search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லவன் சிறப்பு ரெயில் குறைந்த பயணிகளுடன் சென்றது
    X
    பல்லவன் சிறப்பு ரெயில் குறைந்த பயணிகளுடன் சென்றது

    காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரெயில் குறைந்த பயணிகளுடன் சென்றது

    கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு 5 மாதத்திற்குபின் நேற்று காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரெயில் குறைந்த அளவிலான பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
    காரைக்குடி:

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று வந்த ரெயில் பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிய நிலையில் இருந்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலங்களுக்கிடையே சிறப்பு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    தமிழக அரசு நேற்று முதல் பொதுபோக்குவரத்திற்கு தளர்வுகள் வழங்கியது. இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக சென்னையில் இருந்து காரைக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்து நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அதிகாலை 4.55 மணிக்கு பல்லவன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் 3 குளிர் சாதன இருக்கைகள் மற்றும் 13 சாதாரண முன்பதிவு பெட்டிகளுடன் புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையம் வந்த ரெயில் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

    நேற்று சுமார் 900 இருக்கைகள் கொண்ட இந்த ரெயிலில் வெறும் 200 பயணிகள் மட்டுமே சென்றதால் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் காலியாகவே இருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஒரு ரெயில் மட்டும் தான் நேற்று முதல் சேவையை தொடங்கி உள்ளது. மீதமுள்ள ரெயில்கள் அனைத்தும் ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்புக்கு பின்னர் இயக்கப்படும் என ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 5 மாதத்திற்குபின் மீண்டும் நேற்று முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் ரெயிலில் சென்ற பயணிகள் மிகவும் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். விரைவில் பயணிகள் ரெயில், விரைவு ரெயில், வாராந்திர சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட ரெயில்களை இயக்கினால் பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்திற்கும் தங்களது ரெயில் பயணத்தை தொடர முடியும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×