என் மலர்
திருப்பூர்
- தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார்
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமார், சுகாதார அலுவலர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்திய சுந்தர்ராஜ், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, வருவாய் ஆய்வாளர் நந்தினி பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அண்ணா நகர், கொசவம்பாளையம், கல்லம்பாளையம், சேடபாளையம், பி.டி.ஒ.காலனி, ராயர்பாளையம், பல்லடம் கிழக்கு, பல்லடம் மேற்கு ஆகிய 8 நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் ரூ.80 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் நலன் கருதி நவீன கழிப்பிடம் கட்டப்படவுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
- பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நலத்திட்ட பணிகளை திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூர் வக்கீல் குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகர மன்ற முன்னாள் தலைவர் பி.ஏ. சேகர், நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாச்சலமூர்த்தி, செயலாளர் சுரேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், துரைமுருகன், அன்பரசன், பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
- மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் அன்று தேங்காய் பருப்பும், வியாழன் அன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்:
தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு, கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் குமரத்துரை, வட்டாட்சியர் ஆலய நிலங்கள் ரவீந்திரன் மற்றும் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் மற்றும் சர்வேயர்கள் இணைந்து தூரம்பாடி கிராமத்தில் உள்ள குலமாணிக்க ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 168 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனுடைய தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
- பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார்.
- பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார். மாணவ- மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதி மொழியின் போது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்கிறேன், எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.
- இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்:
சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.
ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது.
இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.
- திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மெயின் ரோடு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 52). இவர் கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகே காஜா பட்டன் நிறுவனம் நடத்தி வந்தார். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு 11 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அருகே நிறுவனம் தொடர்பான வேலையை முடித்துக் கொண்டு டைமண்ட் தியேட்டர் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு வழிபாதையில் திரும்பிய டாரஸ் லாரி ஒன்று குமார் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதனைப் பார்த்த லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- றப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2, திருப்பூர் தெற்கு காவல் நிலையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆகியவை இணைந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
காவல் ஆய்வாளர் பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.லஞ்சம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். பெருகி வரும் ஊழலை தடுக்க 0421-2482816, 8300046708 என்ற எண்களுக்கு தகவல் தர வேண்டும், அவ்வாறு தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பேசினார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், தினேஷ் கண்ணன், செர்லின் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நடனமாடியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
- நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காங்கயம் நகர வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி வருவாய் அலுவலர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக 13 கடைகளுக்கு ரூ.3500 சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.
திருப்பூர்:
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.
இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.
இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.
இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.
- திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு குரைத்தோட்டம் பகுதியில் வீட்டு முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை, ஒரு கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (52), வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அதிவேகமாக புலன் விசாரணை முடித்து சாட்சிகள் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீதும் 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.






