என் மலர்tooltip icon

    தேனி

    • கால்நடைகளுக்கு மர்ம நோய் பாதித்து வருகிறது என கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
    • பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் என மொத்தம் 7 மழை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மேலும் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் பசு மாடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து இறந்து வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கால்நடைகளுக்கு கடந்த சில நாட்களாக மர்ம நோய் பாதித்து வருகிறது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    தினந்தோறும் வீடுகளில் இறந்து வரும் பசு மாட்டை உள்ளூர் இளைஞர்கள் மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று புதைத்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

    இது வரை 20க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பலியாகியுள்ளது. எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இறந்த பசுமாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார்.
    • சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோவில் செல்லும் சாலையில் காகம்பாறை மலையடிவாரப்பகுதி உள்ளது. போடி கரட்டுப்பட்டியை சேர்ந்த பவுன்பாண்டி என்பவர் தான் வளர்த்து வந்த 2 நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு பயிற்சி அளிப்பதற்காக இங்குள்ள தனது உறவினர் வீட்டு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று பயிற்சிக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜல்லிக்கட்டு மாடு மாயமானது. இதனைதொடர்ந்து அந்த மாட்டை பவுன்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மாடு மலைஉச்சியில் மாந்தோப்பு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பவுன்பாண்டி குரங்கனி போலீசில் புகார் அளித்தார். மாடு கட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு காணவில்லை.

    மேலும் அதன் சதை பகுதி முற்றிலும் எடுக்கப்பட்டுள்ளது. கயிறு எரிந்த நிலையில் உள்ளது. எனவே இந்த மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாட்டின் இறைச்சி பகுதி வெட்டி எடுக்கப்பட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அது கொலை செய்யப்பட்டது தெரியவரவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
    • மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி, மே.12-

    தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஆசாரி தெருவை சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீதேவி(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • தீ வேகமாக பரவி அறை முழுவதும் பரவியதும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இருந்த போதும் அறையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமாகியது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி புதூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காபி சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் விவசாயி களிடம் காபி கொட்டை களை வாங்கி சுத்திகரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வந்தனர். இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் வாங்கி பயன்படுத்த ப்பட்டன. பயன்பாட்டுக்கு வந்து சில ஆண்டுகள் மட்டுமே இயங்கி வந்த இம்மையம் பின்னர் செயல்படாமல் முடங்கியது.

    இதனால் இந்த மையம் பாழடைந்து காணப்பட்டது. இதில் ஒரு அறையில் பழைய சாக்குகள் மற்றும் பயன்படுத்த முடியாத இரும்பு தளவாடங்கள், மின் கலன்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த அறையில் திடீரென தீ பிடித்தது. இதில் அறையில் இருந்த மின் கலன்கள் வெடித்து சிதறின. சாக்கு பைகளும் தீ பிடித்து எரிந்தது.

    இந்த தீ வேகமாக பரவி அறை முழுவதும் பரவியது. இது குறித்து போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாண்டியராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் அறையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமாகியது.

    இந்த அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே வேண்டுமென்றே யாரேனும் இந்த மையத்துக்கு தீ வைத்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமிண்ட்சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி , பாலாஜி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் அறிவுசார்மையங்கள் கட்டுதல், உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு சந்தைகள் அமைத்தல் , சாலைவசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், மன்றத்தலைவர்கள் கவியரசு, மிதுன்சக்கர வர்த்தி, செயல்அலுவலர் விஜயலட்சுமி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர்.
    • தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்திகிராமம், காமராஜபுரம், அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியை ஸ்ரீவில்லிபுதூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அறிவி ப்பிற்கு பின்னர் வனத்துறையினர் மலை க்கிராம பொது மக்களுக்கு பல்வேறு கட்டு ப்பாடுகளை விதித்துள்ளனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைக்கிரா மங்களில் சாக்கடை வடிகால், சிமெண்டு ரோடு உள்ளிட்ட எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதனால் மலைக்கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே கிராமங்களில் அமைக்கப்ப ட்டிருந்த சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை வடிகால்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைப்பதற்கு கூட வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மலைக்கிராம பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வருசநாடு அருகே காந்திகிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை தொடர் மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனை சீரமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்காத காரண த்தால் தற்போது சிமெண்டு சாலை முழுவதுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. அதேபோல இரவு நேரங்களில் பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் விழுந்து காயமுற்று வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிரா மங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர் தினந்தோறும் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு புல் அறுக்க செல்வது வழக்கம். நேற்று காலையில் புல் அறுக்க சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். வடப்புதுப்பட்டி அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள வாழைத் தோட்டத்தில் செல்வி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அல்லி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததுடன் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இருளப்பன் (62) என்பவரிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்காதல் பிரச்சினையில் செல்வி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து இருளப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் செல்விக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது. இதனால் என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். நேற்று புல் அறுக்க சென்றபோது அவரிடம் நைசாக பேசி உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தேன். பின்னர் வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்றபோது அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்து கொலை செய்தேன். வெளியூர் தப்பி செல்ல நினைத்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இருளப்பனை கைது செய்தனர்.

