search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி நகரமன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.
    X
    காரைக்குடி நகரமன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.

    வளர்ச்சி பணிகளை பாராட்டி கவுன்சிலர்கள் பேச்சு

    காரைக்குடி நகரசபை கூட்டத்தில் வளர்ச்சி பணிகளை பாராட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

    தலைவர் முத்துதுரை பேசுகையில், பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் ரூ. 4 கோடிக்கும் மேல் பணிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மட்டும் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்துள்ளது. மற்ற நகராட்சிகளை காட்டிலும் காரைக்குடி நகராட்சி பணிகளில் சாதனை புரிந்துள்ளது என்றார். 

    3-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மைக்கேல் பேசுகையில், அய்யனார்புரம் நல்ல தண்ணீர் ஊரணியில் மீன், இறைச்சி பெட்டிகளை கழுவுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.ஞாயிற்றுக் கிழமைகளில் சாலையோர மீன் கடைகளால் வாட்டர் டேங்க் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து அபாயம் ஏற்படுகிறது. ஆறுமுக நகர் மையப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்றார்.

    4-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தெய்வானை பேசும்போது, செக்காலை சிவன் கோவில் ஊரணியை சுத்தப்படுத்தி சுற்றிலும் நடைபாதை ஏற்படுத்த வேண்டும்.கல்லூரி சாலையில் ராஜராஜன் பள்ளி அருகில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    11-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் மெய்யர் பேசுகையில், தேவகோட்டை நகராட்சியில் குப்பைகளை போடுவதற்கு இரண்டரை ஏக்கர் இடம் ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் குப்பைகளை காரைக்குடி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.இதை தடுக்க வேண்டும். பாதாள் சாக்கடை பணிகள் முடிவடையாமல் எந்த அடிப்படையில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    14-வது வார்டு உறுப்பினர் பசும்பொன் மனோகரன் பேசும்போது, பெரியார் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து போடப்பட்டு வரும் சாலை தரமற்ற பொருட்களை கொண்டு போடப்பட்டு வருவதால் தடுத்து நிறுத்தியுள்ளோம். திகாரிகள் உடனடியாக பொருட்களின் தரத்தை பரிசோதித்து தரமான பொருட்களை பயன்படுத்த ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்த வேண்டும்.எனது வார்டில் உள்ள தாய்சேய் நல விடுதி மற்றும் பூங்காவை செப்பனிட வேண்டும்.சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

    7-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் குருபாலு பேசும்போது, மின்விளக்குகள் எரியவில்லை என்றால் பணியாளர்கள் உடனடியாக சரி செய்வதில்லை. வீட்டு வரி வசூலிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் புதிதாக வீடு கட்டியவர்கள் மின் இணைப்பு வாங்க சிரமப்படுகிறார்கள் என்றார்.

    6-வது வார்டு உறுப்பினர் மங்கையர்க்கரசி பேசுகையில், போலீஸ் காலனி கவாத்து மைதானம் அருகில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். புதிதாக போடப்பட்ட சாலைகளின் மட்டம் குடியிருப்புகளை விட உயரமாக உள்ளதால் முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார். 

    துணைத்தலைவர் குணசேகரன் பேசும்போது, அரசிடம் இடம் கேட்டு நகராட்சியின் சார்பில் சோலார் மின் அமைப்பை ஏற்படுத்தி நமது மற்றும் சுற்று வட்டார ஊராட்சிகளின் மின் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்றார்.

    மேலும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற நிதி ஒதுக்கியமைக்கு தலை வருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலர் சுமதி, மேலாளர் விஜயலெட்சுமி உள்பட பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×