என் மலர்
திருப்பூர்
- சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.
- கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் கோட்டம் நல்லூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி இது இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாத கணக்கீடு செய்யப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் சாணார்பாளையம் பகிர்மான பகுதிகளான காளிபாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபுரம்புதூர், எம்.ஜி.ஆர்.நகர், காங்கயம்பாளையம், சாணார்பாளையம் பகுதிகளில் மின் நுகர்வோர் இனி வரும் காலங்களில் ஜனவரி மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் நடைபெறுகிறது.
- கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திருப்பூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத்தலைவா் பழ.கௌதமன் கூறியதாவது: -அரசுப்பள்ளிகளில் 2012-ம் ஆண்டு முதல் மிக குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது தி.மு.க., தனது தோ்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தது.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஊதியம் வாங்கினோமோ அதையேதான் இப்போதும் வாங்கி கொண்டிருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு மே மாத சம்பளமும் வழங்கப்படுவதில்லை. கடந்த மே மாதம் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 2 ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் தருகிறோம் என்றும், பணிநிரந்தரம் செய்ய தாமதமாகும் பட்சத்தில் ஊதியத்தை உயா்த்தி அனைத்து வேலை நாட்களும் முழுநேர வேலை தருவதாகவும் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைத்தோம். ஆனால் அந்த வாக்குறுதிகள் கூட தற்போது வரை நிறைவேற்ற ப்படவில்லை.
எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் வருகிற 25-ந் தேதி முதல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம் என்றாா்.
- வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- இம்முகாமிற்கான 9622 (100 மில்லி) குப்பிகள் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் திருப்பூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 6 மாதங்கள் முதல் 5 வயது வரை உள்ள சுமாா் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் ஏ சத்து, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உடல், மன வளா்ச்சி, புத்திகூா்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமானதாகும். வைட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.
இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 9622 (100 மில்லி) குப்பிகள் பெறப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
- 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா்.இதில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான மனுக்கள் வழங்கவும், பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் சங்கத்துக்கு ஒருவா் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாகவும் வழங்கலாம். மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களை கொண்டு வேளாண் உதவி மையமும் இந்த குறைதீா்க்கும் கூட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடைபெறும்
- 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்
திருப்பூர்,செப்.23-
பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்க சைமா வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அச்சங்கத்தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பீக் ஹவா்ஸ் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயா்வை தவிா்க்க கோரி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் 25 -ந் தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று சைமா சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருநாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
- இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.
உடுமலை
உடுமலை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி .ஏ. பி. பாசன கால்வாய் கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த கோழி பண்ணை அமைந்துள்ளது.
இறந்த கோழிகளை நீர் நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.இருந்தாலும் விதிமுறைகள் முறையாக பின்பற்ற ப்படுவதில்லை.
எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
- பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.
உடுமலை
தாராபுரத்தில் உள்ள அமராவதி வடிநீர் கோட்ட நீர்நிலை பாசன செயற்பொறியாளரிடம் அமராவதி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அமராவதி அணை பிரதான கால்வாய் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.
எனவே அமராவதி அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு பிரதான கால்வாய் பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக 20 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது.
- பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
பல்லடம், செப்.22-
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளர் அனிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பொதுமக்கள் காலி செய்ய மறுத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வுக்குப்பின் பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.
மீறினால் கம்பி வேலி அமைத்து இடத்தை பாதுகாப்பதுடன் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
- நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது.
- 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும்.
திருப்பூர்:
திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றினார்கள்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரிடம் மான்களின் உடலை போலீசார் ஒப்படைத்தனர். ரெயிலில் அடிபட்டு இறந்தது 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும். இரை தேடி வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர்.
- துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது.
- மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் , படியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பேக்கேஜ் அன்ட் கோ ஜீவசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், சாம்சன் சிஎன்ஓ. இன்டஸ்ட்ரீஸ் மோகன்குமார், படியூர் ஊராட்சி துணை தலைவர் புவனேஸ்வரி வலுப்பூரான் , படியூர் கே.கே.கே.ஆயில்மில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
- பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
திருப்பூர்:
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக்கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 மற்றும் 503, 5 -வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடுமலை:
உடுமலை அன்னபூரணி லேஅவுட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அவல நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






