என் மலர்tooltip icon

    சிவகங்கை

    ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மதுரையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள காதி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். 2 நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 132 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயராஜ் சோமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான தனி போலீஸ் படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் நாமக்கல் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலருக்கு காரைக் குடி சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக மதுரை கூடல்நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 36), பாண்டித்துரை (26) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் காதிநகர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 132 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மானாமதுரை அருகே இடையூறு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    மானாமதுரை:

    மானாமதுரை டவுன் பகுதிகளில் ரோடுகளை ஒட்டியுள்ள டீ, பலசரக்கு கடைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதையடுத்து கடைகளுக்கு முன்பாக ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு 5 மாதத்திற்குபின் நேற்று காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரெயில் குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
    காரைக்குடி:

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று வந்த ரெயில் பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிய நிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலங்களுக்கிடையே சிறப்பு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    தமிழக அரசு நேற்று முதல் பொதுபோக்குவரத்திற்கு தளர்வுகள் வழங்கியது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக சென்னையில் இருந்து காரைக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்து நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அதிகாலை 4.55 மணிக்கு பல்லவன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் 3 குளிர் சாதன இருக்கைகள் மற்றும் 13 சாதாரண முன்பதிவு பெட்டிகளுடன் புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையம் வந்த ரெயில் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

    நேற்று சுமார் 900 இருக்கைகள் கொண்ட இந்த ரெயிலில் வெறும் 200 பயணிகள் மட்டுமே சென்றதால் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் காலியாகவே இருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஒரு ரெயில் மட்டும் தான் நேற்று முதல் சேவையை தொடங்கி உள்ளது. மீதமுள்ள ரெயில்கள் அனைத்தும் ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்புக்கு பின்னர் இயக்கப்படும் என ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 5 மாதத்திற்குபின் மீண்டும் நேற்று முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் ரெயிலில் சென்ற பயணிகள் மிகவும் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். விரைவில் பயணிகள் ரெயில், விரைவு ரெயில், வாராந்திர சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட ரெயில்களை இயக்கினால் பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்திற்கும் தங்களது ரெயில் பயணத்தை தொடர முடியும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகங்கையில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது. பேரவை மாவட்ட செயலாளர் அசோகன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தற்போது அ.தி.மு.க.வில் சார்பு அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பத்தில் பெயர் பதிந்தவர்களுக்கு அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அ.தி.மு.க. கிளைகள் உள்ள அனைத்து இடங்களிலும் அம்மா பேரவை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாசறை ஆகியவைகளுக்கு தனித்தனியான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது பல கட்சிகளின் தலைவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி காணொலி காட்சி மூலம் கூட்டங்கள் நடத்தி, அத்துடன் நின்றுவிடாமல் மாவட்டம் முழுவதும் சென்று கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். அத்துடன் மாநிலம் முழுவதும் 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6 மாதம் விலையில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளார். நீங்கள் உறுப்பினர் சேர்க்கைக்கு கிராமங்களுக்கு செல்லும்போது அங்கு இளைஞர்களை சந்தித்து முதல்-அமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும்.

    இந்த கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்கூற வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், இளைஞரணி துணைச்செயலாளர் கருணாகரன், பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.எம்.எல். மாரி, முன்னாள் மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் ஒன்றிய மாணவரணி செயலாளர் குமாரகுறிச்சி விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் மாயமானார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் போலீசார் புகார் அளித்துள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ரெயில்வே சாலையில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்க்கொடி(வயது 37). இவர் தனக்கு தெரிந்தவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தனது கணவரிடமும், அவரது தாயாரிடமும் நான் வெளியூர் சென்று சம்பாதித்து வந்து கடனை அடைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன்பின் அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 

    இதுகுறித்து அவரது கணவர் நாகராஜன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடன் தொல்லையால் மாயமானவரை தேடி வருகின்றனர்.
    ஏ.சி.யில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் காற்றுச்சீரமைப்பானை அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
    காரைக்குடி:

    அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் அறிவியல் கருவி மையத்தின் இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் தொழில் முனைவு புத்தாக்க மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தின் இயக்குனர் முனைவர் இளங்குமரன் ஆகியோர் வழிகாட்டுதலில் பயிற்றுனர்கள் அழகுராமன், ஜெயமுருகன் மற்றும் மாணவர்கள் பிரதீஷ், அங்கப்பன், பரணி, படிக்காசு, அழகிரி ஆகியோர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏர்கண்டிஷனரில் உபயோகப்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்கள் கொண்ட காற்றுச்சீரமைப்பானை உருவாக்கி உள்ளனர்.

