என் மலர்tooltip icon

    தேனி

    • வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது.
    • ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லான் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கத்தால் ஆபரணங்கள் செய்து போட முடியாத நிலையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட வேலைக்குச் சென்று சிறிது சிறிதாக சேர்த்து காலில் வெள்ளி கொலுசு மட்டுமே அணிவது வழக்கம்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்ஷா, முகேஷ் குமார், அம்ரித் யாதவ் ஆகிய 3 வட மாநில இளைஞர்கள் வீடுகளில் இருந்த பெண்களிடம் காலில் அணிந்துள்ள கொலுசுகளை பாலிஷ் செய்யும் பவுடர் உள்ளது. அந்த பவுடர் வெறும் ரூ.20 மட்டும்தான், நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என முதலில் கூறி பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெண்கள் பாலீஷ் போட கொலுசுகளை கொடுக்க முன்வராத நிலையில் நானே உங்களுக்கு பாலிஷ் போட்டு காட்டுகிறேன் என்று கூறி வலுக்கட்டாயமாக லட்சுமி என்ற பெண் அணிந்திருந்த கொலுசை வடமாநில இளைஞர் கழற்றி அவர்கள் வைத்திருந்த பவுடரை தடவி வேதிப்பொருட்கள் நீரில் மூழ்கடித்துள்ளனர். அப்போது கொலுசை மூழ்கடித்த நீரானது கொதிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் எடுத்த போது அந்த கொலுசு முழுவதும் கருப்படைந்ததாகவும், அதனை மீண்டும் சீயக்காய் பவுடரை போட்டு தேய்த்து நீரில் கழுவி கொடுத்துள்ளனர். பாலீஷ் செய்த கொலுசை பெண்களிடம் கொடுக்கும் போது தற்பொழுது போட வேண்டாம் ஒரு மணி நேரம் கழித்து அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறி அடுத்தடுத்து 3 பெண்களின் கொலுசுகளை இதே போன்ற முறையில் பாலீஷ் செய்து கொடுத்துள்ளனர்.

    வடமாநிலத்து இளைஞர்கள் பாலீஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசுக்கும் அதே நிலை ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கினர். வட மாநிலத்து இளைஞர் ஒருவரின் பையைப் பிடுங்கி வைத்த நிலையில் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அந்த நேரத்தில் எதிரே வந்த மற்ற இளைஞர்கள் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர். அவர்களிடம் கொலுசுகள் அனைத்தும் தனித்தனியாக துண்டாகி உள்ளது குறித்து கேட்டபோது, நீங்கள் கொடுத்த கொலுசு பழையது என்பதால் அப்படித்தான் இருக்கும் என்று முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர்.

    இதனால் அவர்கள் 3 பேரையும் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரியகுளம் வடகரை போலீசார் அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் இதே போன்று பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. திண்டுக்கல் புறநகர் பகுதியில் குடியிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்று நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் நீங்கள் புகார் கொடுத்தால் அந்த 3 கொலுசுகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வக்கீல்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தயாரா? என போலீசார் கேட்டுள்ளனர். இதனால் தங்கள் கொலுசு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் புகார் கொடுக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இதனால் மோசடி செய்த கும்பலை வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் விட்டு விட்டனர். பழங்குடியின மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் திருடர்களை விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள்.
    • பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது.

    பெரியகுளம்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 24-ந்தேதி காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்து தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். அரசியலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இக்கட்சியை வழிநடத்தி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி அவரது துக்கத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின் போது ஓ.பன்னீர்செல்வம் இறுதிவரை இருந்து அவரது துக்கத்தில் பங்கெடுத்தார். தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர். பின்னர் உணர்ந்து கொண்டார்.

    பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தட்டச்சு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
    • மாயமானவர்களை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகுகுமார்(34). இவர் கடந்த 4 வருடங்களாக உ.அம்மாபட்டிைய சேர்ந்த வனராஜ் என்பவருடன் சேர்ந்து தேங்காய் வியாபாரம் பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அழகுகுமார் சம்பவத்தன்று வீட்டைவிட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் சி.எஸ்.ஐ தெருவை சேர்ந்த சத்தியநாதன் மகள் ரிதன்யா(17). பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த மாணவி மற்றும் பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகள் அம்பிகா (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கூலி வேலை பார்த்து வந்த சுப்பிரமணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு தனது மகளை அழைத்து சென்றார்.

    அதன்பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த மகேஷ்வரன் மகன் சுந்தரபாண்டியன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்தார். அப்போது கடைக்கு செல்வதாக கூறி சென்ற சுந்தரபாண்டியன் மாயமானார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சுகுமார் மகன் ரஞ்சித்குமார் (19). இவர் தனது பெற்றோரிடம் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் வாங்கி தர மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அதன்பிறகு எங்கே சென்றார் என தெரிய வில்லை. இது குறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 9ம் வகுப்பு படித்து வந்தா மாணவரும், குடி பழக்கம் உள்ளவரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
    • சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை

    தேனி:

