என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கயம்-தாராபுரத்தில் இன்று அண்ணாமலை நடைபயணம்
- முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
- தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
தாராபுரம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். முதல்கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அண்ணாமலை தொடங்கினார். பின்னர் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இன்று 21-ந்தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை 3-30 மணிக்கு அண்ணாமலை காங்கயம் வருகிறார். அவருக்கு காங்கயம் -திருப்பூா் ரோடு விடுதி பஸ் நிறுத்தத்தில் பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை காங்கயம் போலீஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசுகிறாா்.
பின்னர் தாராபுரம் வடதாரை பகுதியில் மாலை 5 மணிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார். வடதாரையில் தொடங்கி கடைவீதி வழியாக பொள்ளாச்சி சாலையில் அமராவதி ரவுண்டானா சென்று புதிய பஸ் நிலையம், உடுமலை சாலை, போலீஸ் நிலையம் சர்ச் கார்னர் வழியாக நடைபயணம் நடைபெறுகிறது. பின்னர் தாராபுரம் புதிய போலீஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்ற உள்ளார். நாளை 22-ந்தேதி மடத்துக்குளம்- உடுமலையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.






