என் மலர்tooltip icon

    சிவகங்கை

    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, பெரியகோட்டை, வேம்பத்தூர், வி.புதுக்குளம் மற்றும் மிக்கேல்பட்டினம், கல்லூரணி, பாப்பாங்குளம், இந்திராநகர், லட்சுமிபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதியில்   அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் சுற்றுபயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளைகேட்டார்.     

    அப்பகுதியில் 100 நாள்வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த    பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

    அப்போது குடிநீர் தட்டுப்பாடு   உள்ளதாகவும், எனவே தட்டுப்பாடுயின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை     எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

    அதற்கு பதில் அளித்த செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குடிநீர் பிரச்சனை குறித்து  மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    அப்போது மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், வடக்கு  ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    தேவகோட்டையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலை பேரணியை தடுத்ததை கண்டித்தும் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். நகரத்தலைவர் ரிஷிபாலகிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் ஏலப்பன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். 

    மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை பஸ் நிலையத்தில் மறியல் செய்யப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    முன்னதாக தியாகிகள் பூங்காவில் இருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பஸ் நிலையம் வாசலில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர். 

    இதில் இறகுசேரி காசிராஜா, புதுகுறிச்சி ராமலிங்கம், இருமதி முத்துராமலிங்கம், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    மறியலில் ஈடுபட்டவர்களை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    நெற்குப்பையில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நவனி கண்மாய் சுமார் 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து பாசனம் பெறும் ஆயக்கட்டு தாரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அதிகப்படியான தண்ணீர் கண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் வந்தபோதிலும் ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேல மரங்களால் கண்மாய் முழு கொள்ளவை எட்ட முடியாமல் கலிங்குகளின் பாதை வழியாக அதிகப்படியான தண்ணீர் வீணாக சென்று விட்டது என இந்தப்பகுதி விவசாயிகள் குறை கூறி னர். 

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கண்மாயின் கரைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு, தோட்டம் முதலிய ஏனைய காரணங்களுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 14-க்கும் மேற்பட்ட வர்களுக்கு  ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளும்படி நீர்வள பாசன ஆதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

    இந்தநிலையில் நீர்வள ஆதார உதவி பொறியாளர் நாகராஜன் வருவாய் துறையினர் உதவியோடு ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட போதிலும் ஆக்கிரமிப்புக்கு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த வேப்பமரம், வாழைமரம், எலுமிச்சை, கொய்யா, போன்ற பல மரங்களும் இன்னும் ஏனைய பூச்செடி களும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. 

    இதுகுறித்து உதவி பொறியாளர் கூறுகையில் தொடர்ந்து நீர்நிலைப் பகுதிகள், வரத்து கால்வாய்க ளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு படிப்படியாக விரைந்து மீட்கப்படும் என்றார். 

     இதில் நீர்வள பாசன உதவியாளர் முரளி, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்களான ரிஹானா பேகம், முனிஸ் குமார், கிராம உதவியாளர் முகமது அலி, மற்றும் பாதுகாப்பு பணிக்காக நெற்குப்பை காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் 4-ந் தேதி தொடங்குகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்  கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி வகுப்பு சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெறுகிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) என மொத்தம் 17 நாட்கள் (100மணி நேரம்) பயிற்சி வகுப்பு நடைபெறும். 

    பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பயிற்சியினை முடித்தவர்கள் அரசு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளாராக பணியில் உள்ளனர். 

    பயிற்சியில் சேர குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஆண், பெண் இருபாலரும் எந்த பகுதியில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் தொடர்ப்புக்கு 04575 - 243995, 79048 70745 மற்றும் 9786750554 ஆகிய தொலைபேசி எண்களிலும்   தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி  நடைபெற்றது. 

    இதில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும்,  பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும்  குடும்ப அட்டைகளை வழங்கினார். 

