search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: கி.வீரமணி பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: கி.வீரமணி பேச்சு

    • மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
    • 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக குலத்தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவா? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது:-

    இந்த ஆட்சியில் ரூ.1200 கோடி செலவில் காலை சிற்றுண்டி தரப்படுகிறது. முந்தைய ஆட்சிகளில் கோவில்களில் புளியோதரை, தயிர் சாதம் தான் தரப்பட்டது. இப்பொழுது தான் குழந்தைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள்.

    முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டர் என இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை. புதிய கல்வி கொள்கையினால் 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் வைக்கப்படுகிறது. இவ்வளவு தேர்வு எழுதி மீண்டும் க்யூட் தேர்வில் பாஸ் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நீட் மற்றும் கியூட்டை மியூட் செய்வதற்குத்தான் நாங்கள் உள்ளோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குலதொழில் கல்வி திட்டம் ஒழிந்த பின் விஞ்ஞானி ஆகியவர்கள். தாய் வீட்டு சீதனம் போல மாதம் ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அது உதவித்தொகை இல்லை. உரிமை தொகையாக வழங்கப்படுகிறது.

    மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தியாவை நாம் காப்பாற்றுகிறோம். அவர்கள் இந்தியா என்று கூறுவதற்கே பயப்படுகிறார்கள். இந்தியா என்கிற பெயர் அனைவரையும் இணைக்கிறது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி திரிசூலத்தை கையில் வைத்துள்ளார். ஒன்று வருமானவரித்துறை, மற்றொன்று சி.பி.ஐ., 3-வது அமலாக்கத்துறை. இது அனைத்தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்களிடம் அதானி, அம்பானி உள்ளார்கள். மக்கள் எங்களோடு உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தி.மு.க.,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×