என் மலர்
திருப்பூர்
- முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது
- கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
பல்லடம் :
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், கே.பி.பரமசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், முன்னாள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு பேச்சாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்தகூட்டத்தில்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம்,அரி கோபால், புத்தரச்சல் பாபு, மற்றும் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜ், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
- திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
- 20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது
திருப்பூா்
திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
- இந்த அரசு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது என்றாா்
திருப்பூர் :
திருப்பூா் ராமமூா்த்தி நகரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்று கோலப்போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்ளிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு விநாயகா் சதுா்த்தியைப் புறக்கணிக்கிறது. அதிமுக., பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறாா்கள். அவா்களுக்கு இந்து முன்னணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் சாலைக்கு வந்து சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்பதற்காக விநாயகா் சதுா்த்தியானது பாலகங்காதர திலகரால் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் இந்து விழிப்புணா்வுக்காக ஒன்றரை லட்சம் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த அரசு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது என்றாா்.
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்
- கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
- கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
பல்லடம்:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. கள் தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. அது ஒரு உணவு. அதை இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு. கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவரை யாரும் முன் வரவில்லை. கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
தமிழ்நாட்டில் கள்ளுகடை திறக்கச் சொல்லவில்லை. எங்களுக்கு கள்ளுக்கான தடையும் வேண்டாம் கள்ளுகடையும் வேண்டாம். இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி 21ந்தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.காவிரி பிரச்சனையை பொறுத்த வரையில் கர்நாடகா மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றது. தமிழகத்தின் பங்கீட்டு தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
- 5 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருப்பூர் :
விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனை, இந்து முன்னேற்றக் கழகம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பூா் மாநகா் மட்டுமின்றி அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், வெள்ளக்கோவில், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருப்பூா் மாநகரில் இந்து முன்னணி சாா்பில் 1,000 சிலைகளும் மற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 500 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதே போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3,500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபுநபு தலைமையில் 2 உதவி ஆணையா்கள், 6 துணை ஆணையா்கள் தலைமையில் 900 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் தலைமையில் 5 டிஎஸ்பி.,க்கள் தலைமையில் 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை சாா்பில் வாகனச்சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
- செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.
தாராபுரம்:
திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தாராபுரம் நகர கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் அமமுக., துணைச் செயலாளரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பி. நல்லசாமி, அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம். ஆர்.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட அமமுக., செயலாளர் கே.பி. நல்லசாமி பேசுகையில்;- அதிமுக., முன்னாள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை துரோகம் செய்ததால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர் பதவியை பறித்தார் என்றார்.
- ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலை:
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்தில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செழியன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய வாளவாடி தேவராஜ், இராகல்பாவி சுமதி செழியன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், விமலா, ராசாத்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் மருந்து அடிக்கப்பட உள்ளது.
- வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. பனியன் தொழிலாளர்கள் அதிக அளவு வசித்து வருவதால், மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாக மாநகராட்சி பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கவும், கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல் தண்ணீர் தொட்டிகளில் அபாட் மருந்தும் தெளித்து வருகிறார்கள்.
மேலும் சிரட்டை, டயர்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்கள். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வார்டுக்கு 5 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் என 300 பேர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மருந்துகள் தெளித்து வருகிறார்கள்.
மேலும் திருப்பூர் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அங்கு தனிமையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார்.
- எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும்.
பல்லடம்:
நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள் 100 என்கிற நிகழ்ச்சி பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது.
இதில் திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார். அப்போது அவர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்தார்.
இந்த திருக்குறள் கதைகளில் எம்.ஜி.ஆர், சத்யராஜ், சூர்யா மற்றும் சிவக்குமாரின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரது வாழ்வியல் சம்பவங்களை திருக்குறளுடன் குறிப்பிட்டு பேசினார்.
மனைவி பற்றி பேசும்போது, எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும். என் தாயார் இறந்த பின்பு இரண்டாவது தாயாக என்னை பேணிக்காக்கும் அவளது மடியில் தான் எனது உயிர் போக வேண்டும் என்று உள்ளம் உருக பேசினார்.
- 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
- 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.
திருப்பூர்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரியில் 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் 134 புள்ளிகளைப் பெற்று 5- வது இடத்தைப் பிடித்தது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.
பத்தகம் பெற்ற வீரா், வீராங்கனைகளை மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவருமான பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
- துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை மின்வினியோம் தடை செய்யப்படுகிறது.
திருப்பூர், செப்.19-
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் வஞ்சிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வலையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிபாளையம், 15வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்
மங்கலம்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.






