என் மலர்
திருப்பூர்
- பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை
- ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் லோகுபிரசாந்த், ஸ்ரீ பிரியா, துளசிமணி, ராஜேஸ்வரி, கங்கா, சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஜோதிபாசு (இ.கம்யூ):- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பெண்கள் மற்றும் வயதானவர்கள் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கே.ஆண்டிப்பாளையத்திலுள்ள அங்கன்வாடி பழுதடைந்து தற்போது அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடியில் உள்ள 15 குழந்தைகள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே புதிதாக அங்கன்வாடி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டி. ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள குட்டைகளை மேம்பாடு செய்ய வேண்டும். டி.ஆண்டிப்பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.
ஊராட்சியில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் சாலைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். அத்திக்கடவு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணாபுரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
பாலகிருஷ்ணன்(தி.மு.க):- தெற்கு அவினாசிபாளையத்தில் உள்ள மின் மயானத்திற்கு முன்புறமாக செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும்.
வக்கீல்.எஸ்.குமார் (ஒன்றிய சேர்மன்):- ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலும் பழுதடைந்துள்ள சாலைகளை மேம்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு பின்னர் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாவிபாளையம், வடமலைபாளையம் மற்றும் தொங்குட்டிபாளையம் பகுதிகளில் பஸ் வசதி கேட்டுள்ளீர்கள்.
ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்போது ஆட்கள் தேர்வு பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பஸ் வசதி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இன்னும் சுமார் ஒரு 6 மாத காலத்திற்குள்ளாக அனைத்து சாலைகளும் மேம்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் நன்றி கூறினார்.
- ளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
- மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் பரவலாக காணப்படுகின்றன. அவ்வப்போது இறைச்சி மற்றும் தோகைக்காக, மயில்கள் வேட்டை யாடப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே, மயில்களால் இடையூறு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடத்தில் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், மயில்கள் ஆண்டு முழுவதும் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது கிடையாது. மாறாக, நாற்று நடும் காலம், விதைப்பு காலம் அல்லது அறுவடை காலம் எப்போது என்பதை தெரிந்து, மயில்களை விரட்டும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும்.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மயில்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், எஞ்சிய பாதுகாக்கப்பட்ட வனங்கள், விளைநிலங்களில் மட்டுமே, அவை காணப்படுகின்றன. வனத்துறையினர், தன்னார்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்தோ, மயில் காப்பாளர் எனும் புதிய பணியிடத்தை உருவாக்கியோ, அவைகளை பாதுகாக்க முன் வர வேண்டும். அப்போது தான், வேளாண் பயிர் சாகுபடியையும் பாதுகாக்க முடியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பல்லடம்:
தமிழ் நாட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் பல்லடம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. இதில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
- திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
- 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், திருப்பூர் மாநகராட்சி நடமாடும் தொழிலாளர்கள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்குவாரி தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.
இதற்கு திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரணம்பேட்டை கல் குவாரி சங்க தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவராஜ் வரவறே்று பேசினார். கல்குவாரி தொழிலாளர்களுக்கு டாக்டர் அபிராமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் கல்குவாரி சங்க துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர், நடராஜ், மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது.
- வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூர்:
வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது. மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்பணி குறித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மழைக்காலங்களில், தொற்றுநோய் பரவாத வகையில் திடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, உள்ளாட்சி பகுதிகள் தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரப்பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வாயிலாக தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- முத்துக்குமாரசுவாமிக்கு 18 வகை வாசனை திரவியங்களால், அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.
- பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஐப்பசி மாத தேய் பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில்ச சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர்.
- சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி ரோசரி கார்டன் என்ற பகுதியில் நீர்வழி பாதையை அடைத்து தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்த இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி நீர்வழிப் பாதையை அடைக்காமல் பாலம் அமைத்து அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து அந்த நீர்வழிப்பாதையில் பாலம் அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இச்சிப்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற்றனர். இந்த நிலையில் பாலம் அமைக்க, அதற்கான சிமெண்ட் குழாய்கள் கொண்டு வரப்பட்டது. சிமெண்ட் குழாய்களை இச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- காளானை சுட சுட சுவைப்பதற்கு சைவ பிரியர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள்.
- ஒரு பாக்கெட் காளான் ரூ 45 முதல் ரூ 50 வரையிலும் கிடைக்கிறது
உடுமலை:
அறுஞ்சுவைகள் நிறைந்த உணவு கைக்கு அருகே இருந்தாலும் தூரத்தில் கிடைக்கும் மசாலாக்கள் கலந்த கம கம வாசனையுடன் கூடிய சிற்றுண்டிகளின் சுவைக்கு அடிமையாகாதோர் இல்லை என்றே சொல்லலாம்.
பல வகையான சிற்றுண்டிகள் இருந்தாலும் அவற்றில் முதலிடம் பிடிப்பது உடலுக்கு வலிமை தரும் காளான் சில்லி, பிரை, மஞ்சூரியன், தொக்கு என பல்வேறு வடிவங்களில் தயாராகி விற்பனைக்கு வரும் காளானை சுட சுட சுவைப்பதற்கு சைவ பிரியர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள்.
