என் மலர்
திருப்பூர்
- நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
- இச்செய்தியை உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
உடுமலை:
உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமூர்த்தி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும் முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதாலும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
- உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
உடுமலை:
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18 ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி,இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கம், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மற்றும் பொதுமக்கள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை செய்தும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் வந்தனர்.
அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகளை அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு தொடங்கியது.
செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் கல்பனா சாலை,கச்சேரி வீதி,பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது. ஊர்வலத்தையொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலதை யொட்டி உடுமலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் பிரதிஷ்டை செய்த சிலைகளை தவிர மற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு நேற்றுடன் முடிவடைந்தது.
- பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
- 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.25.6 லட்சம் மதிப்பில் வெங்கிட்டாபுரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், மற்றும் நாசுவம்பாளையம் அருகே உள்ள சுகாதார வளாகம் கட்டுதல், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலக முன்பகுதி தரைத்தளத்திற்க்கு பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அமைக்கப்படும் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், அதிமுக., தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சுகாதார பிரிவும், டிபிசி பிரிவும் இணைந்து வீடு வீடாக மேற்கொண்டு வருகிறார்கள்.
- புழுக்கள் இருந்தால் அதை முழுமையாக அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
உடுமலை:
உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து உடுமலை நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி சுகாதார பிரிவும், டிபிசி பிரிவும் இணைந்து வீடு வீடாக மேற்கொண்டு வருகிறார்கள்.அப்போது மழைநீர் வடிகால்கள், வீதிகளில் உள்ள பள்ளங்கள்,உபயோகப்படுத்தாத குடிநீர் தொட்டி,வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,பிரிட்ஜ் பின்புறம் உள்ள தட்டு, பூந்தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரில் புழுக்கள் உருவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. புழுக்கள் இருந்தால் அதை முழுமையாக அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பணியாளரின் சுமையை எளிதாக்கும் விதமாகவும் நோய் பரவலை தடுக்கும் விதமாகவும் பொதுமக்களே முன்வந்து மேலே குறிப்பிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.வைரஸ் காய்ச்சலை உருவாக்கும் புழுக்கள் தூய்மையான நீரிலேயே உருவாகும் தன்மை உள்ளது என்பதால் சேமித்து வைக்கும் குடிநீரினை நன்றாக மூடி வைப்பதுடன் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மேலும் புழுக்கள் உருவாகி இருந்தால் உடனடியாக நகராட்சி சுகாதார பிரிவிலோ அல்லது நகரமன்ற உறுப்பினர் மூலமாக தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை தெளிப்பதற்கு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
- டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.
பல்லடம்:
கள் இறக்கும் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்து கொள்வோம். இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கள் இறக்குவது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறிய கருத்து தவறாக பரவியுள்ளது.அவர் அப்படி கூறவில்லை .இருந்த போதிலும் அந்த தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
மேலும் கள் இறக்க அனுமதி வேண்டும் என்று போராடி வருகிற விவசாய சங்க தலைவர்கள் மனதும் வேதனைப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். விவசாய சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட தவறான செய்தி காரணமாக அமைந்து விட்டபடியால், நடந்துவிட்ட தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் படுகின்ற கஷ்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.
தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமான பாமாயிலை தடை செய்ய வேண்டும், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். தமிழக முழுவதும் உள்ள தேங்காய்களை மத்திய அரசு நேபிட் மூலமாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியது.
மேலும் தமிழக அரசின் உணவுதுறை அமைச்சரை சந்தித்து ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவரும் கொள்கை அளவில் அதனை ஏற்று பரிட்சார்த்தமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வெளி சந்தையில் தேங்காய் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 200க்கு விற்கப்படுகிறது ரேசன் கடையில் என்ன விலைக்கு விநியோகிப்பீர்கள் என்று அவரை கேட்ட பொழுது, அரை லிட்டர் ரூ.25 க்கு விநியோகம் செய்யப்படும். மேற்கொண்டு அதிகப்படியான தொகையை அரசு மானியமாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தென்னை விவசாயின் கஷ்டம் நீக்கப்பட்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் உழவர் உழைப்பாளர் கட்சியின் நோக்கம்.
இதில் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேறுபாட்ைட உண்டாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.மேலும் 2024 ஜனவரி 21ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்து அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காக கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 அறிவித்தது.தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் வங்கிகளுக்கு சென்று பார்த்த போது பாதி பேருக்கு பதிவும் வரவில்லை, பணமும் வரவில்லை. இதனால் வங்கிகள் முன்பும், இ. சேவை மையங்கள் முன்பும் பெண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தேர்தல் அறிவிப்பில் கூறியதை போல் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், ஊடக பிரிவு செயலாளர் காடம்பாடி ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.
- ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர்.