    இதில்   மேற்கு  ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், வடக்கு ஒன்றியக்  செயலாளர்  தமிழ்மாறன் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள்,   பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
    தேவகோட்டை நகரில் மூடப்படாத ஆழ்துளை கிணறால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
    தேவகோட்டை,

    நாட்டின் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நவீன காலத்திலும் ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்பது என்பது சிக்கலாக உள்ளது. எனவே அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி பயன் பாடில்லாத ஆழ்துளை கிணற்றை மூடவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகராட்சியான தேவகோட்டை நகரில் புதிதாக இடம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்த நிலையில் அருணகிரிபட்டினம் தெற்குத் தெருவில் வீட்டு மனை இடத்தில் புதிதாக வீடு கட்டி வரும் ஒரு நபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போர்வெல் நிறுவனத்திடம் ஆழ்துளை கிணறு அமைக்க பணியினை கொடுத்துள்ளார். அங்கு ஆழ்குழாய் கிணறு பணிகள் முடிவுபெறும் தருவாயில் இருக்கும்போது இடத்தின் உரிமையாளர் வந்து பார்த்த போது ஆழ்துளை கிணறு போடப்பட்ட இடம் அடுத்தவர் இடத்தில் உள்ளதால் அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே போர்வெல் நிறு வனம் 200 அடி ஆழத்திற்கு மேல் அந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பணியை நிறைவு செய்தனர். 

    ஆனால் தவறாக போர்வேல் போட்ட இடத்தினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றது. இதுகுறித்து உரியவர்களிடம் தெரிவித்தும் ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை. 

    குழந்தைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மூட ப்படாத ஆழ்துளை கிணற்றால் உயிர்பலி விபத்து விபத்து ஏற்படும் முன் கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட போர்வெல் நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேவகோட்டை அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே  உள்ள கண்டதேவி கிராமத்தைச் சேர்ந்த ராஜு மகன் ஞானசுந்தர் (வயது 30). இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன், ஒரு மாதமான பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் மாரிமுத்து (65) என்பவருக்கும், இவருக்கும்  அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. நேற்று இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

    இதில் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஞானசுந்தரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், ஆறாவயல் சார்பு ஆய்வாளர் மருது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஞானசுந்தர் அளித்த வாக்குமூலத்தில் மாரிமுத்து அவரின் மனைவி வள்ளிக்கண்ணு மற்றும் மகன்கள் வெங்கடாசலம் முத்து ஆகியோர் தன்னைப் பிடித்து கொண்டு கத்தியால் தலையில் வெட்டியதாக கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    திருப்பத்தூர் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி   ஆய்வு செய்தார். 

    ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு ஒதுக்கப்படும் திட்ட நிதிகள் பற்றிய  விபரம், பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பீடு,  முடிவுற்ற பணிகளுக்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, பிற துறைகளுக்கு கட்ட வேண்டிய கட்டணம், ஆக்கிரமிப்பு குறித்த விவரம், அவைகள் அகற்றப்பட்ட நிலவரம், மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு வழக்குகள், கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர், பணியாளர்களின் பணிவரன்முறை, நிலுவையிலுள்ள விவரம், பணியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டார். 

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை  தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் முதலியவற்றை ஆய்வு செய்து அது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். 

    அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட உள்ள அலுவலகத்திற்கான இடம், அளவீடு, இடம்பெற வேண்டிய அலுவலகங்கள் அதற்கானவசதிகள் போன்றவற்றிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்தல் குறித்து கேட்டறிந்ததுடன்   கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள இடத்தையும்  பார்வையிட்டார்.

    உதவி இயக்குனர் குமார், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள்   உடனிருந்தனர்.
    சிவகங்கையில் நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியை தூய்மைமிகு நகராட்சியாக மாற்றுவதற்காக நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காந்தி வீதியில் நடந்த ஆய்வில் 595 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

     நேற்று நேரு பஜார் வீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சில வியாபாரிகள் கடைகளை அடைத்துக்கொண்டு நகராட்சி ஊழியர்களை   சோதனை செய்யவிடாமல் தடுத்ததுடன்,   வாக்குவாதத்தில் ஈடுபட்பட்டனர். 

    மேலும் சாலையில் வியாபாரிகள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து நடந்த சோதனையில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். 

    மேலும் கடைகளுக்கு அபராதமும் விதித்து சென்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,  சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்ச்சிகளுக்கும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கப் மூலம் டீ, காப்பி தருகின்றனர். 

    பிளாஸ்டிக் உற்பத்தி செய்து மாவட்டத்தின் உள்ளே வருவதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை வேண்டும். எங்களைப் போன்று சிறு, குறு வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர் இல்லாமல் பார்சல் செய்து எவ்வாறு கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். 

