என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக ௩ காட்சிகள் நடைபெறுகிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டியில் அப்போலோ சர்க்கஸ் நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சர்க்கஸ் முதல் நாளிலே மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். இந்தியாவிலேயே மிகவும் பழமையானது அப்போலோ சர்க்கஸ். பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி உலக புகழ் பெற்றது. அந்தரத்தில் ஸ்கை டைவ் நிகழ்ச்சி, கலைஞர்களின் அணிவகுப்பு, 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இடையிடையே கோமாளிகளின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.

    இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி குறித்து சர்க்கஸ் மேலாளர் பிரதீப் குமார் கூறியதாவது:- திருப்பூர் பி.என்.ரோடு பூலுபட்டியில் அப்போலோ சர்க்கஸ் தொடங்கப்பட்டுள்ளது . பல மாநிலங்களை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.

    அந்தரத்தில் பார் விளையாட்டு, மரணம் கூண்டில் 3 பேர் பைக் சவாரி, கத்தி மேல் படுத்து சாகசம், நாவல் பல்டி , சீன கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற 12-க்கும் மேற்பட்ட மணிப்பூர் கலைஞர்களின் சேர் அக்ரோபேட், ஸ்டிக் ஜக்விங், ரோப் பேலன்ஸ், ஸ்பிரிங் நட் சாகசம் உள்பட 25 வகையான சாகச நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.

    குழந்தைகளை மகிழ்விக்க கோமாளிகளின் தொகுப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தினமும் 3 காட்சிகளாக நடைபெறுகிறது. மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக நடைபெறுகிறது. டிக்கெட் கட்டணமாக முதல் வகுப்பு 200, இரண்டாம் வகுப்பு 150, மூன்றாம் வகுப்பு 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 96776 62229, 9790493242 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளகோவில் போலீசார் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மது குடிக்க பணம் கேட்டபோது கண்ணன் என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், உப்புபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கண்ணன் (வயது 41) .தோட்டத்து தொழிலாளியான இவர், சம்பவத்தன்று காலை திருச்சி- கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகில் இருந்தபோது, அப்போது அங்கு வந்த சிவநாதபுரத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் கார்த்தி (54) என்பவர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டதாகவும், அப்போது கண்ணன் என்னிடம் பணம் இல்லை எனக் கூறியதாகவும், இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த கண்ணன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
    • பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும்

    திருப்பூர்:

    திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஏர்கண்டிசனர், ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் மற்றும் பராமரித்தால் தொடர்பான பயிற்சிகள் 30 நாட்கள் வழங்கபட உள்ளது.

    பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி காலை. 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை- மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும்.

    தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழிர்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். பயற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை வங்கிக்கு கொண்டு வர வேண்டும்.

    பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் ஸ்கீல் இந்தியா என்ற சான்றிதழ் வழங்கப்படும். திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 2 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும், ரூ.30.14 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்ட பணிகள் குறித்தும், ரூ.177.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுது போக்கு வசதிகள் செய்யும் பணிகள் குறித்தும், 54.36 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கப்பணிகள் குறித்தும், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மேம்படுத்துதல் பணிகள் குறித்து என மொத்தம் ரூ.299.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
    • பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிபாளையம் சின்னச்சாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் பண பரிவர்த்தனை மையம் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2-ந்தேதி தனது மையத்தை பூட்டிவிட்டு, மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அங்கேரிபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவரை கட்டையால் தலையில் அடித்துவிட்டு அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியது.

    இதனை சற்றும் எதிர்பாராத சிவராஜ் திருடன் திருடன் என கத்தினார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர். இது தொடர்பாக சிவராஜ் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பணப்பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    • விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது.
    • இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருந்தவா் முருகன் (வயது 48). இவரிடம் விக்னேஷ் (31), அசோக்குமாா் (28) ஆகியோா் ஓட்டுநா்களாகப் பணியாற்றி வந்தனா். முருகனின் நண்பா் காட்டுராஜா (29). விக்னேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் முருகனிடம் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அவரை முருகன் பணியை விட்டு நீக்கியுள்ளாா். இதனிடையே, முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபா் 17 ந் தேதி இருந்துள்ளனா்.

    அப்போது அங்கு வந்த விக்னேஷ் முருகனிடம் பணமும், வேலையும் கேட்டுள்ளாா்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகன் உள்பட 3 பேரும் சோ்ந்து விக்னேஷை கீழே தள்ளி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

    இந்த வழக்கு திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

    இதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், அசோக்குமாா், காட்டுராஜா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா். 

    • ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
    • கல்லூரி நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை என மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இடநெருக்கடியால் கல்லூரி காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால் மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

    இதனிடையே, கல்லூரியில் ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கடந்த ஆகஸ்ட் 14 ந்தேதி திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை கல்லூரி செயல்படும் என முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.

    • குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
    • இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலையத்துக்குட்பட்ட சுபாஷ் பள்ளி சாலை பகுதியில் சிபிகாா்த்திக் என்பவரை 2 மா்ம நபா்கள் கடந்த ஜூலை 31 ந் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா்.

    இது தொடா்பாக இடுவம்பாளையத்தைச் சோ்ந்த என்.அசோக்குமாா் (19), பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்த எஸ்.மோகன்குமாா் (21) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    இந்த இருவரும் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

    இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா் .

    • நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
    • பல பொதுவான சுகாதாரப் பிரச்னைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்க முடியும் என்றாா்.

    திருப்பூர்:

    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் ஆகியவை சாா்பில் 'உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் - ஊட்டச்சத்தை வாங்குங்கள்' என்ற மைய கருத்தை வழியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

    கண்காட்சியைத் தொடங்கிவைத்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது: ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதில் அதன் பங்கு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பா் முதல்வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓா் உணவாகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம், கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும். பல பொதுவான சுகாதாரப் பிரச்னைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்க முடியும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் படங்களை வரைந்து மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்ததுடன், இயற்கையான காய்கறிகள், கீரைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் காந்திமதி, அங்கன்வாடி பணியாளா் ஹேமலதா, கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • தண்ணீர் வசதி செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகிறார்.

    அதற்காக தொட்டியபாளையத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கூட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை வரவேற்பது, கூட்டத்துக்கான மேடை அமைப்பது, இருக்கை வசதி செய்வது, பந்தல் அமைப்பது, வாகன நிறுத்தம் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி் செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தன் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், காங்கயம், வெள்ளகோவில் நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்த காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தனுக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்
    • 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

     திருப்பூர் : 

    தொழிலாளர் ஆணையர்(சென்னை) அதுல்ஆனந்த் அறிவுரைப்படி, மாவட்ட ெதாழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட தடுப்பு படையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றும் நோக்கில் மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒரு கடையில் ஒரு குழந்தை தொழிலாளியும், இறைச்சி மற்றும் மருந்து கடைகளில் தலா ஒரு வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமா்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
    • மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல், எந்த நேரமும் விழும் அபாய நிலையில் இருந்தது.அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன.

    இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே மின் கம்பம் சாய்ந்து விடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகள் நேற்று அந்த அபாயம் மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர்.

    மேலும் மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது. அபாயம் மின் கம்பத்தை மாற்ற பொதுமக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×