என் மலர்
திருப்பூர்
- எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
திருப்பூர்:
கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) தினமும் காலை 5:40 மணிக்கு இயக்கப்படுகிறது. மற்ற வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ெரயில் இல்லை. தினசரி ெரயில்களாக உள்ள கன்னியாகுமரி - பெங்களூரு (எண்:16525), கண்ணூர்- யஷ்வந்த்பூர் (எண்:16528), கொச்சுவேலி - மைசூரு (எண்:16316), எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) எக்ஸ்பிரஸ்களில் பயணிகள் கோவை, திருப்பூரில் இருந்து பயணிக்க வேண்டியுள்ளது.
மேற்கண்ட ெரயில்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு, பல நிலையங்களை கடந்து வருவதால், கோவை, திருப்பூருக்கான இருக்கைகள் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. முன்பதிவு இருக்கை, படுக்கை வசதி மேற்கு மண்டல பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து ெரயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-
பெங்களூருவில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளதால், மேற்கு மண்டலத்தில் இருந்து அங்கு சென்று, பலரும் பணிபுரிகின்றனர். கோவை - பெங்களூரு இடையே பகல் அல்லது இரவில் நேரடி ெரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.முன்பதிவு செய்வோருக்கும் இருக்கை உறுதியாகும்.
சேலம் கடந்து பெங்களூரு செல்லும் ெரயில்களில், கோவையில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் பகுதிக்கு பயணிப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எனவே அதிகரிக்கும் டிக்கெட் முன்பதிவை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் கோவை - பெங்களூரு இடையே ெரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம்.
- லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.
திருப்பூர்:
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டடங்களுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்பு யூனிட்டுக்கு 8.15 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதுதவிர கிலோவாட்டுக்கு 204 ரூபாய் நிலை கட்டணமும் விதிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்போர் நல அமைப்புகள், மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்படுமென 18-ந்தேதி முதல்வர் அறிவித்தார். அதற்கான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
10 வீடுகள் அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, லிப்ட் வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாய் என்பது 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம். பொது பயன்பாட்டு மின் இணைப்பு, 1டி என்ற வகையில் இருந்தது. இதில் யூனிட்டுக்கு 5.50 ரூபாய் மின் கட்டணம் செலுத்த தகுதியான பொது பயன்பாட்டு இணைப்புகளை 1இ என, வகை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1இ என்ற தாழ்வழுத்த மின் இணைப்பு வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.
அரசு உத்தரவுப்படி மின்வாரியம் 1இ இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. தகுதியானவர்கள் 1டி இணைப்பை 1இ என்று வகை மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என்றனர். குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு 204 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பயன்படுத்தும் மின்அளவை காட்டிலும் நிலை கட்டணம் தான் பெரும் சுமையாக வருகிறது. வாடகை வீடுகளில் வசிப்பவருக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது.எனவே வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் எதிர்பார்த்து ள்ளனர்.
உடுமலை :
நடப்பாண்டுக்கான முதல் மற்றும் இரண்டாமாண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது. தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
விடைத்தாள்களின் ஒளிநகல்களை பெறுவது, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் நேரடியாகச்சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மறுகூட்டல் விண்ணப்பிக்க தலா ஒரு பாடத்துக்கு 205 ரூபாயும், மறுமதிப்பீட்டுக்கு தலா ஒரு பாடத்துக்கு 505 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவரவர் பகுதிக்கு அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகச்சென்று உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு இன்று இறுதி நாளாக உள்ளது.இத்தகவலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்தார்.
- கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
- ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
காங்கயம் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காங்கயம் கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசின் விதிகளின் படி அரசாங்க கடிதங்கள் அரசு துறை நிறுவனமான இந்திய தபால் துறை மூலமாக தான் அனுப்ப வேண்டும். ஆனால் திருப்பூர் மின்சார வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அதிகாரிகள் தனியார் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பி வருவது சட்டவிரோத செயலாகும். சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் உரிய தீர்வுகாண வேண்டும். புகார் மனுக்களை கிடப்பில் போட்டு தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமான செயலாகும். தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைத்தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதில் சமூக ஆர்வலர்கள் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- சிவன்மலை தி.மு.க. கிளை செயலாளர் சிவகுமார் உள்பட உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், சிவன்மலை ஊராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிவன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழ்நாட்டில் 10 இடங்களில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற த்தொகுதியில் சிவன்மலை கிராமத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 6.56 ஏக்கர் நிலப்பரப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீ ஓடுதள பாதை, கால்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கபாடி ஆகிய விளையாட்டுகளுக்கு மைதானம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி, அலுவலக அறை, பொருள் பாதுகாப்பு அறை, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உடை மாற்றும் அறை, கழிவறை வசதிகளுடன் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர்,காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தன், நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர் ராஜகோபால், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகரன், விமலாதேவி, சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், சிவன்மலை தி.மு.க. கிளை செயலாளர் சிவகுமார் உள்பட உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 2023-24ல் 10 ஒன்றியங்களில் 191 கி.மீ., நீளத்துக்கு 107.53 கோடி ரூபாய் மதிப்பிலான 44 ரோடு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பூர், மூலனூர், பல்லடம் ஒன்றியங்கள் விடுபட்டுள்ளன.
