என் மலர்
திருப்பூர்
- சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார்.
- செல்வகுமார் (வயது38) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் ஊர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் 3 கார்களில் வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (வயது29), அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது24) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்படுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பல்லடம் பனப்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்தவழியாக வந்த தலைமறைவாக இருந்த பல்லடம் அருகே உள்ள உகாயனூர் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் செல்வகுமார் (வயது38) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.
- ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் துரைப்பாண்டி. இவரது மகன் திருப்பதி, தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். இந்த நிலையில சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி விட்டதாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை காவல் சோதனைச் சாவடியில், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என்பதும் மேலும் அதே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்ததும் தெரிய வந்தது.
மேலும் போலீசாரது விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சபரிநாதன் (வயது 21), திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராபர்ட் பீட்டர் என்பவர் மகன் இம்மானுவேல் செல்வராஜ் (வயது 20) , அவிநாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் நவீன்குமார் (வயது25) என்பதும் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் சபரிநாதன் என்பவர் மீது, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ரொக்கம் ரூ.21,ஆயிரம் , வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
- வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பொன்னுசாமி, ரேசன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் மற்றும் குடும்பத்தார் வெளியில் சென்ற போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த ரொக்கம் ரூ.21,ஆயிரம் , வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதேபோல பொன்னுசாமி வீடு அருகே உள்ள வள்ளியம்மாள் (வயது 60) என்ற மூதாட்டி வீட்டிலிருந்த புதிய எல்.இ.டி. கலர் டிவி ஒன்றும் திருடப்பட்டது. இதுகுறித்து அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள கரடி வாவி சோதனை சாவடியில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 32), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முருகன் (வயது 37) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, கலர் டிவி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- செந்தில்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 43) . இவர் தனது தாயார் அங்காத்தாளுடன் வசித்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியே இருந்த அவர் விட்டத்தில் நைலான் கயிறு மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வெளியே சென்று இருந்த அவரது தாயார் வீடு திரும்பிய போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அங்காத்தாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
- செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். செயல்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.
வருகிற 17-ந்தேதி திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கருப்பராயன் கோவில் அருகிலிருந்து, விஸ்வகர்மா ஜெயந்தி - தேசிய தொழிலாளர் தின விழா பேரணி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 15 வேலம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். பொதுக்கூட்டம் குறித்து தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சூரிய ஒளி மின் தகடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
- சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூரிய மின் ஒளி தகடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே வடுகபாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன வடுகபாளையம், நாசுவம்பாளையம், அறிவொளி புதூர், ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களில் சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரித்து அதன் முலம் மோட்டார்கள் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் சூரிய ஒளி மின் தகடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்தநிலையில் பயன்படுத்தப்படாமல் கிடந்த சூரிய ஒளி மின் தகடுகளை கடந்த சிலநாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஒவ்வொரு தகடுகளாக திருடி சென்றுள்ளனர். இதுவரை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சூரிய மின் ஒளி தகடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூரிய ஒளி மின் தகடுகள் திருட்டு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. சூரிய ஒளி மின் தகடுகள் திருடபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.
காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலும் நடைபெற்றது.
பல்லடம்:
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ததை சரி பார்க்கும் பணி குறித்து பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். மேலும் வீடு வீடாக சென்று விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரிபார்த்தார்.
அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.மாவட்டத்தில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.1135 ரேசன் கடைகள் உள்ள நிலையில் 1113 விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24 ந்தேதி முதல் ஆகஸ்ட் 4 ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலும் நடைபெற்றது. தற்போது விண்ணப்பித்தவர்களின் உரிய பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில வாலிபால் தேர்வு அணிக்கான போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா ஜெய்வாபாய் பள்ளி மைதானத்தில் நடந்தது.
- திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் தேர்வாகினர்.
திருப்பூர் :
இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் மாநில வாலிபால் தேர்வு அணிக்கான போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா ஜெய்வாபாய் பள்ளி மைதானத்தில் நடந்தது.ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மாணவர் பிரிவில் 330 பேரும், மாணவிகள் பிரிவில் 168 பேரும் பங்கேற்றனர்.
மாணவர் பிரிவில் 14, 17, 19 வயது பிரிவில் தலா 7 பேர் வீதம் 21 வீரர்களும், மாணவிகள் பிரிவில் தலா 7 பேர் வீதம் 21 வீராங்கனைகள் என 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் தேர்வாகினர்.
