என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
போடி அருகே செயல்படாத காபி சுத்திகரிப்பு மையத்தில் தீ விபத்து
- தீ வேகமாக பரவி அறை முழுவதும் பரவியதும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- இருந்த போதும் அறையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமாகியது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காபி சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் விவசாயி களிடம் காபி கொட்டை களை வாங்கி சுத்திகரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வந்தனர். இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் வாங்கி பயன்படுத்த ப்பட்டன. பயன்பாட்டுக்கு வந்து சில ஆண்டுகள் மட்டுமே இயங்கி வந்த இம்மையம் பின்னர் செயல்படாமல் முடங்கியது.
இதனால் இந்த மையம் பாழடைந்து காணப்பட்டது. இதில் ஒரு அறையில் பழைய சாக்குகள் மற்றும் பயன்படுத்த முடியாத இரும்பு தளவாடங்கள், மின் கலன்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த அறையில் திடீரென தீ பிடித்தது. இதில் அறையில் இருந்த மின் கலன்கள் வெடித்து சிதறின. சாக்கு பைகளும் தீ பிடித்து எரிந்தது.
இந்த தீ வேகமாக பரவி அறை முழுவதும் பரவியது. இது குறித்து போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாண்டியராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் அறையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமாகியது.
இந்த அறையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே வேண்டுமென்றே யாரேனும் இந்த மையத்துக்கு தீ வைத்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






