என் மலர்
திருப்பூர்
- நகரப் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
- குடிநீர்,தெரு விளக்கு,கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை அத்தியாவசிய பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முத்துசாமியை பல்லடம் அதிமுக., நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அதிமுக., நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பல்லடம் நகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளான குடிநீர்,தெரு விளக்கு,கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை அத்தியாவசிய பணிகள் முறையாக செய்யப்படுவதில்லை எனவும், எதற்கு எடுத்தாலும், நகர்மன்ற உறுப்பினர் மற்றும் தலைவரை கேட்டுத்தான் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நகரப் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குடி தண்ணீர் எப்பொழுது வரும் என தெரிவதில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அடிப்படை அத்தியாவசிய பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.இந்தநிகழ்ச்சியில் பானு பழனிச்சாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, லட்சுமணன், துரைக்கண்ணன், வெங்கடேஷ்குமார்,ஜம்புமணி, ஆசிரியர் ரங்கசாமி,ரவி மற்றும் அதிமுக., நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
- கடலூரில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி பழனிச்சாமி நகரில் கடந்த 18 ந் தேதியன்று நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மோகன்ராஜ் (வயது 32) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவி கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் கடலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்த போலீசார் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் அருண்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஹக்கீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கூலித் தொழிலாளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
- நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விட்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள சின்னம்மன்கோவில் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (45), கூலித் தொழிலாளி. இவர் நேற்று லக்கமநாயக்கன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது.
- கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி 13 வது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் சாய் ராஜ் ஆகியோர் கூறுகையில்:-
பல்லடம் நகராட்சி 13வது வார்டு பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது. இந்த நிலையில், தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது.
மேலும் பழைய தார் சாலையை முறையாக அகற்றாமல் போடப்பட்டுள்ளதால், தார் சாலை பாலம்,பாலமாக பெயர்ந்து வருகிறது. கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது. எனவே தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக கழிப்பறை தேவைப்படுகிறது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஷோபனா தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கு உடனடித் தேவையாக பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக கழிப்பறை தேவைப்படுகிறது. எனவே புதியதாக கழிப்பறை கட்டித்தர வேண்டும்,
பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட அரசிடம் நிதி ஒதுக்கீடு கோருவது , புதிய உயர்தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும், ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக பெற்றோர் - ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எடப்பாடி பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் பொருளாளர் யாசுதீன் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய தலைவராக முகமது அப்பாஸ், மற்றும் பொருளாளராக நாசர் அலி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.
- யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர்வரும் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
High Risk எனப்படும் அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் ெபயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த ஆஷா மற்றும் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
- சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் கருவலூரை சேர்ந்த 32 வயது பெண், தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் கார்கள் விற்பனை செய்வதாக பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண், கார்களின் விலை விவரங்களை கேட்டறிந்தார். ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் வாங்கிக்கொள்ளலாம் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண், சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் தொடர்பு கொண்டு காரை டெலிவரி கொடுக்குமாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் செல்போனை எடுக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகே தான் ஏமாறியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாரில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
இந்தநிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஈரோடு நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் குத்ஜான் (வயது 42) மற்றும் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தர்வேஷ் (51) ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அப்துல் குத்ஜான் இதேபோன்று கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் ஏமாற்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. தர்வேஷ் தனது வங்கிக்கணக்கை கொடுத்து உதவி செய்துள்ளார்.
- கேரம் போட்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.
- போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாணவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்களுக்கான ஒற்றையர் கேரம் போட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூர் லட்சுமிநகர் குலாலர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்குகிறார். போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் பங்கேற்கிறார்கள். முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
- மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி ரெயில் நாளை மயிலாடுதுறை-திருச்சிக்கு இடையே 50 நிமிடம் தாமதமாக செல்லும்.
- இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பாலக்காடு-திருச்சி ரெயில் நாளை (சனிக்கிழமை) திருச்சி கோட்டை முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி கோட்டையில் இருந்து இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை திருச்சியில் இருந்து திருச்சி கோட்டை வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சி கோட்டை முதல் பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும். மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி ரெயில் நாளை மயிலாடுதுறை-திருச்சிக்கு இடையே 50 நிமிடம் தாமதமாக செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்
திருப்பூர்:
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பணம், 1 பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுவார்கள். 2023-ம் ஆண்டுக்கான விருது பெறவிண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன்காரணமான சாதனைகள், தங்களது சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றுடன் கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.
- எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வெள்ளகோவில்.
வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த ஆர்.மோகன் குமார் ஈரோடு மாவட்டம், பவானிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு காங்கயம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்திற்கு இடம் மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெள்ளகோவில் புதிய ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகராட்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
ஊத்துக்குளி:
சேலம் மாவட்டம் சீலை நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூர் மங்களம் ரோடு குளத்துப்புதூரில் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகரம்,கோவை உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெட்டிக்கடை என்ற கிராமத்தைச் சேர்ந்த விஷ்வராஜ் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் கைரேகை பிரிவு நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த ரேகையை பதிவு செய்தபோது அது தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கண்ணன் ரேகையுடன் ஒத்துப்போனதை கண்டறிந்து அவரை கைது செய்து திருடிய நகையை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஊத்துக்குளி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த ஊத்துக்குளி நீதிபதி, கண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






