search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati Dam Canal"

    • புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கால்வாய் அமைத்து 65 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இரு புறமும் உள்ள கான்கிரீட் சிலாப்புகள், மடைகள் உடைந்தும், நீர் வீணாவது அதிகரித்துள்ளது. அதே போல் கால்வாய் செல்லும் வழியின் குறுக்கே, ஓடைகளில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைத்துள்ள சுரங்க வழித்தடங்கள் மற்றும் மேல் நீர் போக்கிகள் சிதிலமடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

    எனவே பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரதான கால்வாயில், பெருமாள்புதுார் முதல் சாளரப்பட்டி வரை 13.50 கி.மீ., நீளத்துக்கு புதுப்பிக்க 4.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில் அதிகம் சேதமடைந்துள்ள 13.50 கி.மீ., நீளம் உள்ள பகுதிகளில் 20 மதகுகள், 7 சுரங்க நீர் வழிப்பாதைகள், 2 மேல் நீர் போக்கி அமைப்புகள் மற்றும் கான்கிரீட் கரைகள் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர். அமராவதி அணையில் துவங்கி 64 கி.மீ., தூரம் அமைந்துள்ள பிரதான கால்வாயில் பெரும்பாலான பகுதிகளில், கான்கிரீட் கரைகள் மண் கால்வாயாக மாறி, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சுரங்க நீர் வழித்தடங்கள் அமைந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து ஒவ்வொன்றாக உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கால்வாயிலுள்ள பெரும்பாலான மடைகள், உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் படிகளுடன் காணப்படும் கரைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் பாதித்து வருகின்றனர். எனவே முழுமையாக கால்வாயை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    ×