பல்லடம்:
தமிழரின் இயற்கை சார்ந்த பண்பாடு உலகின் மிகச்சிறந்த பண்பாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது. தமிழர் திருமண நிகழ்வுகளில் மரம் வைத்து இயற்கை அன்னையை வழிபாடு செய்தல் கொங்குப் பகுதிகளில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.
முந்தைய காலங்களில் இல்லற வாழ்வில் இணையும் இணையர் மரங்களை நட்டு வழிபாடு செய்தல் வழக்கம். நாளடைவில் இந்த நிகழ்வு பெயரளவில் திருமண அரங்குகளில் மர குச்சிகளை வைத்து பூஜை செய்யும் நிகழ்வாக சுருங்கிவிட்டது. இந்த நிலையில் பல்லடம் அருகே புதுமணத் தம்பதிகள் திருமணத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு இயற்கை வழிபாடு செய்த சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் ராமசாமி. இவருக்கும் இவரது உறவினர் மனிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது திருமண விழா நிகழ்வாக கரடிவாவி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரக்கன்றுகளை வணங்கி இல்லற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் மரக்கன்று நட்டு இயற்கை வழிபாடு செய்ததை அங்குள்ள பெரியவர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.
பல்லடம்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டது. அப்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார். முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்திற்கு அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக்கொள்ளலாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று தாலுகா அலுவலகத்தில் மற்ற அலுவலகப்பணிகள் நிறுத்தப்பட்டு உரிமைத்தொகை சரிபார்க்கும் பணி மட்டுமே நடைபெற்றது.இதில் குடும்ப தலைவிகள் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கொடுத்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.
ஒரேநேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் மிகவும் தாமதமாக செயல்பட்டது.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது:- வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 செலுத்தியதும் வங்கி அந்த பணத்தை பிடித்துக்கொள்கிறது. அதுபோன்ற வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பாமல் இருக்கிறார்கள்.
அதுபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் இணைக்காதவர்களுக்கும் பணம் அனுப்பாமல் உள்ளது. இதுபோன்ற குறைகளை அறிந்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம். சர்வர் மெதுவாக இருப்பதால் விரைந்து சரிபார்க்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
- புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைகளில் போதுமான சுகாதார வளாக வசதி இல்லாததால் பணியாளர்கள் பெரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:-
பல்லடம் பகுதியில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் உள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றோம்.
அதிலும் பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே அனைத்து ரேசன் கடைகளிலும் சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும்.மேலும் பொதுவிநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.நியாய விலை கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும்.
ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் தரமானதாகவும், காலாவதி ஆகாத பொருட்களாக அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளில் இணையதள வசதியை மேம்படுத்தி சர்வர் பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது.
- 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பங்கேற்கிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக 40 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேடை அமைப்பு, இருக்கை வசதி, பந்தல் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி தொட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டம் நடக்கும் மைதானத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகி திலகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
- தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
தாராபுரம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அண்ணாமலை தொடங்கினார். பின்னர் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இன்று 21-ந்தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை 3-30 மணிக்கு அண்ணாமலை காங்கயம் வருகிறார். அவருக்கு காங்கயம் -திருப்பூா் ரோடு விடுதி பஸ் நிறுத்தத்தில் பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை காங்கயம் போலீஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசுகிறாா்.
பின்னர் தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார். வடதாரையில் தொடங்கி கடைவீதி வழியாக பொள்ளாச்சி சாலையில் அமராவதி ரவுண்டானா சென்று புதிய பஸ் நிலையம், உடுமலை சாலை, போலீஸ் நிலையம் சர்ச் கார்னர் வழியாக நடைபயணம் நடைபெறுகிறது. பின்னர் தாராபுரம் புதிய போலீஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்ற உள்ளார். நாளை 22-ந்தேதி மடத்துக்குளம்- உடுமலையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
- மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது
உடுமலை :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டது.அப்போது உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முகமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பொதுமக்கள் ஆதார்கார்டு,குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.முதல் நாளான நேற்று 150 விண்ணப்பதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகாமில் உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அரசு கல்லூரி மாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவி உமாதேவிக்கு, படிப்புக்கு தேவையான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில், அரசு கல்லூரி மாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கபடி கழக தலைவா் கொங்கு முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெயசித்ரா சண்முகம், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஆறுச்சாமி, செய்தித் தொடா்பாளா் சிவபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைன், பேஷன் டெக்னாலஜி பயிலும் திருப்பூா் கணபதிபாளையத்தைச் சோ்ந்த மாணவி உமாதேவிக்கு, படிப்புக்கு தேவையான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட நடுவா் குழு தலைவா் முத்துசாமி, மாவட்ட புரவலா் மகால ட்சுமி, ரத்தினசாமி, இணை ச்செயலாளா் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தேவராஜ், கௌரவ உறுப்பினா் பிரேமா மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.






