என் மலர்
திருப்பூர்
- விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது.
- விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது. விண்ணப்ப பதிவு முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பல்லடம் வட்டம் கள்ளக்கிணர் பகுதி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூளவாடி ஊராட்சி வார்டு எண்-1 பகுதியில் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதன்நகர், மைவாடி ஊராட்சி, ராஜாவூர் கள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.
இந்த ஆய்வின் போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டனர்.
அந்த காரில் வந்த சூலூர் வதம்பச்சேரி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி மதுபான பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
ஊத்துக்குளி:
குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கொமரசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதிமணி சோமசுந்தரம், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் இடமானது குன்னத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
அந்த நிலத்தில் ஊத்துக்குளி சாலையையொட்டி மேற்புறம் 4 மீட்டர் அகலத்திலும், கோவிலில் வடபுறம் பெருமாநல்லூர் சாலையை ஒட்டி 4 மீட்டர் அகலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும்
காங்கயம் :
பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடி கால்வாய் வழியாக கடந்த 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கடைமடை பகுதியான மங்களப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சூர் கிராம ஊராட்சி பகுதியை சென்றடைய 9 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு பாசன பிரதான கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், கடைமடை விவசாயிகள் மங்களப்பட்டி கிராமத்திற்கு வந்து சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் தண்ணீரில் மலர் தூவி வணங்கினர்.
இதுபற்றி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பவானிசாகர் அணை கட்டப்பட்ட கடந்த 66 ஆண்டுகளில் கீழ் பவானி பாசன கால்வாய் தூர்வாரப்படாமல் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி திருப்பூர், ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் ஒருங்கிணைந்து கீழ்பவானி பாசன கால்வாயை தூர்வாரி இருந்தனர்.
கீழ்பவானி பாசன கால்வாயில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காலநிலை கோடை வெயில் காரணமாக குறைந்து இருந்த கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளின் நீர்மட்டம் விரைவில் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். எனவே பவானிசாகர் அணையில் இருந்து நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழ்நாடு அரசுக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.
பல்லடம்:
பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் உட்கோட்ட காவல்துறையில் பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 5 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகரம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் ஆறுமுத்தாம் பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம், ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மேலும் இங்கு பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் அமைந்துள்ளதால் வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் பல்லடம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு தாமதமாகிறது.
இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் சுமார் 10க்கும் குறையாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் போலீசாருக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. பணிச்சுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அருள்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
திருப்பூர் :
திருப்பூர், செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கழிப்பறையில் மின் வயல் உரசி, மாணவி ஒருவருக்கு கழுத்து, கையில் எலும்பு முறிவு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள், வயர்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்து, பராமரிப்பு மேற்கொள்ள, மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பகுதி வாரியாக அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்பு முழுமையாக சோதனை செய்து, வெளிப்பகுதியில் எங்கும் மின்சார வயர்கள் இல்லாத வகையில், பி.வி.சி., குழாய் பொருத்தப்படும். முழுமையாக அவற்றை சரி செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது.
- மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு இணையாக திருப்பூர் மாநகராட்சிக்கும், திருப்பூர் மாநகராட்சியை விட அதிகமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு வரி விதிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆட்சி நடக்கிறது. மின் கட்டண உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் அதனை மீட்டெடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சி வரும் போதெல்லாம் தொழில்துறையினர் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாடு மக்கள் எழுச்சி மாநாடாக அமைந்தது. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி நினைத்தால் மட்டும்தான் அதுபோன்று இன்னொரு மாநாட்டை நடத்த முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது தான் இந்தியாவிற்கு பாதுகாப்பு . எம்ஜிஆர்., அறிமுகப்படுத்தி கொண்டு வரப்பட்ட சத்துணவு திட்டத்தில் எம்ஜிஆரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் தி.மு.க. வேறொரு பெயரினை வைத்து மறைத்து வருகிறது. இதே நிலை தொடருமானால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் .
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டிலிங்கம், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், பி.கே. முத்து, திலகர் நகர் சுப்பு, மற்றும் ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது
- 26ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
கடந்த 14-ந்தேதி முதல் 22ந்தேதி வரை அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. முதல்கட்டமாக கடந்த 26ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. முதுகலை படிப்பில் இணையும் மாணவர் வசதிக்காக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் வருகிற 1-ந்தேதி வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் விபரங்களை www.tngasa.in என்ற இணையதளம் மற்றும் 93634 62070 என்ற மொபைல்போன் எண் வாயிலாக அறியலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
- அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கோபுரத்துக்கு வர்ணம் தீட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இக்கோவிலில் மார்ச் 13-ந்தேதி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் ராஜகோபுரத்துக்கு, கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடந்தன. அதன்பின் கோபுரத்துக்கு வர்ணம் தீட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.
தற்போது வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் சுதை சிற்பங்கள் மராமத்து பணிகள் முழுமை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, ஏழு நிலை ராஜகோபுரத்துக்கு, வர்ணம் தீட்டும் பணிகளும், சுதை சிற்பங்களை மராமத்து செய்யும் பணிகளும் துவங்கியுள்ளன.இதுதவிர கோவில் உள்பிரகாரத்தில் உள்ள பரிவார சன்னதிகளின் விமானங்களுக்கு மராமத்து பணிகள் முடிந்து வர்ணம் தீட்டும் பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் கும்பாபிஷேகத்துக்கான தேதி அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.
- தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குண்டடம் :
தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி குண்டடத்தை அடுத்த குங்குமம் பாளையத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏர்முனை இளைஞர் அணி அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தீரன் பிரகாஷ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜோதி பிரகாஷ், நந்தவனம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, வட்டார தலைவர் மயில்சாமி, பொருளாளர் முருகேஷ் உள்பட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தேங்காயின் அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும். ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சிதறு தேங்காய்களை உடைத்தனர். இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
- மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கோர்ட்டு வக்கீல்கள் அருணாசலம், திங்களவள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரியாஷ்கான் ஆகியோர், பெண் குழந்தைகள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் குறித்தும், மூன்றாம் பாலினத்தவரை சமுதாயத்தில் வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி னார்கள். முடிவில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நந்தகோபால் நன்றி கூறினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
- வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
பல்லடம் :
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு நிறுவன தலைவரும், முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் கடைவீதி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரது நினைவை போற்றும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. பழனிவேல், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்ததனர்.
காங்கிரஸ் மகளிர் அணி சுந்தரி முருகேசன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் நரேஷ் குமார், வர்த்தகப்பிரிவு பல்லடம் நகரத்தலைவர் சுரேஷ், பொங்கலூர் வட்டாரத்தலைவர் ராமச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது மற்றும் அர்ஜுனன், கனகராஜ், சுரேஷ்குமார், பொங்கலூர் ராமு, சுரேஷ், பிரதீப், ராஜா, தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