அதன்படி அவிநாசி ஒன்றியத்தில் (15 கி.மீ., ரோடு) 10.56 கோடி ரூபாய், குடிமங்கலத்தில் (9.76 கி.மீ.,) ரூ.5கோடி, தாராபுரத்தில் (56 கி.மீ.,) - ரூ.33.11 கோடி, காங்கயத்தில் (21.39 கி.மீ.,) ரூ.11.99 கோடி, குண்டடம் (20 கி.மீ.,) - ரூ. 11.84 கோடி, மடத்துக்குளம் (4.05 கி.மீ.,) ரூ. 1.81 கோடி.
பொங்கலூர் (7.36 கி.மீ.,) ரூ.3.13 கோடி, வெள்ளகோவில் (8.33 கி.மீ.,) ரூ.4.01 கோடி, ஊத்துக்குளி (13.84 கி.மீ.,) ரூ. 9.65 கோடி, உடுமலை (31.18 கி.மீ.,) ரூ.16.99 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் ஒன்றியத்தில் புதிய பாலம் அமைக்க 1.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை பணிகள் தேர்வில் பாரபட்சம் காட்டுகின்றனர்.மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளை, அனைத்து ஒன்றியங்களுக்கும், பாரபட்சமின்றி பகிர்ந்து வழங்க வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
இது குறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது, விடுபட்ட ஒன்றியங்களுக்கு மற்றொரு திட்டங்களில் ரோடு பணி ஒதுக்கப்படும். பணிகள் சுழற்சி முறையில் அனைத்து ஒன்றியங்களுக்கும் ஒதுக்கப்படுகிறது என்றனர்.
- ருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
- விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இச்சமயத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம் விதைப்பில் ஈடுபடுவர்.அதற்கேற்றாற் போல் பருவமழையும் பெய்யும். ஆனால் இம்முறை பருவமழை பொய்த்ததால், சோளம் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தில் கணிசமான அளவில் சோளம் சாகுபடி குறைந்திருக்கிறது என கூறப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும். இதற்கு பயந்து பலரும் தங்களிடம் உள்ள கறவை மாடுகளை விற்க துவங்கியுள்ளனர்.இதுபோன்ற வறட்சி சமயங்களில், விவசாய நிலங்களில் மேற்கொள்ள வேண்டி பயிர் சாகுபடி முறை, நீர் மேலாண்மை, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற விஷயங்கள் தொடர்பான பயிற்சி, விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த விமானம் வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த விமானம் 11:20 மணிக்கு மும்பையை சென்றடையும்.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால் அங்கிருந்து வேறு விமானம் மாறி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.
கோவையில் இருந்து ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால், சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி என்ற முறையில் பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை டி 2வில் இமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் விமானம் மாறிச் செல்லலாம்.
இதனால் கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு இந்த ஏர் இந்தியா விமான சேவை இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இது 6-வது விமான சேவையாகும்.
கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையை தொடங்குகிறது. அதையடுத்து ஏர் இந்தியா-காலை 9 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன.
- துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அவினாசி:
அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:- அவினாசி துணை மின் நிலையத்தில் வருகிற 4-ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம் பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
- வெப்பம் தணிந்து. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
திருப்பூர் ,அவிநாசி, மங்கலம் ,பல்லடம் ,உடுமலை என மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. ஒரு சில இடங்களில் மழையானது தொடர்ச்சியாக பெய்து வருகிறது .இதனால் வெப்பம் தணிந்து. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருப்பூர் வடக்கு பகுதியில் 50.50 மில்லி மீட்டர், தெற்கு பகுதியில் 7.40 மில்லி மீட்டர், ஊத்துக்குளி 20.40 மில்லி மீட்டர், மடத்துக்குளம் 10 மில்லி மீட்டர், மூலனூர் 37 மில்லி மீட்டர், தாராபுரம் 16 மில்லி மீட்டர் என மொத்தம் 248.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
- அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-புக்குளிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
மேலும் இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மற்றும் திருப்பூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), மங்கலம் பகுதி கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.அதேபோல சுமார் 40லட்சம் மதிப்பிலான குப்பைகள் எரிக்கும் எந்திரத்தை தமிழக அரசு மங்கலம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் , திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இருந்து மங்கலம் ஊராட்சி எல்லை வரை உள்ள நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மங்கலம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியதை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
- உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
- அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ஜம்புக்கல் மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.
பின்னர் நிலத்தை பெற்றவர்கள் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளால் அதில் திறம்பட சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார். அதன் பின்பு அவர் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் மலைப்பகுதியில் நிலத்தை கிரையம் பெற்ற தனியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உடுமலை ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 2 தரப்பினரையும் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் ஒரு சிலர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்"ஜம்புக்கல் மலை விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதில் உண்மை நிலையை கண்டறிந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதும் அவசியமாக உள்ளது" என்றனர். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்,பொதுமக்கள் உடனிருந்தனர்.






