என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாலை வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்- வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை
    X

    சாலை வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்- வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை

    • சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மாணவர்கள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • வேண்டும், வேண்டும் சாலை வசதி வேண்டும். அகற்று, அகற்று ஆக்கிரமிப்பை அகற்று! என்று கோஷம் எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அரியப்பாக்கம் கிராமம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்திலிருந்து இந்த பள்ளிக்குச் செல்லும் வழியில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

    இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்னை-ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து நிறைந்த அச்சாலை வழியாக செல்லும் போது மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளிச் செல்லும் மாணவர்களை கேலியும், கிண்டலும் செய்கின்றார்களாம்.

    எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பள்ளி மாணவர்கள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளியை புறக்கணித்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு வேண்டும், வேண்டும் சாலை வசதி வேண்டும். அகற்று, அகற்று ஆக்கிரமிப்பை அகற்று! என்று கோஷம் எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    Next Story
    ×