    இதனை நேரில் பார்வையிட்டு பாராட்டிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது:- உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் திவலைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் கொரோனா தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்தப்படுவதுடன் குளிர்சாதன எந்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன. இருப்பினும் நீண்ட கால உபயோகத்தில் குளிர்சாதன எந்திரங்களின் பயன்பாடு பல காரணங்களுக்காக தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    பாதுகாப்பான முறையில் குளிர்சாதன எந்திரங்களைப் பயன்படுத்த அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் உபகரணங்கள் மைய இயக்குனரின் வழிகாட்டுதலின் கீழ் தொழில் முனைவு, புத்தாக்க மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தின் மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்கள் அடங்கிய குழு இந்த புதுமையான மற்றும் குறைந்த செலவிலான புற ஊதா சி அடிப்படையிலான காற்றுச்சீரமைப்பானை உருவாக்கி உள்ளனர். இந்த கருவியை வழக்கமான குளிர்சாதன எந்திரங்களில் எளிதாக நிறுவ முடியும். கிருமி நாசினி நோக்கங்களுக்காக புற ஊதா சி கதிர்வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. புற ஊதா சி கதிர்வீச்சு மூலம் டி.என்.ஏ. கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு பாக்டீரியா வைரஸ்கள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற ஒற்றை செல் கிருமிகளை நம்பத் தகுந்த முறையில் கொல்ல முடியும்.

    இந்த காற்றுச்சீரமைப்பானில் உள்ள எல்.ஈ.டி. விளக்கில் இருந்து வெளிவரும் குறுகிய அலைநீளம் கொண்ட புற ஊதா சி கதிர்கள் 99.99 சதவீதம் பாக்டீரியா மற்றும் கொரோனா வைரசை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. வழக்கமான தொழில் நுட்பங்களை விட புற ஊதா சி எல்.ஈ.டி.களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த புதிய காற்றுச்சீரமைப்பானில் புறஊதா சி ஒளி நன்றாக பாதுகாக்கப்படுவதால் இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. எனவே இந்த புதிய புற ஊதா சி கதிர்கள் அடிப்படையிலான காற்றுச்சீரமைப்பானை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் குளிர்சாதன எந்திரங்களில் திறம்பட பொருத்தலாம். அழகப்பா பல்கலைக்கழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த காற்றுச்சீரமைப்பானை பல்கலைக்கழக துறைகள், அலுவலகங்கள், ஆய்வகங்கள் மற்றும் முக்கியமான கூட்ட அரங்குகளில் உள்ள குளிர்சாதன எந்திரங்களில் விரைவில் பொருத்த உள்ளோம்.

    இதனால் முழு அடைப்பு முடிந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு திரும்பும்போது தங்கள் கடமைகளை பாதுகாப்பான சூழ்நிலையில் நிறைவேற்ற இது உதவும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பல்கலைக்கழக பதிவாளர் குரு மல்லேஷ் பிரபு, தேர்வுக்கட்டுப்பாட்டு நெறியாளர் கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி ஆனந்தி, அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் இளங்குமரன், ஆலோசகர் தர்மலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர் அருகே இன்று நடக்க இருந்த நிலையில் திருமணத்தை அடுத்த ஆண்டு தள்ளிப்போட்டதால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே வெங்கடேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது29). கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் பெண் வீட்டார் திருமணத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்ததும் நடத்தி கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

