என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் பகுதி நேர ஆசிரியா்கள் அறிவிப்பு
- சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் நடைபெறுகிறது.
- கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திருப்பூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் சென்னையில் வருகிற 25-ந்தேதி காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத்தலைவா் பழ.கௌதமன் கூறியதாவது: -அரசுப்பள்ளிகளில் 2012-ம் ஆண்டு முதல் மிக குறைந்த ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது தி.மு.க., தனது தோ்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறியிருந்தது.
ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு என்ன ஊதியம் வாங்கினோமோ அதையேதான் இப்போதும் வாங்கி கொண்டிருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு மே மாத சம்பளமும் வழங்கப்படுவதில்லை. கடந்த மே மாதம் நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 2 ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் தருகிறோம் என்றும், பணிநிரந்தரம் செய்ய தாமதமாகும் பட்சத்தில் ஊதியத்தை உயா்த்தி அனைத்து வேலை நாட்களும் முழுநேர வேலை தருவதாகவும் உத்தரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைத்தோம். ஆனால் அந்த வாக்குறுதிகள் கூட தற்போது வரை நிறைவேற்ற ப்படவில்லை.
எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் வருகிற 25-ந் தேதி முதல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணா நோன்பு போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம் என்றாா்.






