது.
இந்த நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக அதிகமான பேர் காய்ச்சலால் சளி மற்றும் ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் 15-வது வார்டு, 19-வது வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.






