என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 406 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையர்(கலால்) ராம்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின்அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிக்கையாளா்களான பொது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது
    • வாடிக்கையாளர்களை தக்க வைக்க அரசு கேபிள் டி.வி.யின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றனா்

    தாராபுரம் : 

    மாதம் 70 ரூபாய்க்கு கேபிள் டிவி.,. இணைப்பை வழங்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி., நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தரமற்ற சேனல்கள் மற்றும் சிக்னல் பிரச்னைகளால் ஏராளமான ஆபரேட்டா்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி காா்ப்பரேஷனில் இருந்து விலகி, தனியாா் கேபிள் சேவைகளுக்கு மாறி வருகின்றனா்.

    இதனால் பொதுமக்கள் மீண்டும் அதிக கட்டணம் செலுத்தி கேபிள் சேவையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். டாக் டிவி., மூலம் ரூ.180க்கு பெறப்பட்டு வந்த கேபிள் சேவைக்கு தற்போது ரூ.280 முதல் ரூ.300 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூரை சோ்ந்த கேபிள் ஆபரேட்டா்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக அரசு கேபிள் டிவி., இணைப்புகளில் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சிறப்பான சேவையை அளிக்க முடிவதில்லை. இது வாடிக்கையாளா்களான பொது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

    இதுபோன்ற பிரச்சினைகளை நாள்தோறும் சந்தித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் புகாா் அளித்தால் விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று கூறுவாா்கள். ஆனால், டிரான்ஸ்மிஷன் மறு இணைப்பு செய்யவே பல மணி நேரம் ஆகும். இதனால் 20 சதவீத வாடிக்கையாளா்கள் டிடிஎச்., மற்றும் தனியாா் சேவைகளுக்கு மாறிவிட்டனா்.

    நாங்கள் தொடா்ந்து டாக் டிவி., சேவையை நம்பியிருந்தால் எங்களுடைய மீதமுள்ள வாடிக்கை யாளா்களையும் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே எங்களைப்போன்ற பலரும் டாக் டிவி.,யில் இருந்து தனியாா் கேபிள் சேவைக்கு மாறி வருகிறோம். வாடிக்கையாளர்களை தக்க வைக்க அரசு கேபிள் டி.வி.யின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றனா்.

    இது குறித்து தமிழக கேபிள் ஆபரேட்டா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ் கூறியதாவது:-

    அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அரசு மூலம் ஹெச்டி செட் டாப் பாக்ஸ்கள் தரப்படுவதில்லை. இதனால் சாதாரண செட் டாப் பாக்ஸ்களே பல இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன.

    சிக்னல் பிரச்சினைகள் , தரமற்ற சேவை போன்றவற்றால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதனால், தற்போது டிடிஎச்., மற்றும் தனியாா் சேவைகளுக்கு பொதுமக்கள் மாறிவருகின்றனா். கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வாடிக்கையாளா்களை தக்கவைத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி தனியாா் கேபிள் சேவைகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாக் டிவி சேவையைவிட சிறப்பான சேவையை தனியாா் நிறுவனங்கள் அளிப்பதால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்களும் அதையே விரும்புகின்றனா் என்றாா்.

    அரசு கேபிள் டிவி சேவையில் இருந்து தனியாா் சேவைக்கு அண்மையில் மாறியுள்ள இல்லத்தரசி ஒருவர் கூறும்போது, எங்களது வீட்டில் டாக் டிவி., சேவையையே பயன்படுத்தி வந்தோம். ஆனால் அது பல நேரங்களில் செயல்படாமல் இருந்தது. இது தொடா்பாக புகாா் தெரிவித்து வந்தோம்.

    இந்நிலையில் அண்மையில் எங்களது கேபிள் ஆபரேட்டா் டாக் டிவி செட் டாப் பாக்சை மாற்றிவிட்டு தனியாா் செட் டாப் பாக்சை பொருத்தியிருக்கிறாா். இதுவரை கேபிள் கட்டணமாக சில விருப்ப சேனல்களுடன் சோ்த்து ரூ.210 செலுத்தி வந்தோம். தனியாா் செட் டாப் பாக்ஸுக்கு மாற்றியதில் இருந்து ரூ.280 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சேவையையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது தரமில்லாமல் உள்ளது. தற்போது தனியாா் சேவையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சேனல்களை பாா்க்க முடிகிறது என்றாா்.

    • முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆட்சிக்கு வந்து தனது திறமையான நிர்வாகத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்களில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து உணவுத்துறை அமைச்சரும், வேளாண்மை துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல தகவல் வரும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை அனைத்து மகளிருக்கும் வழங்குவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    நேற்று 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் மற்றும் முத்தூர் பகுதியில் வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தூர், ஊடையம் ரோட்டில் வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு வைத்து இருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் (49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மயில்சாமி காங்கேயம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவிநாசி வட்டாட்சியர் சுந்தரம் உடுமலை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .உடுமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கண்ணாமணி மடத்துக்குளம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.
    • பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சரவணன் (வயது 48). இவர் தொட்டம்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி வியாபாரம் செய்து வருகிறார். பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொட்டம்பட்டியில் உள்ள சரவணன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போட்டியில் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பாட்ட சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர்,சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து சுமார் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.

    சர்வதேச பாரம்பரிய சிலம்ப கலை சம்மேளன தலைவர் டாக்டர் மோகன் மற்றும் பார்க் கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் சிலம்ப போட்டியை தொடங்கி வைத்தனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சப்-ஜூனியர் பிரிவிலும், 11 முதல் 15 வயது வரை உள்ள மாணாக்கர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 40 வயது வரை உள்ளவர்களுக்கு சீனியர் பிரிவிலும் ஒற்றை கம்பு, சிலம்பம், இரட்டை கம்பு சிலம்பம், தனித்திறமை போட்டிகள் மற்றும் சுருள்வாள் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற நவம்பர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என சிலம்பாட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
    • பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார்.

    அவினாசி:

    அவினாசி ஊராட்சி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி காந்தி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.10.90 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடத்தை ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் முன்னிலையில் ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

    இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஊராட்சி தலைவர் மரகதமணி மணியன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பி.பாலாமணி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது.
    • வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகன கடன் முகாம் திருப்பூர் எஸ்.எம்.இ.,2 கிளை மற்றும் வெள்ளகோவில், தாராபுரம் கிளையில் நாளை 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

    வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது. வாகன கடன் 90 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. பிற வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாத தவணையில் மாற்றி கொள்ளலாம். வாகனக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ.,ரூ.1599 முதல், வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.

    குறைந்த பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விரைவான சேவையுடன் நிறைவான பயன் அடையலாம். பொதுமக்களின் கனவு இல்லம் நனவாக , புதிய மற்றும் பழைய வாகனங்கள் வாங்க இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.     

    • இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கேரள மக்கள் தினமும் உடுமலைக்கு வருகின்றனர்.

    தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. இதனால் பண்டிகைக்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக கேரள மக்கள் உடுமலையில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை வீதிகளில் கேரள மக்கள்-வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், மூணாறு செல்லும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக 9/6 செக்போஸ்ட் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்காக தனியார் ஜீப்புகளில் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இடுக்கி மாவட்டம் மூணாரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள ஓட்ட ல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை விருந்துக்காக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வெல்லம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்வதற்காக மாநில எல்லையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் உடுமலையில் குவிந்து, மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட கேரள மாநிலம் செல்வதற்காக குவிந்த பொது மக்களால் உடுமலை பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேரள வாழ் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.
    • கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.நேர்காணல் வருகிற 11ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.

    செவிலியர் பணியிடம் - 14 பேர் (சம்பளம் ரூ.14 ஆயிரம் ). தகுதி - பி.எஸ்சி., நர்சிங், அல்லது எ.என்.எம்., அல்லது டி.ஜி.என்.எம்., படிப்பு.

    லேப் டெக்னீஷியன் - 2 பேர். (சம்பளம் ரூ. 13 ஆயிரம் ). தகுதி - மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ. மருத்துவமனை பணியாளர் - ஒருவர். (சம்பளம் 8,500 ரூபாய்). தகுதி குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு 0421 224 0153 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×