    தேனி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமரன் மகன் தனுஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலேயே தனுஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது37). இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்த சந்திப்பில் இந்த ஆண்டு பள்ளிக்கு செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் நிதி திரட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக சத்துணவு கூடம் அமைத்து தந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பழமை வாய்ந்த அரசு நிதி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 1972 -73 ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பின் 2-வது ஆண்டு சந்திப்பு நடைபெற்றது.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னால் கடந்த ஆண்டு இதே நாள் முதலாம் சந்திப்பில் மகிழ்ந்த மாணவர்கள் 2-வது ஆண்டு சந்திப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    65 வயதை தாண்டிய அனைவரும் பள்ளிக்குள் 15 வயது மாணவ-மாணவியர்களாய் தங்களை நினைத்து நெகிழ்ந்தனர். இந்த சந்திப்பில் இந்த ஆண்டு பள்ளிக்கு செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த ஆண்டு சந்திப்பில் திட்டமிட்டபடி தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலம் ரூ. 5 லட்சம் நிதி திரட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக சத்துணவு கூடம் அமைத்து தந்தனர்.

    இந்த ஆண்டு தாங்கள் கட்டித் தந்த சத்துணவு கூட கட்டிடத்திற்கு முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் நினைவுகளைபகிர்ந்து கொண்டனர்.

    தங்கள் காலத்திற்குப் பின்னும் கட்டித் தந்த இந்த கட்டிடம் பெயர் சொல்லும் என்று நெகிழ்வுடன் கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ராமசுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி, நட்பூஸ் 1972-73 முன்னாள் மாணவர்கள் சங்க அமைப்பின் செயலாளர் சையது இப்ராஹிம், பொருளாளர் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயபாஸ்கரன் பாண்டியன், கண்மணி சிவக்குமார் முருகராஜ், முன்னாள் நண்பர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    • அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 3 புலிகள் பசுவை கொன்று இழுத்து சென்றது பதிவாகி இருந்தது.
    • புலிகள் நடமாட்டத்தால் ஏல தோட்டத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைப்பகுதியில் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இதனையொட்டி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் மிளகு, தேயிலை பயிரிட்டுள்ளனர்.

    இந்த தோட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று திரும்புகின்றனர். குமுளி அருகே வண்டிபெரியாறு பகுதியில் அலைக்சாண்டர் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டம் உள்ளது. இங்கு மாட்டு கொட்டகை அமைத்து பசுக்களை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ஒரு பசு வன விலங்குகள் தாக்கி இறந்து கிடந்தது. மற்றொரு பசு காயம் அடைந்திருந்தது. எனவே பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 3 புலிகள் பசுவை கொன்று இழுத்து சென்றது பதிவாகி இருந்தது.

    மேலும் காமிராவில் பதிவான புலிகள் தாய் மற்றும் குட்டிகளாக இருக்கலாம். இந்த புலிகளை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    புலிகள் நடமாட்டத்தால் ஏல தோட்டத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்

    • நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மை சமூகத்தினருக்கு வங்கி கடன் வழங்க நாளை (28-ந் தேதி) 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மை சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தனி நபர் கடன், குழுகடன், கறவை மாட்டு கடன், சிறு குறு விவசாயிகளுக்கு நீர் பாசன கடன், கைவினைஞர்களுக்கு தொழில்கடன், கல்விக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க தேனி அல்லிநகரம், போடி ஆகிய இடங்களில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கி, ஆண்டிபட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    கடன் உதவி பெற விரும்பும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ரூ.25 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர் ஒருவரும், ரூ.50 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 பேரும் பிணை கையொப்பமிட வேண்டும். ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவதற்கு கடன் தொகைக்கு இணையாக இரு மடங்கு சொத்து அடமானம் சமர்ப்பிக்க வேண்டும்.


    கல்விக்கடன் பெறுவதற்கு கல்வி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி உண்மைச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
    • அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் இலவ மரம் வைத்து பராமரித்து வருகின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் அதிக அளவு இலவம்பஞ்சு விளை விக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

    கடந்த ஆண்டு 1 கிலோ இலவம் பஞ்சு ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.60க்கு மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.

    இதனால் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். அவை தாமாக உதிர்ந்து கிழே விழுந்து வெடித்து வருகிறது. இலவம் பஞ்சை பிரித்து அதனை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு செல்கின்றனர்.

    பல இன்னல்களுக்கிடையே இதனை கொண்டு செல்லும் போது உரிய லாபம் கிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    • மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
    • குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் மூலிகை கலந்து வரும் தண்ணீரில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் புனிதநீராடி செல்கின்றனர். தற்போது மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மேகமலை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் சுருளிஅருவியில் குறைந்தஅளவே தண்ணீர் வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு படையெடுத்தனர். ஆனால் அங்கு குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி அருகே காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ெதரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட்டு பயடைந்து வருகின்றனர்.

    மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
    • பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள இல்லத்தில் பழனியம்மாள் உடலுக்கு இறுதி அஞ்சலி

    தேனி:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95), நேற்று இரவு காலமானார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து சென்னையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு வந்து தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

    தாயாரை இழந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

    பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலுக்கு இன்று காலையில் இருந்தே அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அமமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி, மகாராஜன் எம்எல்ஏ, தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    அதன்பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல், வடகரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார்.

    ×