என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • முகாமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம் துவக்கி வைத்தார்.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருப்பூர் தி ஐ பவுண்டேசன் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.இந்த முகாமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம் துவக்கி வைத்தார் .இந்த முகாமிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எபிசியண்ட் மணி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த முகாமில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் நகர தலைவர் பி.ஏ.சாதிக் அலி,இளைஞரணி மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சிராஜ்தீன், மங்கலம் நகர செயலாளர் முஹம்மது ரபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாவட்ட துணைச்செயலாளர் மலங்ஷா மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
    • 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக குலத்தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவா? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது:-

    இந்த ஆட்சியில் ரூ.1200 கோடி செலவில் காலை சிற்றுண்டி தரப்படுகிறது. முந்தைய ஆட்சிகளில் கோவில்களில் புளியோதரை, தயிர் சாதம் தான் தரப்பட்டது. இப்பொழுது தான் குழந்தைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள்.

    முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டர் என இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை. புதிய கல்வி கொள்கையினால் 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் வைக்கப்படுகிறது. இவ்வளவு தேர்வு எழுதி மீண்டும் க்யூட் தேர்வில் பாஸ் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நீட் மற்றும் கியூட்டை மியூட் செய்வதற்குத்தான் நாங்கள் உள்ளோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குலதொழில் கல்வி திட்டம் ஒழிந்த பின் விஞ்ஞானி ஆகியவர்கள். தாய் வீட்டு சீதனம் போல மாதம் ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அது உதவித்தொகை இல்லை. உரிமை தொகையாக வழங்கப்படுகிறது.

    மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தியாவை நாம் காப்பாற்றுகிறோம். அவர்கள் இந்தியா என்று கூறுவதற்கே பயப்படுகிறார்கள். இந்தியா என்கிற பெயர் அனைவரையும் இணைக்கிறது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி திரிசூலத்தை கையில் வைத்துள்ளார். ஒன்று வருமானவரித்துறை, மற்றொன்று சி.பி.ஐ., 3-வது அமலாக்கத்துறை. இது அனைத்தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்களிடம் அதானி, அம்பானி உள்ளார்கள். மக்கள் எங்களோடு உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தி.மு.க.,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார்.

    காங்கயம்:

    காங்கயம், உடையார் காலணி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வசிப்பவர் மல்லிகார்ஜூனன். இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை செயது வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 25). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மதியம் 2மணிக்கு மல்லிகார்ஜூனன் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது.
    • ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.

    எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத்தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

    நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.
    • பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     உடுமலை:

    உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் வெ.ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை. ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது.

     திருப்பூா்:

    திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளருமான செ.தாமோதரன் பேசியதாவது:-

    பாஜக., கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக., வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தோ்தலில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளோம்.

    தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக., நிா்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். லஞ்சம், ஊழலில் தலைசிறந்த மாநகராட்சியாக திருப்பூா் உள்ளது என்றாா்.

    • தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தென்னைக்கு தண்ணீர் அதிக அளவில் தேவை என்ற நிலையில் போதிய மழையில்லாததால் பல இடங்களில் தென்னை மரங்கள் கருகின. வெள்ளைப்பூச்சி தாக்குதலால் தென்னை இலைகள் பழுப்பு நிறத்திற்கு மாறின.வெள்ளைப்பூச்சி தாக்குதல் உள்ள தென்னை மரங்களில், தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வட கிழக்குப்பருவ மழை கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். சேதத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.வேளாண்துறையினர் கூறுகையில், கடந்த 10 மாதமாக போதிய மழை பெய்யவில்லை. குறைந்தளவு மழை தான் பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்திருந்தது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

    • காங்கயம்- வெள்ளகோவில் பகுதி பி.ஏ.பி. கிளை கால்வாய் பாசன சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
    • பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.

      திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு நீர்வளத் துறை பரம்பிக்குளம்-ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் காங்கயம்- வெள்ளகோவில் பகுதி பி.ஏ.பி. கிளை கால்வாய் பாசன சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் ஒரு சுற்று வீதம் 4.5 அடி தண்ணீர் மட்டுமே வழங்கி வரும் நீரை இரண்டு சுற்றுகள் வீதம் 4.7 அடி விகிதம் வழங்க வேண்டும். ஐந்து நாட்கள் பாசனத்தை ஏழு நாட்களாக வழங்கவும், பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.

    பி.ஏ.பி. பிரதான கால்வாயில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுத்து மதகு கதவுகளை சரி செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முத்தூ:

    முத்தூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சுத்தமான பலகாரங்களை விற்பனை செய்யாத கடைகள் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் தவறாமல் உணவு பாதுகாப்பு துறை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    காலாவதியாக உள்ள இனிப்பு, கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். நல்ல சுத்தமான உணவு பொருட்கள், சுத்தமான எண்ணெய் ஆகிவற்றை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் புதிதாக தயார் செய்யப்பட்ட பலகாரத்தை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே முத்தூர் நகர, கிராம பகுதி தீபாவளி பண்டிகை இனிப்பு காரம் தயார் செய்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் இனிப்புகள், காரங்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் ஆகியவற்றினை விற்பனை செய்ய வேண்டாம்.

    கெட்டுப்போன இனிப்பு கார வகைகள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    முத்தூர்:

    முத்தூர் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விதை விற்பனை நிலையங்கள் தங்கள் நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விதைகளின் விலை பட்டியல் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும்.

    உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் வடமாநில தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்தும் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்து, அவ்வாறு நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தது.

    அதன்படி கடந்த மாத விலையே தொடரும் எனவும் நடப்பு மாதத்திற்கு எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லை எனவும் நூற்பாலைகள் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நூல் விலையில் மாற்றமின்றி தொடர்வது தொழில்துறையினரிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பிச்சம்பாளையம் நொய்யல் ஆற்றுப்பாலம் அடியில் 35வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்தவர் ஆடையின்றி கிடந்ததால் மர்மநபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×