மாணவர் 14 வயதில் திருப்பூரை சேர்ந்த திவாகர், தனுர்சஞ்சீவி, யஸ்வந்த், நவீன், கோவை பிரகதம், பிரகுணா, ஈரோடு ஸ்ரீகலையரசு, 17 வயது பிரிவில் திருப்பூர் - ஸ்ரீ விஷ்ணு, ஈரோடு - சிவனேஷ், நிஷாந்த், பரத்குமார், கோவை - சின்னண்ணன், தரனேஷ், பிராஜித். 19 வயது பிரிவில் கஜேந்திரன், சஞ்சய், லிட்டில்ராஜ், விஷால்ஜேபா, சுயம்பு சஞ்சய், தனுதரன் (கோவை), திருப்பூர் - இசைவாணன்.மாணவிகள் 14 வயது பிரிவில் சாருநேத்ரா, ேஹமா ஸ்ரீ (திருப்பூர்), ராகஸ்ரீ, காசினி, ரிதன்யா, அங்கையற்கண்ணி (ஈரோடு), அனுஸ்ரீ (கோவை).
17 வயது பிரிவில் மதுமிதா, ரஞ்சிதா, தேசிகா, ஐஸ்வர்யா, யாழினி, கனிஷ்கா (ஈரோடு), பிரீத்தி (கோவை), 19 வயது பிரிவில் கோவை சரோஜினி, ஈரோடு ஸ்வேதா, அபி, அமிர்தா, கனிகா ஸ்ரீ, தான்யா, துளசி.
- வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
- தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
திருப்பூர்:
இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 18-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்துக்கள் அனைவரும் சாதிகளை மறந்து ஒற்றுமையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.
இந்த ஆண்டு பா.ஜ.க. கட்சி விநாயகரை வைத்து வழிபடுவதற்கு திட்டமிட்டுள்ளதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. தமிழக அரசு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
- கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினர். இதற்காக பள்ளியின் இடத்தை ஈடாக கொடுத்து இருந்தனர்.
இந்தநிலையில் நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை செலுத்தாததால் பள்ளி இடத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு அமீனா தாராபுரம் வந்து பள்ளியை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.
இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறிய உடல் அமைப்பை கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுள்ளவை
- ஏக்கருக்கு 25 என்ற அளவிலும் ஒட்டுப்பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன
உடுமலை :
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.இதை கட்டுப்படுத்த, வண்ண ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தலாம். எந்த வண்ண ஒட்டுப்பொறி எதற்கு பயன்படுத்தப்படுகிறது என கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ், விதைச்சான்று அலுவலர் நந்தினி விளக்கம் அளித்தனர்.
கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது:-
காற்றினால் எளிதில் அடித்துச் செல்லப்படும் சிறிய உடல் அமைப்பை கொண்ட பூச்சிகள் பலவித வண்ணங்களால் கவரப்படும் குணமுள்ளவை. வண்ண அட்டைகளில் ஒட்டும் பசை (ஆமணக்கு எண்ணெய், வாசலின் கிரீஸ்) தடவப்பட்டு பூச்சி கட்டுப்பாட்டுக்காகவும், பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பூச்சிகளை கண்காணிக்க ஏக்கருக்கு 25 என்ற அளவிலும் ஒட்டுப்பொறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒட்டுப்பொறிகள் அடிப்பாகம், பயிர்களின் நுணி பாகத்தில் பொருத்துமாறு வயல்களில் பொருத்த வேண்டும்.மஞ்சள் நிற பொறியில் வெள்ளை ஈ, அசுவினி, இலைபேன், சுருள் பூச்சிகளும், நீலநிற பொறியில் இலைப்பேன், முட்டைகோசு ஈ, பருத்திக்காய் கூண்டு வண்டு பூச்சிகள் கவரப்படுகின்றன.
ஊதா நிற பொறியில் இலைப்பேன், பூ பேன், வெள்ளை நிற பொறியில் இலைப்பேன், ஆரஞ்சு நிற பொறியில் தத்துப்பூச்சிகளும் கவரப்படுகின்றன.வண்ண ஒட்டுப்பொறிகளை 10 நாட்களுக்கு ஒரு முறை கண்காணித்து தேவைப்படும் ஒட்டும் திரவத்தினை மீண்டும் தடவ வேண்டும். சிறிய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் காலி டப்பா, பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் தார்பாலின்களை தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு ஒட்டும் திரவம் தடவி, ஒட்டு பொறியாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






