என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 12, 19,26-ந்தேதிகளில் போத்தனூருக்கு மாலை 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.40 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கும், சேலத்துக்கு இரவு 9 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கு தயாராகி விட்டனர். சில பனியன் நிறுவனங்களில் கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பூர் மாநகர கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் நேற்று (புதன்கிழமை) முதல் போனஸ் பட்டுவாடா செய்யும் பணியை தொடங்கி விட்டனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) போனஸ் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். திருப்பூரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் கடந்த 2 நாட்களாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.

    இந்நிலையில் நாளை (10-ந்தேதி) முதல் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து ெசாந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் 20-ந் தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே பனியன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். மேலும் திருப்பூர் மாநகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் பஸ், ரெயில் நிலையம், கடைவீதிகளில் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர டிராபிக் வார்டன்கள், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல மாநகராட்சி சந்திப்பு, புதுமார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சுப்பிரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    முத்தூர்:

    ஊதியூர் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம், குள்ளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி (வயது 26). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த சுப்பிரமணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
    • கைது செய்தவர்களிடமிருந்து 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ போலீசார் கைப்பற்றினர்

    முத்தூர்:

    காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் போலீசார் நேற்று காலை காங்கயம் மற்றும் நால்ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெய்க்காரன் பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகங்கை மாவட்டம் , என்.புதூர் பகுதியை சேர்ந்த பொன்துரைபாண்டியன் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
    • கால்நடைகளில் இருந்து மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    உடுமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை,கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து உடுமலை அடுத்த மானுப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது. முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.உதவி இயக்குனர் வே.ஜெயராம்,நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் கௌசல்யாதேவி ஆகியோர் கால்நடைகளை தாக்கும் நோய் குறித்த தடுப்பு முறைகள் பற்றியும், மருத்துவக் கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் செந்தில்வேல் மற்றும் பேராசிரியர் கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினார்கள்.

    பால்வளத்துறை பொது மேலாளர் சுஜாதா மற்றும் துணைப்பதிவாளர் ஆவின் கணேஷ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்,ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கால்நடை டாக்டர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் குழுவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள்,குதிரை, வெள்ளாடு,செம்மறியாடு, நாய் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை,குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணிகள் மற்றும் கால்நடைகளில் இருந்து மாதிரி பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்போருக்கும் சிறந்த பால் உற்பத்தியாளருக்கும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் இருந்து கிடாதுறைபுதூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தார்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் மழைநீரானது குளம் போல் தேங்கி நின்றது.இதனால் இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளிபாளையம் மற்றும் கிடாதுறைபுதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு பள்ளிபாளையம் பகுதியில் இருந்து அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
    • மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கிறார்கள்.

    இதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்ட பஸ்கள் அனைத்தும் தாராபுரம் ரோடு , கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்துக்குள் கட்டுமான பணி நடப்பதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதற்காக பஸ் நிலையத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • மழையின் காரணமாக திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிப்பாளையம் அருகே கோவை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.

    அவினாசி:

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

    இன்று காலை 6 மணிக்கு பிறகும் கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் நலன் கருதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைப்பணிகள் நடக்கிறது. இதற்காக சாலைகள் தோண்டி போடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் அந்த வழியாக செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    திருப்பூர் சக்தி தியேட்டர் அருகே வளம்பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருப்பூர் மும்மூர்த்திநகரில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். செரீப் காலனி பகுதியிலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. டி.எம்.எப். பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருப்பூர் ஊத்துக்குளி மெயின்ரோடு, பி.என்.ரோடு, ஆகிய பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

    மேலும் மழையின் காரணமாக திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிப்பாளையம் அருகே கோவை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதேபோல் திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-44, கலெக்டர் முகாம் அலுவலகம் -79, திருப்பூர் தெற்கு -25, கலெக்டர் அலுவலகம்-50, அவினாசி -120, தாராபுரம்-3, நல்லதங்காள் ஓடை-5, காங்கயம்-5.40, , பல்லடம்-30. மாவட்டம் முழுவதும் மொத்தம் 381.40 மி.மீ., மழை பெய்துள்ளது.

    • சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அவினாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம், லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால கிணற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. உடனே இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். விசாரணையில், அவினாசிபாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி எஸ்.கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்று தெரியவந்தது. சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக காணப்படும் இந்த பெண், எப்படி இறந்தார் என்று தெரியவில்ைல. யாராவது இவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல கோணங்களில் அவினாசிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
    • காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ஹரிகரன் (வயது 24). இவர் கோயமுத்தூரில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிகரன், வெங்கிட்டாபுரத்தில் உள்ள முடி திருத்தும் கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார்.

    அங்கு கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கிருந்த விக்னேஷ் என்பவரது மீது ஹரிகரன் கால் தவறுதலாக பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், ஹரிகரனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பினர். இதற்கிடையே ஹரிகரன், மேற்கு பல்லடம் பகுதிக்கு சென்றபோது அங்கு நண்பர்களுடன் இருந்த விக்னேஷ், ஹரிகரனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கு பல்லடத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (28), முருகன் என்பவரது மகன் கேசவன் (23), ஆறுமுகம் என்பவரது மகன் பரமசிவம் (23), ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் ஏபி., நகரில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் பாரிக் (24), மனோஜ் பொகாரா (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

    • பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
    • மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    முத்தூர்:

    நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டுக்கால்வாய் வழியாக திறக்கப்படும். இதன் மூலம் கே.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் தாலூக்காவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கால்வாய்கள் உள்ளது.

    திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடுவது 2004-க்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 வருடங்கள் கழித்து 2019-ல் முத்தூர் தடுப்பணையில் இருந்து நொய்யல் வெள்ளநீர் அப்போது திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது செல்லும் வெள்ளநீரில் டிடிஎஸ் 660 க்கும் குறைவாக உள்ளது.

    இதையடுத்து குப்பகவுண்டன்வலசு அருகே உள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் நேற்று முதல் ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 5-ம் ஆண்டாக அணைப்பளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஊட்டு கால்வாய்க்கு திறந்தது போக நொய்யல் ஆற்றில் 250 கன அடி வரை காவிரிக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×