    எனவே நகராட்சி நிர்வாகம்  தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி நகரசபை கூட்டத்தில் வளர்ச்சி பணிகளை பாராட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

    தலைவர் முத்துதுரை பேசுகையில், பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் ரூ. 4 கோடிக்கும் மேல் பணிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மட்டும் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்துள்ளது. மற்ற நகராட்சிகளை காட்டிலும் காரைக்குடி நகராட்சி பணிகளில் சாதனை புரிந்துள்ளது என்றார். 

    3-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மைக்கேல் பேசுகையில், அய்யனார்புரம் நல்ல தண்ணீர் ஊரணியில் மீன், இறைச்சி பெட்டிகளை கழுவுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.ஞாயிற்றுக் கிழமைகளில் சாலையோர மீன் கடைகளால் வாட்டர் டேங்க் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து அபாயம் ஏற்படுகிறது. ஆறுமுக நகர் மையப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்றார்.

    4-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தெய்வானை பேசும்போது, செக்காலை சிவன் கோவில் ஊரணியை சுத்தப்படுத்தி சுற்றிலும் நடைபாதை ஏற்படுத்த வேண்டும்.கல்லூரி சாலையில் ராஜராஜன் பள்ளி அருகில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    11-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் மெய்யர் பேசுகையில், தேவகோட்டை நகராட்சியில் குப்பைகளை போடுவதற்கு இரண்டரை ஏக்கர் இடம் ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் குப்பைகளை காரைக்குடி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.இதை தடுக்க வேண்டும். பாதாள் சாக்கடை பணிகள் முடிவடையாமல் எந்த அடிப்படையில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    14-வது வார்டு உறுப்பினர் பசும்பொன் மனோகரன் பேசும்போது, பெரியார் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து போடப்பட்டு வரும் சாலை தரமற்ற பொருட்களை கொண்டு போடப்பட்டு வருவதால் தடுத்து நிறுத்தியுள்ளோம். திகாரிகள் உடனடியாக பொருட்களின் தரத்தை பரிசோதித்து தரமான பொருட்களை பயன்படுத்த ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்த வேண்டும்.எனது வார்டில் உள்ள தாய்சேய் நல விடுதி மற்றும் பூங்காவை செப்பனிட வேண்டும்.சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

    7-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் குருபாலு பேசும்போது, மின்விளக்குகள் எரியவில்லை என்றால் பணியாளர்கள் உடனடியாக சரி செய்வதில்லை. வீட்டு வரி வசூலிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் புதிதாக வீடு கட்டியவர்கள் மின் இணைப்பு வாங்க சிரமப்படுகிறார்கள் என்றார்.

    6-வது வார்டு உறுப்பினர் மங்கையர்க்கரசி பேசுகையில், போலீஸ் காலனி கவாத்து மைதானம் அருகில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். புதிதாக போடப்பட்ட சாலைகளின் மட்டம் குடியிருப்புகளை விட உயரமாக உள்ளதால் முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார். 

    துணைத்தலைவர் குணசேகரன் பேசும்போது, அரசிடம் இடம் கேட்டு நகராட்சியின் சார்பில் சோலார் மின் அமைப்பை ஏற்படுத்தி நமது மற்றும் சுற்று வட்டார ஊராட்சிகளின் மின் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்றார்.

    மேலும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற நிதி ஒதுக்கியமைக்கு தலை வருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலர் சுமதி, மேலாளர் விஜயலெட்சுமி உள்பட பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    மானாமதுரை, திருப்புவன பகுதியில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
    மானாமதுரை

    பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தினார்.   இந்த கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை தேவர் சிலை முன்பு சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இதில்  மாவட்டச் செயலாளர் சங்கர சுப்ரமணியன்,   நகர தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    திருப்புவனத்தில் சந்தைக்கடை பகுதியில் மறியல் செய்த பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். 

    இதில் திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரைசெல்லும் புதிய ரெயிலுக்கு மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயர்  காலத்தில்  இருந்து மானாமதுரை, காரைக்குடி என  2 பெரிய ஜங்ஷன் ரெயில் நிலையங்கள்  இருந்தன. அப்போதைய மீட்டர் கேஜ்  ரெயில் பாதையில் ஏராளமான ரெயில்  வசதிகள் இருந்தது. 