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.80 அடி, வரத்து 413 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2221 மி.கனஅடி.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.30 அடி, வரத்து 31 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.88 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடைமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆண்டிபட்டி, அருகில் உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம், மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிடுகிடுவென சரிந்தது.

    இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. நேற்று காலை 229 கனஅடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 784 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2409 மி.கனஅடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.80 அடி, வரத்து 413 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2221 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.30 அடி, வரத்து 31 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.88 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • நாகபிரபு தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
    • தாய்மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி அருகே உள்ள தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகவேல் மகன் நாகபிரபு (வயது 27). விவசாயி. இவர் தனது தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அவருக்கு நாகபிரபுவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இருந்தபோதும் வெளியே வரும் சமயங்களில் தனது மாமன் மகளை கையை பிடித்து இழுத்து நாகபிரபு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது தந்தையிடம் அவர் கூறினார்.

    நேற்று தனது மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த கருப்பசாமி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகபிரபுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகபிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மெயின் ரோடு 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 39). இவரது மனைவி செல்லப்பிரியா (32). விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று இரவு விமல் மற்றும் செல்லப்பிரியாவின் சகோதரர் செல்லப்பாண்டி (34) ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது செல்லப்பாண்டி தனது தங்கையின் நடவடிக்கை குறித்து விமலிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு விமல் உன் தங்கையை என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தங்கையிடம் செல்லப்பாண்டி எனக்கு சேர வேண்டிய நகையை கொடுத்து விட்டு உன் கணவனுடன் கேரளாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகிய 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    • குடிபோதையில் இருந்தவர் தனது தெருவுக்கு எப்போது தண்ணீர் வரும் என கேட்டுள்ளார்.
    • குடிபோதையில் இருந்தவர் பேரூராட்சி ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கேட் வால்வையும் உடைத்து சேதப்படுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் குடிநீர் பணியாளராக பணிபுரிந்து வருபவர் தங்கராஜ் (வயது 58). இவர் சம்பவத்தன்று மாரியம்மன் கோவில்பட்டி நாடக மேடை அருகே தண்ணீர் திறந்துவிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் குடிபோதையில் தனது தெருவுக்கு எப்போது தண்ணீர் வரும் என கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த கணேசன் பேரூராட்சி ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கேட் வால்வையும் உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராவணா விஜயலட்சுமி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பூதிபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான வாழையாறு குடிநீர் மின்னேற்று நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் என தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீரபாண்டி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • வீரபாண்டி வழியாக செல்லும் வாகனங்கள் கம்பம், குமுளிக்கு உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், சின்னமனூர் வழியாக செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே வீரபாண்டியில் உள்ள பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. 16-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவிற்கு தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

    வேண்டுதல் நிறைவேறியவுடன் அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் வீரபாண்டி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி வழியாக செல்லும் வாகனங்கள் கம்பம், குமுளிக்கு உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், சின்னமனூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கம்பத்தில் இருந்து தேனி வரும் வாகனங்கள் உப்பார்பட்டிவிளக்கு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் வழியாக தேனி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

    ×