என் மலர்
திருப்பூர்
- சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார்.
- வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.
கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தீபாவளி கொண்டாட்டத்தில் விதவிதமான பட்டாசு ரகங்களை வாங்கி வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
- மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக முதன்மை விஞ்ஞானி கல்யாணி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
திருப்பூர்:
தீபாவளி கொண்டாட்டத்தில் விதவிதமான பட்டாசு ரகங்களை வாங்கி வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கண்களுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி தந்தாலும்கூட அதிக அளவில் பட்டாசு ரகங்கள் வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது.
மாசுகட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, அனைத்து மாவட்டங்களிலும் காற்றுமாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்கிறது.
வரும் 12ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பின்னலாடை நகரான திருப்பூரில் வருகிற 5-ந் தேதி முதல் காற்றுமாசு ஆய்வு துவங்கப்பட உள்ளது. மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக முதன்மை விஞ்ஞானி கல்யாணி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
வருகிற 5-ந் தேதி காலை, 6 மணி முதல் முதல் 19 தேதி காலை 6 மணி வரை, தொடர்ந்து 15 நாட்கள் காற்று மாசு ஆய்வு செய்யப்பட உள்ளது. 5 ந் தேதி முதல் 11-ந் தேதி வரை, பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு,12ந் தேதி முதல் பண்டிகை கால காற்று மாசு ஆய்வு செய்யப்படுகிறது.
காற்று மாசு கணக்கிடுவதற்காக திருப்பூர் குமரன் வணிக வளாகம் மற்றும் ராயபுரத்தில் உள்ள மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அலுவலகத்தில், ஆம்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட் கருவி வைக்கப்படுகிறது.
காற்றில் கலந்துள்ள 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் (பி.எம்.,10), 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள் (பி.எம்.,2.5), சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை அக்சைடு அளவுகள் கணக்கிடப்பட உள்ளது. அதேபோல் வருகிற 6ந் தேதி பண்டிகைக்கு முந்தைய ஒலி மாசு, 12-ந் பண்டிகை நாள் ஒலிமாசு அளவிடப்படுகிறது.
இந்த ஆய்வு வாயிலாக திருப்பூரில் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு ரகங்கள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளனவா, முந்தைய ஆண்டைவிட இந்தாண்டு காற்று மாசு கட்டுப்பாட்டில் உள்ளதா ,எல்லை மீறியுள்ளதா போன்ற விவரங்கள் தெரியவரும்.
- திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கானுயிர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான, தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் சர்வதேச, தேசிய விருதுகள் பெற்ற சிறந்த சிறார் திரைப்படங்கள், மாதந்தோறும் திரையிடப்படுகின்றன. இம்மாதத்திற்கான திரைப்படமாக 2012ல் தமிழில் வெளியான, தி ஜங்கிள் கேங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, பதிவிறக்குவதற்கான லிங்க் பள்ளி எமிஸ் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான கருப்பு மான், வாத்து, தேவாங்கு ஆகியவை தங்கள் பயணத்தை வடகிழக்கு இந்தியாவில் இருந்து துவங்கி, மத்திய பகுதி வழியாக தென்னிந்தியாவை வந்தடைகின்றன.கதையில் காண்டாமிருகம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகளின் தகவல்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.
திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தை பள்ளிகளில் திரையிடுவதோடு மாணவர்களை குழுக்களாக பிரித்து, திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் காலாண்டு தேர்வு, விடுமுறை அறிவிக்கப்பட்டு குறைந்த நாட்களே பள்ளி இயங்கியதால், நவம்பர் முதல் வாரத்திற்குள் இப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கான, பகுதி நேரம், முழு நேர பிரிவின் கீழ், சேர்க்கை விண்ணப்பம் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.
இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 500 ரூபாய்), இணையவழியாக செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 15ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
சேர்க்கை செயல்பாடுகள் ஜூன் 2023 பல்கலைக்கழக தரப்பில் நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்.
- தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சிகளில், தனியார் நிறுவனத்தினர் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் (சி.ஐ.டி.யு.,) சங்கத்தின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
அதனடிப்படையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-
மாநகராட்சி, நகராட்சிகளில் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில், சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் சட்ட விதிப்படி பணி மேற்கொள்ளப்படுவதில்லை.ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கூலி பிரதிமாதம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். பஸ் நிலையம், சந்தை, சாலை மற்றும் வீதிகளில் தேங்கும் குப்பை, கழிவுநீர், கால்வாயில் தேங்கும் கசடு, மண் உள்ளிட்டவற்றை சேகரித்து மக்கும், மக்காத கழிவுகளை தனியாக பிரித்து நுண் உர மைய கூடம், உலர்க்கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும்.
தினமும் சேகரிக்கப்படும் குப்பையில் மக்கும் குப்பை, மக்காத மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய உலர் கழிவுகள், மக்காத எதற்கும் பயன்படாத பிற உலர் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் டயர், நாப்கின், பயன்படுத்தப்படாத மருந்து, மருந்து அட்டைகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.
நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு பணிக்கும் செயல்திறன் கணக்கிட்டு அதன்படி தொகை கணக்கிட்டு நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டும். வீடு, கடை, வணிக வளாகம், சந்தைகளின் எண்ணிக்கை, அங்கு சேகரிக்கும் திடக்கழிவின் எடை, மக்கும் மற்றும் மக்காத குப்பையின் எடை, பஸ் நிலையங்களில் தினசரி சுத்தம் செய்யப்படும் நேர விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
பணியாளர்களுக்குரிய சம்பள தொகையை பிரதி மாதம், 5ந்தேதிக்குள் ஒப்பந்ததாரருக்கு நிர்வாகங்கள் வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்கு தொகையை பிடித்தம் செய்து, ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தி ரசீது பெற்ற பின் அதனை சரிபார்த்த பிறகே அந்தந்த மாதத்திற்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் குறைந்தபட்ச கூலி சட்டம் 1948ன் படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 36ன் படி, குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
- வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
- போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
திருப்பூர்:
காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
- மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
- தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக, எஸ்இஏஎஸ் எனும் திறனறிவு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த, 2022ல் தேர்வு நடந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023) தேர்வு 3, 5, 8மற்றும்9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது.
- போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர்:
மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது என மின்வாரியம் தொடர்புடைய அனைத்து பணிகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மின் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் சில போலி எஸ்.எம்.எஸ்.,களும் உலா வருகின்றன.
அதன்படி, உங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள். தவறினால், உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.உடனடியாக இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்ற வாசகம் தாங்கி, ஒரு மொபைல் எண்ணுடன் கூடிய எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் உள்ளது. இது மின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கும் மேலாக இன்னும் சில எஸ்.எம்.எஸ்.,களில், ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, மின் கட்டண பாக்கியை அந்த எண்ணுக்கு செலுத்த வேண்டும் எனவும், எஸ்.எம்.எஸ்., வருகிறது.
இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. அதுபோன்ற மோசடி தான், இதுபோன்றஎஸ்.எம்.எஸ்.,கள். இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மின் கட்டணம் செலுத்தியதற்கான தகவல், செலுத்த வேண்டிய தகவல் குறித்த விவரங்கள் மட்டுமே மின்வாரியத்தினர் சார்பில் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது என்றனர்.
நுகர்வோர் சிலர்கூறுகையில்,போலி எஸ்.எம்.எஸ்.,களை அடையாளம் காண்பது, கடினமான காரியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அதில் வரும் லிங்க் ஆகியவற்றை தொடும் போதே, நமது வங்கிக்கணக்கு, இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், மர்ம நபர்களால் சேகரிக்கப்பட்டு, பண மோசடி நடக்கிறது என போலீசார் எச்சரிக்கின்றனர். எனவே போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் (எண்:16382) ஆந்திர மாநிலம் கொடுரு - கடப்பா இடையே, ரஜாம்பெட் நிலையத்தில் நின்று செல்லும்.
- .மறு அறிவிப்பு வரும் வரை இந்நடைமுறை தொடரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ெரயில்கள் நின்று செல்லும் நிலையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அவ்வகையில் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் (எண்:16382) ஆந்திர மாநிலம் கொடுரு - கடப்பா இடையே, ரஜாம்பெட் நிலையத்தில் நின்று செல்லும். எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் (எண்:18190) ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்புர் - சினி நிலையங்களுக்கு இடையே, ராஜ்கஹரர்சன் நிலையத்தில் நின்று செல்லும். இதற்கு ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை இந்நடைமுறை தொடரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
- அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையடிபாளையத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117. 50-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் இலக்கு அளவான 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நிறைவு பெற்றவுடன் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தநிலையில், அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளதால் பதிவு செய்யப்படாத விவசாயிகளிடம் இருந்தும் அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், நேற்று கலெக்டர் அறிவுறுத்தல் படி தற்போது நடைபெற்று வரும் கொப்பரை கொள்முதலில் பதிவு செய்யாத விவசாயிகளும் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூடமேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்தார்.
- முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது.
- கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கிலோ மீட்டர் நீளம் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 லாரி அளவு தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருட்டின் மதிப்பை கணக்கிடுகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி வரை நடந்திருக்கலாம். கால்வாயின் மொத்த தூரமான 126 கிலோ மீட்டருக்கும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை தண்ணீர் திருட்டு நடந்திருக்க கூடும் என காங்கயம்-வெள்ளகோவில் பி.ஏ.பி. நீர் பாசன சங்க தலைவர் பி.வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நீர் பாசன சங்கத்தின் மூலம் போடப்பட்ட விதிமுறைகளை தாண்டி பல அடி ஆழத்திற்கு குழாய்கள் அமைத்தும், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வைத்தும் கால்வாயில் பாயும் நீரை திருடுகின்றனர். முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இது போன்று பல இடங்களில் பல விதமாக தண்ணீர் திருடுவதன் மூலம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை அனுபவிக்கும் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் பாசன அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை ஆகியோர் சேர்ந்து தண்ணீர் திருட்டை தடுத்து முறையான பாசன நீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுத்து சமச்சீராக நீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ேமலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளத்துறை) காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது.
- திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை திருச்சி துறையூரை சேர்ந்த செல்வகுமார், சுந்தரமூர்த்தி மற்றும் கொடுவாய் செங்காட்டு பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் பால் வழங்கி வந்தனர். மேலும் இந்த நிறுவனம் மாத கணக்கில் பால் கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் திடீரென தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பால் கொள்முதல் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் துணை வட்டாட்சியர், பல்லடம் காவல் ஆய்வாளர், அவினாசிபாளையம் போலீசார், தெற்கு அவினாசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பால் பணம் பாக்கி கொடுக்காமல் வைத்துவிட்டு, பால் பண்ணை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






