என் மலர்
திருப்பூர்
- தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது.
தாராபுரம்:
தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பணிபுரியும் இடத்தில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது எப்படி? என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சினிமா நடிகர், நடிகை போல எண்ணி ஆண்களுடன் பழகி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது. மாணவர்கள் மன அழுத்தம் குறைக்க யோகா, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு பேசுகையில், குடும்ப பெண்கள் யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை தெரியப்படுத்தக் கூடாது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ளது. மருத்துவ துறையில் செவிலியர்களின் செயல்பாடு நீதித்துறைக்கு பயன்பட வேண்டும் என்றார். தாராபுரம் வக்கீல் சங்கச்செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் ேபசுகையில், பெண்கள் பயன்படுத்தும் செல்போனில் ஏற்படும் பயன்களையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் எடுத்துரைத்தார். தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கலைச்செழியன் பேசுகையில், கொரோனா தொற்றின் போது முன் களப்பணியாளராக செவிலியர்கள் மற்றும் நர்சிங் துறையை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன என்றார்.
- மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்ட வாகனத்தை கொடியசைத்து, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் சீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவிலான பயனை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனம் முதல் கட்டமாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு நவம்பர் 15-ந்தேதி வரை நெல் பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை திருப்பூர், மூலனூர், குடிமங்கலம், பொங்கலூர், குண்டடம், பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு நிலக்கடலை, கொத்துமல்லி, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை, மரவள்ளி, கொண்டைக்கடலை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயிர் காப்பீடு தொகை மற்றும் காப்பீடு செய்ய கடைசி நாள் போன்ற விபரங்கள் இவ்வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.
அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
- சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாள்தோறும் புத்தம் புதியதாக காய்கறிகள் கிடைப்பதால் உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதன் காரணமாக உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை சீரான முறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 225 கிலோ காய்கறிகளும், 90 ஆயிரத்து 920 கிலோ பழ வகைகளும் ஆக மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 145 கிலோ வரத்து வந்துள்ளது. அதன்படி ரூபாய் 3 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.
சந்தைக்கு 2 ஆயிரத்து 274 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். அதை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 3 பொதுமக்கள் வாங்கி சென்று உள்ளனர். காய்கறிகள், பழங்கள் தரமாக கிடைப்பதால் உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தி மக்களின் நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.
- கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் பெரியாண்டிபாளையம் பிரிவு அருகே உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென 5 வெறிநாய்கள் அப்பகுதிக்கு வந்தது. வந்தவேகத்தில் குழந்தையை சரமாரியாக கடிக்க தொடங்கியது. இதில் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறினாள். கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.
இதில் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது
இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இத்திட்டம் தமிழகம் முழுவதும் நாளை 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை தொடங்கப்பட உள்ளது.
- சிவன்மலை கிரிவலப்பாதை சுத்தப்படுத்தும் பணி மற்றும் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முத்தூர்:
பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான ஆரோக்கியமான பாதுகாப்பான நடைபாதை மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் நாளை 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை தொடங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நடைபயிற்சியை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படவுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் சிவன்மலை முருகன் கோவில் கிரிவலப் பாதையில் இந்த 8 கி.மீ. தூர நடைபயிற்சி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிவன்மலை கிரிவலப்பாதையில் இரண்டு முறை சுற்றி வந்தால், 8 கி.மீ. தூரம் நிறைவு பெறும்.
இதனை முன்னிட்டு சிவன்மலை கிரிவலப்பாதை சுத்தப்படுத்தும் பணி மற்றும் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவன்மலை கிரிவலப் பாதையில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயிற்சியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நடைபயிற்சியில் திருப்பூர் மாவட்டப் பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயிற்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
- ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ வழியே மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் ,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாட்டு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (விழுக்காடு) அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரியையும், 94450 29552,தொலைபேசிஎண்: 0421-2971112 ஆகிய செல்போன்-தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர்.