    நாடுமுழுவதும்  அகலரெயில் பாதைகளாக மாற்றம் செய்து தற்போது  குறைந்த அளவு  ரெயில்கள் செல்கின்றது. தற்போது காரைக்குடி -மானாமதுரை வரை மின்  பாதை  பணிகளும் நடைபெற்றுவருகிறது. 

    காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை   செல்ல தென்மாவட்ட பயணிகளுக்கு  பயணநேரம்குறையும் வகையில்  விருதுநகர்- மானாமதுரை இடையே  ரெயில் பாதை அமைத்து சென்னைக்கு  இணைப்பு ரெயிலாக மானாமதுரை வரை சென்று வந்தது. தற்போது அந்த ரெயில் பாதையில் செங்கோட்டை-சென்னை வரை வாரந்திர ரெயில்  மட்டுமே செல்கிறது. தினசரி ரெயில் சேவை கிடையாது.
     
    தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாரம்ஒருநாள் செல்லும் சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அந்த ரெயில் வருகிற ஜூன் 4-ந் தேதி எர்ணாகுளத்தில்இருந்து மதியம் புறப்பட்டு மறுநாள் காலை வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரை  செல்கிறது. 

    இதற்காக ரெயில் நின்று  செல்லும் ரெயில் நிலையங்கள்பட்டியலை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான ஜங்ஷன் ரெயில் நிலையங்கள் தென்காசி, மானாமதுரை நிலையங்களில்  இந்த ரெயில்  நிற்காது. இதுதவிர விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகங்கை மாவட்ட தலைநகர் சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளது. 

    இந்தியாவில்  முக்கியமான புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் வடமாநிலங்களுக்கு  செல்லும் அனைத்து  அதிவிரைவு  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களில்  நின்று செல்கிறது. ராமநாதபுரம் பகுதியில் இருந்தும்   ரெயில்நிலையங்கள் இல்லாத ஊர்களான கமுதி,முதுகுளத்தூர், இளையான்குடி,  பார்த்திபனூர், வீரசோழன், அபிராமம்  போன்ற  ஊர்களில்  இருந்தும் ஏராளமான பயணிகள் சென்னை  மற்றும்  பிறமாநிலங்களுக்கு செல்ல மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு  வருகின்றனர். 

    தற்போது புதிதாக விடப்பட்டுள்ள வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயிலை  மானாமதுரை, சிவகங்கையில் நின்று  செல்ல மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    மீட்டர்கேஜ் பாதை   இருந்தபோது கொல்லத்தில் இருந்து  நாகூர் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி  தினமும் இருந்தது. அகலரெயில்பாதை வந்த பிறகு ரெயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதி கொண்ட மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்  நிற்காமல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகளை புறக்கணித்து  செல்வதா?  என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
      
    இதுபற்றி ஓய்வுபெற்ற ரெயில் என்ஜின் ஓட்டுநர், மாவட்ட  காங்கிரஸ் மனித உரிமைகள் தலைவர் ராஜாராம்  கூறுகையில்,  தமிழகத்தில்  அதிக அளவில் ரெயில்சேவைவசதி  குறைக்கப்பட்டு உள்ளது.   

    வட இந்தியாவில் அதிக   அளவில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்  வசதிகள்  தினசரி உள்ளது. ஆனால் தமிழகத்தில் போதுமான ரெயில் சேவைகள் இல்லை.  கொரோனாகாலத்தில் நிறுத்தப்பட்ட  பயணிகள் ரெயில் சேவை பலநகரங்களில் தொடங்கப்படவில்லை.  

    தற்போது விடப்பட்ட புதிய ரெயில் கேராளாவில்  அதிக ஊர்களில் நின்று செல்லும் வகையிலும், தமிழகத்தில் முக்கியமான  ரெயில் நிலையங்களான  தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய  ஊர்களில் ரெயில் நிற்காது என்றும்  அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் சிவகங்கை  மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து  உள்ளனர்.

    இது குறித்து மதுரை ரெயில்வே  கோட்ட அதிகாரிகள் புதிய ரெயிலை   தென்காசி,  மானாமதுரை, சிவகங்கை  ஊர்களில் நின்று செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து ரெயில்வே வாரிய  துறைக்கும் மனுக்கள் அனுப்பி வைக்க பட்டு உள்ளன.
    ×