ஆனால் உடுமலை பகுதியில் உள்ள உணவகங்களில் தயராகும் காளான் ப்ரையில் காளானை தேடும் நிலைமை காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உடுமலை பகுதியில் உள்ள ஒரு சில சிற்றுண்டி, தள்ளுவண்டி உணவகங்கள் பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
குறிப்பாக காளான் ப்ரை என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் உணவில் காளான்களே இருப்பது இல்லை. ஆசை ஆசையாய் விலை கொடுத்து வாங்கி காளான் ப்ரை சாப்பிட அமர்ந்தால் ப்ரை முடியும் வரையில் காளானே கிடைப்பதில்லை. மாறாக மசாலா, மாவு நிறைந்த முட்டைக்கோசின் ஆதிக்கமே காளான் ப்ரையில் உள்ளது.
ஒரு பாக்கெட் காளான் ரூ 45 முதல் ரூ 50 வரையிலும் கிடைக்கிறது.அதை கொண்டு மாவுககள், மசாலாக்களை அதிகளவில் கலந்து சுமார் நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் அளவிற்கு ப்ரையை தயாரித்து விடுகின்றனர். இது முழுக்க முழுக்க பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும். விலைக்கு தகுந்த உணவை தரமாக கொடுப்பதற்கு மனது வருவதில்லை.
இதுகுறித்து உடுமலை பகுதியில் உள்ள உணவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் பொதுமக்கள் விரும்பிய உணவில் விரும்பிய பொருள் இல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். எனவே உணவுத்துறை அதிகாரிகள் உடுமலை பகுதியில் ஆய்வு செய்து உணவகங்களில் தயாராகும் உணவுகளின் தரத்தையும் அது தயாரிக்க பயன்படும் எண்ணெய்யையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அத்துடன் தயாரிக்கப்படும் உணவில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உணவை தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
- நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
- நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி பொறுப்பாளர்கள் பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கட்சியின் தமிழ் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முருகானந்தம், மாநில பொது செயலாளர் சீனிவாசன் பாலகணபதி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், மண்டல தலைவர்கள் கண்ணாயிரம், நாகமாணிக்கம், மாரியப்பன், பாலசுப்பிரமணியம், மடத்துக்குளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்ன செய்தியாளரிடம் சுதாகர் ரெட்டி கூறியதாவது:- மக்கள் பாரதிய ஜனதா கட்சியை நம்புகிறார்கள். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரும் மக்களுக்காக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
- டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. படித்தோர், படிக்காதோர் என யார்வேண்டுமானாலும், கையில் செல்போன் இருந்தால் போதும், மிக எளிதாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பண பாதுகாப்பு, சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கிய அம்சமாக உள்ளன.
அந்த வகையில், டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது:-
பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2.59 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக பீம் மற்றும் யு.பி.ஐ., மூலமாக மட்டும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 812 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. பீம் மற்றும் ஆதார் வாயிலாக 4,971 கோடி ரூபாய், பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக 94.84 கோடி, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 90,423 கோடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 3,679 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இணையதளம் இல்லாத யு.எஸ்.எஸ்.டி., மூலம் 160 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது.
- நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர்:
சென்னை - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில், இருமார்க்கத்திலும் வருகிற 8-ந்தேதி வரை தாமதமாக பயணத்தை துவங்கும் என, சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது. இதனால், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரவு 11.45 மணிக்கு பதிலாக 2 மணி நேரம், 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.35 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மங்களூருக்கு புறப்படும் ெரயில் (எண்: 22637) மதியம், 1.25 மணிக்கு பதில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். வருகிற 5, 6, 8-ந்தேதிகளில் ெரயில் இயக்கம் தாமதமாகும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும்.
- ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும்
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் உள்ள பாசிப்பயறு கோ 8 ஆதார நிலை 1 விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும். பசுமைப்புரட்சிக்குப்பிறகு பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ததிலும், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதற்கும் நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் அளித்த ரகங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தரமான விதைப்பண்ணைகள் அமைத்து, வயலாய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட சான்று செய்யப்பட்ட விதைகள் முக்கிய காரணமாக இருந்தன. ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும். தற்போது ஆதார நிலை விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாசிப்பயறு கோ 8 ரகமானது 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற பாசிப்பயறு ரகங்களுடன் ஒப்பிடும் போது 55 முதல் 60 நாட்களில் வளர்ந்து ஏக்கருக்கு 340 கிலோ மகசூல் தரக்கூடியது.
ஒரு செடிக்கு 20 முதல் 25 காய்களுடனும், ஒரு காய்க்கு 10 முதல் 14 விதைகள் உடன் 1000 தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி தண்டு துளைப்பான், மஞ்சள் மொசைக் வைரஸ் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. விதைப்பண்ணை பூ பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் ஆதார நிலை விதை பண்ணைக்கு 0.1 சதவீதம் , சான்று நிலைக்கு 0.2 சதவீதம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதை பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.