திருப்பூர்:
ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூர் வணிகவரி மாவட்டம் இயங்கி வந்தது. வணிக வரி அமலாக்க பிரிவு அதிகாரிகள், ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு வந்து வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது.அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் அமலாக்கப்பிரிவுடன் கூடிய வணிக வரி இணை கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. வரி ஏய்ப்புகளை கண்டறிந்து பிடிக்க 8 பறக்கும்படை ரோந்து வாகனங்கள் களத்தில் உள்ளன. இதையடுத்து, கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும் சரக்குகளுக்கு உரிய இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா,சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என ஆய்வு நடத்துகின்றனர்.
தீபாவளி நெருங்கும் நிலையில் உற்பத்தி செய்த பின்னலாடைகளை, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விரைந்து அனுப்புவதில் திருப்பூர் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அபராதங்கள் விதிக்கின்றனர்.
இது குறித்து ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:-
திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவானதையடுத்து அமலாக்க பிரிவினர் தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சோதனைகளால் வரி ஏய்ப்பு பெருமளவு கண்டறிந்து தடுக்கப்படும். இது வரவேற்கத்தக்கது.
இ-இன்வாய்ஸ், இ-வே பில் உருவாக்கப்பட்டு விட்டது என்றாலே வரி ஏய்ப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. வாகன சோதனையில் ஈடுபடும் அமலாக்க பிரிவு பறக்கும்படையினரோ, உரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றில் சிறு சிறு பிழைகள் இருந்தாலும்கூட (கிளெரிக்கல் மிஸ்டேக்), 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என அபரிமிதமான வரி விதிக்கின்றனர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பின்னலாடை துறையினரை பாதிக்க செய்கிறது. சாதாரண பிழைக்கு கூட பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதோடு குறித்த நேரத்தில் ஆடைகளை, துறைமுகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது.முறையான ஆவணங்கள் இருந்து, வரி ஏய்ப்பு நோக்கமில்லை என தெரிந்தால், சிறு பிழைகளுக்கு, குறைந்தபட்ச அபராதம் மட்டும் வசூலித்துவிட்டு வாகனங்களை விடுவித்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வணிகவரி அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-வே பில், இ-இன்வாய்ஸ் இருந்து, சிறு சிறு பிழைகள் இருப்பின் அவற்றை பெரிதுபடுத்த வேண்டாம் என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.
- பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.
திருப்பூர்:
பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செய்வதற்கென உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) கடந்த ஜூலை மாதம் 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5, 12, 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னணு வழி ரசீது உருவாக்க ப்படவேண்டும் என 2018ம் ஆண்டு முதல் சட்டம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இதனிடையே போலி ஜி.எஸ்.டி., பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது.
இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இந்த போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.
நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போது தான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது.
மேலும் ஜிஎஸ்டி., கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிமைத்தொகையை அரசு வழங்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி இணை இயக்குநர் முருககுமாரிடம் கேட்டபோது, திருப்பூரில், போலி ஜி.எஸ்.டி., மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. எத்தனை பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு இல்லாமல் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை வழங்கியது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை ரத்து செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- பாலக்காடு, சொரனூர், மங்களூரு வழியாக கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
- கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:
கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
பாலக்காடு, சொரனூர், மங்களூரு வழியாக கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த வாராந்திர சிறப்பு ெரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ெரயில் எண் (02198) ஜபல்பூர் - கோவை இடையே, வாராந்திர சிறப்பு ெரயில் 3ந்தேதி முதல் 29ந்தேதி வரை வெள்ளிக்கிழமை அன்று ஜபல்பூரில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 2.40 மணிக்கு கோவை வரும். ெரயில் எண் (02197) கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் கோவையில் இருந்து 6ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை திங்கட்கிழமை கோவையிலிருந்து 5.05 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை 8:45 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் கட்டாயம் ஆதார் இணைத்திருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், இ-சேவை மையம் மூலமாக சாதி, வருமான சான்றிதழ் விண்ணப்பித்து பெற வேண்டும்.
ஜாதிசான்றிதழ், ஆதார், குடும்ப வருமானம் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஆவணங்களை முழுமையாக பெற்று தகுதியானவர் விபரங்களை தெரிவு செய்து வருகிற 15-ந் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.






