என் மலர்
திருநெல்வேலி
- சம்பவத்தன்று சதிஷ்குமார் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார்.
- ஆனந்த் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.
இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.
- முகேசின் அண்ணன் முத்துகிருஷ்ணன், சிறுவர்கள் 3 பேரையும் அப்பகுதியில் தேடிப் பார்த்தார்.
- போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் ராகுல் (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் மகன் முகேஷ் (13), ரேஷன் கடை தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆகாஷ் (14).
இவர்கள் 3 பேரும் நவ்வலடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். ராகுல், ஆகாஷ் ஆகியோர் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று மாலை 5.30 மணி அளவில் இவர்கள் 3 பேரும் நவ்வலடி கடலில் குளிக்க சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து முகேசின் அண்ணன் முத்துகிருஷ்ணன், சிறுவர்கள் 3 பேரையும் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். அப்போது நவ்வலடி கடற்கரையில் அவர்கள் 3 பேரும் அணிந்திருந்த உடைகள், செருப்புகள் உள்ளிட்டவை கிடந்தது. அவர்கள் 3 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகிருஷ்ணன் தனது பெற்றோருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.
உடனே 3 சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் கடற்கரையில் திரண்டனர். தகவல் அறிந்து உவரி போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கடலில் குளிக்கும்போது கடல் அலையில் சிக்கியதை அறிந்த போலீசார், உவரி கடலோர போலீஸ் மற்றும் திசையன்விளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி, சுகுமாரன் மற்றும் தீயணைப்பு போலீசார் படகு மூலம் காணாமல் போன மாணவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். அவர்கள் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுவர்கள் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரின் உடல்களும் உவரி அருகே கோடாவிளை கடற்கரையில் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்து அவர்களது பெற்றோர் அங்கு சென்று மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். காலை 6.30 மணியளவில் கடலில் மாயமான மற்றொரு சிறுவன் முகேசின் உடலும் அதே கோடாவிளை பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம்.
- பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது தாயாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, " நாங்குநேரி சம்பவம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க கல்வி வளாகங்களில் நடைபெறும் சாதிய மோதல்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் நல்ல வழி செய்யும் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

மேலும், "ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்று நோக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு நல்ல வீடு, பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
"தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தனி உளவுபிரிவு உருவாக்கப்பட்டு இருப்பதை போன்றே, சாதிய மதவாத பிரச்சினைகளை கண்காணிக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தமிழ்நாட்டை குறிவைத்து இருக்கும் நிலையில், இந்த உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
- கலெக்டர் கார்த்திகேயன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
- விழாவில் மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
நெல்லை
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை 9.05 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வை யிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உடன் சென்றார். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதன்பின்னர் என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். மாற்றுத்தி றனாளிகள் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 9 துறைகள் சார்பில் பயனாளி களுக்கு நலத்திட்டங்களை அவர் வழங்கினார். இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, மின்கல தெளிப்பான், மாற்றுத்தி றனாளி களுக்கான ஸ்கூட்டர், உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இவ்வாறாக மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகி யோரின் பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 257 பேருக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கும் சிறப்பாக பணியாற்றியமைக்காக கலெக்டர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொதுமக்கள் கேலரியில் அமர்ந்து கண்டுகளித்தனர். இதில் வடக்கு செழியநல்லூர், சந்திப்பு மீனாட்சிபுரம், கல்லணை அரசு பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 950 மாணவிகள் நடனம் ஆடினர். சுமார் 90 மாணவிகள் உட ற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
3 அடுக்கு பாதுகாப்பு
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்கு மார், உதவி கலெக்டர்கள் முகமது சபீர் ஆலம் (சேரன்மாதேவி), மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், பழைய பேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அருளானந்தம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை யொட்டி பாளை யங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள காந்தி, காமராஜர், வீர பாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் பாளை நீதிமன்றம் எதிரே உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம், டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு ஜொலித்தன.

இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்து நின்ற மாணவ-மாணவிகள்.
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
- கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
நெல்லை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். இதில் அணுமின் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வளாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் முதல் அணு உலையில் 2022 -23 ஆண்டில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ள்ளது . கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை படைத்துள்ளது.
கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப் பட்டு உள்ளன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 193 பள்ளி களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அணுமின் நிலையம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- உயிரிழந்த ராஜாமணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும்.
நெல்லை:
பாளை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி(வயது 31). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி, தெற்கூரை சேர்ந்த இசக்கி உள்பட 3 பேர் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
உடலை வாங்க மறுப்பு
இந்நிலையில் ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கீழநத்தம் வடக்கூர் கிராமத்தில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உயிரிழந்த ராஜா மணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும், அவரது மனைவி பட்டதாரி என்பதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.
நெல்லை:
சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.
அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது.தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நெல்லை:
கிராம உதயம் சார்பாக 77-வது சுதந்திர தினம் மற்றும் கிராம உதயம் 25-வது வெள்ளிவிழா தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பகுதி பொறுப்பா ளர்கள் முருகன், பாலசுப்பிர மணியன், மரியமிக்கேல் ஜீவா, பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிராம உதயம் 25-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கிராம உதயம் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார்.
- 9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
பணகுடி:
ராதாபுரம் அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி மாலை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியை அர்ச்சித்து ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். திருவிழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை வழிபாடுகள் நடைபெற்றது.
9-ம் திருவிழா அன்று பொத்தக்காலன்விளை திருத்தல அதிபர் வெனிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு பரலோக மாதா தேரில் ரத வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு மிளகு தூவி வழிபட்டனர்.
தேரோட்டத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
- வெற்றிவேல் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
- நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது32). தொழிலாளி. இவர் கட்டிட தொழிலுக்காக ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல், மாலையில் சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் அருகே விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெற்றி வேலுக்கு மரகதநேசமணி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
- ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார்.
- ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவை சேர்ந்தவர் வேலு என்ற ஆண்டியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (45).
ஆண்டியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஆண்டியப்பன் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மது போதையில் அடிக்கடி மனைவியிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த ஆண்டியப்பன் ராம லட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார். இதனால் ஆண்டியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன் பின்னர் கோபத்துடன் ராமலட்சுமி தனது அறையில் போய் படுத்துக்கொண்டார்.
இன்று காலையில் எழுந்த ராமலட்சுமி பத்தமடை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர் நடந்த விபரங்களை கூறியதும், போலீசார் ராம லட்சுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண்டியப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
- தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார்.
நெல்லை:
உலக அளவில் புகழ் பெற்றது நெல்லை அல்வா. ஆனால் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் தயார் செய்யப்படும் மஸ்கோத் அல்வா அதற்கு போட்டியாக பொதுமக்களால் விரும்பப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா சிறப்பு பெற்றது. மஸ்கட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கோத் அல்வா.
1966-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது மஸ்கோத் அல்வா வரலாறு. ஜோசப் ஆபிரகாம் என்பவர் தேங்காய்ப்பாலுடன் முந்திரி பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு மஸ்கோத் அல்வா தயார் செய்தார். வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது பல ஆண்டுகளை கடந்து ஜோசப் ஆபிரகாம் அவரது மகன் ஜெயசீலன் என தொடர்ந்து இந்த அல்வா தொழில் ஈடுபட்ட நிலையில் அவரது பேரன் சைமன் ஐசக் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, எனது தாத்தா தனது மூத்த மகள் தேவகனியுடன் சேர்ந்து இலங்கையில் வசித்த போது இந்த அல்வாவை பற்றி அறிந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார். நாளடைவில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இன்று முதலூர் அல்வா என்றால் நாடு முழுவதும் தெரியும் படி மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.
தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏறுப ஆன்லைன் மூலமும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. எனினும் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அந்த வரிசையில் முதலூர் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.






