என் மலர்
திருப்பூர்
- தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா்.
- நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தின் மின் கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியா் கோவிந்தசாமியிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளா் ரா.பால சுப்பிரமணியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் வட்டம், பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காள் ஓடையின் நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா். ஆற்றின் கரைகளை சேதப்படுத்துதல் மற்றும் தண்ணீரின் போக்கை திசை திருப்புதல் போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை அமைப்பதற்கு உடனடியாக விதிக்க வேண்டும். மேலும் நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
- உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மேலும் திருப்பூர்-கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை 20 நாட்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 20 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விசைத்தறிகளில் பணியாற்றும் 3லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விசைத்தறி காடா ஜவுளி உற்பத்தி தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர். உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது தீபாவளி பண்டிகை போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், இன்று முதல் 25-ந்தேதி வரை திருப்பூர், கோவை மாவட்டத்தில் காடா ஜவுளி துணி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர்
- பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.
திருப்பூர்:
திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர். இதில் மழலை மலர்கள் வண்ண உடை உடுத்தி, மலர்களாக வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். இதில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.
- வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூரில் தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- நடப்பாண்டில் சுமார் 400 எக்டர் பரப்பளவுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணை, உடுமலைப்பேட்டைபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
உடுமலைப்பேட்டை அமராவதி சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்தும், ஆலையின் பராமரிப்பு, அரவைத்திறன், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, விவசாய பரப்பளவு உள்ளிட்டவைகள் குறித்தும் மற்றும் அமராவதி சர்க்கரை ஆலை வடிப்பகத்தில் உற்பத்தி திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, ஆலையை நன்கு பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க இந்த ஆய்வின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூரில் தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இப்பண்ணையில் நமது மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்க வேண்டிய காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாய் செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் இடங்களையும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும் நிழல்வலை கூடாரங்களையும் குழுத்தட்டு நாற்றுகளையும் ஆய்வு மேற்கொண்டும், பண்ணையில் மூன்று ஏக்கர் பரப்பளவில் மா கொய்யா மாதுளை மற்றும் எலுமிச்சை போன்ற பல செடிகளின் தாய் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓர் இரண்டு ஆண்டுகளில் இந்த தாய் செடிகளை ஆதாரமாகக் கொண்டு பல செடி நாற்றுகள் ஒட்டு கட்டுதல் முறையில் பதியன் போடுதல் முறையிலும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், தற்பொழுது உள்ள நிழல்வளை கூடார அமைப்பினை பயன்படுத்தி தோட்டக்கலை துறையின் மானிய த்திட்டங்களுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சுமார் 400 எக்டர் பரப்பளவுக்கு தேவையான காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே உள்ள நீர் ஆதாரங்களுடன் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கியும் பண்ணை பணியில் ஆர்வம் உள்ள பணியாளர்களை சேர்த்தும் பண்ணையின் உற்பத்தியினையும், நாற்றுகளின் தரத்தையும் அதிகரிக்கு மாறு தோட்டக்கலைதுறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடித்து பொதுமக்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் நளினா, துணை ஆட்சியர் (வடிப்பாலைப்பிரிவு) துரை,உடுமலைப்பேட்டை நகர்மன்றத்தலைவர் மத்தின், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) (பொறுப்பு) சந்திர கவிதா, குடிமங்கலம் வட்டார மருத்துவஅலுவலர் பிரபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன.
- தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது. இவற்றில், தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு மற்றும் மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், சமீப நாட்களாக, விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு கண்டுகொள்ளாததால், தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:- பஞ்சு, நுால் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி விகிதம், 6.25-ல் இருந்து, 9.75 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், தமிழக அரசு, இதுவரை இல்லாத அளவு, 430 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியுள்ளது தொழிலை மிகவும் பாதித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், துணிகளின் விலையை நிர்ணயிக்க முடியாமல், 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடந்து வருகிறது. உற்பத்தியை குறைத்துள்ளதால், தொழிலாளர்கள் பலரை பண்டிகைக்கு முன்னதாவே ஊருக்கு அனுப்பி விட்டோம். வரும் நாட்களில், மீதமிருக்கிற தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்வதால், தீபாவளி பண்டிகைக்குப் பின் தொழிலின் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
- உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்
திருப்பூர்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து 750 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
- திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது.
- காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. இதையொட்டி வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட நிலையம், நகர்ப்புற நிலைய அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படும். காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படும். யாருக்காவது தொடர் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டால், அவர்களை அழைத்து, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பை மாற்றி, பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, இனி, ஞாயிற்றுக்கிழமைக்கு பதில், சனிக்கிழமையில் முகாம் நடக்கும். நடப்பு வாரம், 5-ந் தேதிக்கு பதிலாக, இன்று காய்ச்சல் தடுப்பு முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ஞாயிறன்று முகாம் நடத்தினால், அதற்கு அடுத்த நாள் (திங்கள்) டாக்டர், செவிலியர் குழுவுக்கு விடுமுறை அளிக்க வேண்டியுள்ளது. சனிக்கிழமை முகாம் நடத்தினால், அதற்கான அவசியம் இல்லை. எனவே சனிக்கிழமைக்கு காய்ச்சல் தடுப்பு முகாம் மாற்றப்பட்டுள்ளது என்றார்.
- புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கால்வாய் அமைத்து 65 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இரு புறமும் உள்ள கான்கிரீட் சிலாப்புகள், மடைகள் உடைந்தும், நீர் வீணாவது அதிகரித்துள்ளது. அதே போல் கால்வாய் செல்லும் வழியின் குறுக்கே, ஓடைகளில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைத்துள்ள சுரங்க வழித்தடங்கள் மற்றும் மேல் நீர் போக்கிகள் சிதிலமடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
எனவே பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரதான கால்வாயில், பெருமாள்புதுார் முதல் சாளரப்பட்டி வரை 13.50 கி.மீ., நீளத்துக்கு புதுப்பிக்க 4.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில் அதிகம் சேதமடைந்துள்ள 13.50 கி.மீ., நீளம் உள்ள பகுதிகளில் 20 மதகுகள், 7 சுரங்க நீர் வழிப்பாதைகள், 2 மேல் நீர் போக்கி அமைப்புகள் மற்றும் கான்கிரீட் கரைகள் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர். அமராவதி அணையில் துவங்கி 64 கி.மீ., தூரம் அமைந்துள்ள பிரதான கால்வாயில் பெரும்பாலான பகுதிகளில், கான்கிரீட் கரைகள் மண் கால்வாயாக மாறி, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சுரங்க நீர் வழித்தடங்கள் அமைந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து ஒவ்வொன்றாக உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கால்வாயிலுள்ள பெரும்பாலான மடைகள், உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் படிகளுடன் காணப்படும் கரைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் பாதித்து வருகின்றனர். எனவே முழுமையாக கால்வாயை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
- நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.