    இதை கேட்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவி. அவரது மகன் ஜெகதீசன் (29). சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் திடீரென தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் கார் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வைரவபுரம் நேரு நகரில் வசிப்பவர் சேகர். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிநீர் வினியோக பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இருந்தபோது சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் சேகருக்கு போன் செய்து உன் மனைவியை அழைத்துக் கொண்டு உடனே அலுவலகத்திற்கு வா என்று கூறியுள்ளார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேகர் மட்டும் சென்றுள்ளார். அங்கே பாண்டியராஜன், அவரது நண்பர்கள் கணேசன், ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோர் சேகரை தனியாக அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் உன் மனைவி ஒழுங்காக வேலை செய்ய மாட்டாளா என்று கூறி ஆபாசமாக பேசி சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

    மேலும் உன் மனைவியை உடனடியாக வேலையை ராஜினாமா செய்வதாக எழுதி கொடுக்க சொல். இல்லையேல் குடும்பத்தோடு தொலைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். 

    இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    காரைக்குடி அருகே கார் டிரைவருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஊராட்சி துணைத்தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வைரவபுரம் நேரு நகரில் வசிப்பவர் சேகர். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிநீர் வினியோக பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சேகர் வீட்டில் இருந்தபோது சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் சேகருக்கு போன் செய்து உன் மனைவியை அழைத்துக் கொண்டு உடனே அலுவலகத்திற்கு வா என்று கூறியுள்ளார். 

    மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேகர் மட்டும் சென்றுள்ளார். அங்கே பாண்டியராஜன், அவரது நண்பர்கள் கணேசன், ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோர் சேகரை தனியாக அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் உன் மனைவி ஒழுங்காக வேலை செய்ய மாட்டாளா என்று கூறி ஆபாசமாக பேசி சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

    மேலும் உன் மனைவியை உடனடியாக வேலையை ராஜினாமா செய்வதாக எழுதி கொடுக்க சொல். இல்லையேல் குடும்பத்தோடு தொலைத்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சிவகங்கை:

    தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் கரு மேகங்கள் திரண்டு மழை பெய்து வருகின்றன.

    அதன்படி மதுரை நகரில் நேற்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் இதமான காற்றுடன் கருமேகம் திரண்டு வந்தன. பின்னர் 5 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நகரில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மாசி வீதிகளில் ஸ்மார் சிட்டி திட்டத்திற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே மாசி வீதிகளில் நடந்து சென்றனர். கீழவெளி வீதி, தெற்குவெளி வீதி, பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மீண்டும் இரவு 10 மணிமுதல் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

    திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இரவு நேரங்களில் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    இடையபட்டி -35.50

    தல்லாகுளம் -32.30

    மதுரை தெற்கு -35.60

    உசிலம்பட்டி -27.40

    சிட்டம்பட்டி -26.20

    ஏர்போர்ட் -24.10

    புலிப்பட்டி -23.80

    கள்ளிக்குடி -17.80

    திருமங்கலம் -15.20

    ஆண்டிபட்டி -12.80

    குப்பணம்பட்டி -10.40

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 503.10 மில்லி மீட்டர் ஆகும்.

    கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்காக ஏற்கனவே வைகை அணையில் இருந்து பெரியார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. சிவகங்கையில் நேற்று மாலை ஒரு மணிநேரமும், இரவு விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.

    காளையார்கோவில், தேவகோட்டை, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

    இதேபோல் மானாமதுரையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. 1 மணிநேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் அங்குள்ள மண்பாண்ட தொழிற்கூடங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று தொழிலாளர்கள் வேலையை தொடங்க முடியாமல் அவதி அடைந்தனர். மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    மானாமதுரையில் திருமணம் முடிந்த மறுநாளில் மணப்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்தவர், செல்வக்குமார்(வயது 27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் சுவேதா(20).

    செல்வக்குமாருக்கும், சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றார். அப்போது மணப்பெண் சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி சத்தம்போட்டுள்ளார்.

    ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சுவேதா இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ன காரணத்திற்காக சுவேதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்ததால் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இளையான்குடி அருகே மணல் அள்ளியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே கலங்காதன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கலங்காதன் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முருகன் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணல் அள்ளியதாக கல்லணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×