என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.

    இதே போல பல்லடம் பொன்காளியம்மமன் கோவில், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் காலபைரவர் கோவில், சித்தம்பலம் நவகிரகக்கோட்டை சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    • சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
    • தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.

    பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-

    மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

    • வீட்டில் பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து வீதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள், பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். இந்தநிலையில் அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை. நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.

    வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து விசைத்தறி கூடங்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் விசைத்தறியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் சென்னையில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பூபதி, தெக்கலூர் பொன்னுச்சாமி, கதிர்வேல் மற்றும் மருத்துவர் கோகுல், அவிநாசி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.

    • புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.
    • அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. 9 நாடுகளை சோ்ந்த 11 மொழிகளில் 30 திரைப்படங்கள் திரையிட்டதில், தமுஎகச., திரைப்பள்ளியில் பயிற்சி பெற்ற அவிநாசி கிளை இளைஞா்கள் பகத்சிங், ரமேஷ்கவின் ஆகிய இருவா் பங்கேற்று, 'ஜன்னல்' என்ற குறும்படமும், 'லவ்வீஸ் லவ்' ஆகிய குறும்படமும் இயக்கி வெளியிட்டனா்.

    இவா்களுக்கு தமுஎகச., மாநில பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, மாநிலக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திரைப்பள்ளி நிா்வாகிகள் அருள்மணி, சிவக்குமாா், களபிரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினா். அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    • மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.எஸ்.எஸ் ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா.இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற குழந்தைகள் உள்ளனர்.மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இந்தநிலையில் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு முதலுதவிக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் மல்லிகா மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார்.அதை மறுத்த மல்லிகா தனது கணவர் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறினார்.இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டாஸ்மாக் கடை எதிரே நகர கூட்டுறவு வங்கி , மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன.
    • குடியிருப்பு வாசிகள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. குடிமகன்கள் தள்ளாடி வருவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை தளி ரோடு அருகே உள்ள பசுபதி வீதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. தளி ரோட்டில் பிரதான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட லேஅவுட்களுக்கும் இந்த வழியாகத்தான் மக்கள் செல்கின்றனர்.

    டாஸ்மாக் கடை எதிரே நகர கூட்டுறவு வங்கி , மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன. டாஸ்மாக் கடையில் எப்பொழுதும் கூட்டம் காணப்படுகிறது. மது வாங்குவதற்கு சாலையை பாதி ஆக்கிரமித்தவாறு குடிமகன்கள் நின்று விடுகின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

    குடிமகன்கள் தள்ளாடி வருவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் இருந்த ஒரு மதுக்கடை மூடப்பட்டு விட்டதால் இந்த மதுக்கடையில் எப்பொழுதும் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடத்தியுள்ளனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறாக இருக்கும் இந்த கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாதிக்கப்பட்டவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் முத்துக்குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மேஸ்திரியாக உள்ளார் .அவரிடம் பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்பதால் அங்கு பணி புரியும் சுஜித் குமார், ராஜேந்திர யாதவ், புசன் குமார் ஆகிய 3 பேர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடத்தை நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த 3 வாலிபர்கள் அவர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ .3 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    மொழி தெரியாததால் தவித்த அவர்கள் மீண்டும் வேலை செய்யும் கட்டிடத்திற்கு திரும்பிச் சென்று விட்டனர். இது குறித்து அவர்கள் மேஸ்திரி விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று பல்லடம் - மாணிக்காபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பீகார் வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரது மகன் அருண் குமார் (வயது 23) ,பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் ரமேஷ் குமார் ( 32) அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் பார்த்திபன் ( 25) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் வக்கீல் பொன்ராஜ் , உடுமலைப்பேட்டை ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் பொருளாளர் வக்கீல் நசீர் உசேன் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் அனுசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூா் வட்டார முழுக்கூலி பாத்திர பட்டைறைதாரா்கள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் 15 வேலம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் துரைசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    பாத்திரத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறித் தொழிலைப்போல பாத்திரத் தொழிலுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

    பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாத்திரத் தொழிலை சிறு,குறு தொழிலாக கருதி சலுகைகள் வழங்க வேண்டும். பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆறுமுகத்தானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருப்பூர்:

    ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆறுமுகத்தானுக்கு பன்னீர், தேன், திணை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.

    • 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
    • கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல் தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

    ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம் பெறும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் வீதம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    நடப்பாண்டுக்கான தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    ×