என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் உதவியாளர்கள் மாணிக்கம் கருப்பையா உள்ளிட்ட தனிப்படை குழுவினர் அதிரடி சோதனை செய்ததில் பெரியார் சிலை அருகே உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி, பாரடைஸ் பிரியாணி, நிலா ரெஸ்டாரன்ட், கிச்சன் ஆகிய ஓட்டல்களில் கெட்டுப்போன சுமார் 100 கிலோ அளவிலான மட்டன், சிக்கன், மீன் போன்றவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் கூறுகையில், காரைக்குடியில் 10 ஹோட்டல்களில் சோதனை செய்ததில் மேலே குறிப்பிட்டுள்ள ஹோட்டல்களில் மக்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லாத, கெட்டுப்போன, பூஞ்சை ஏற்பட்ட, அதிகளவிலான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, உற்பத்தி தேதி இல்லாத பாக்கெட்டில் வரும் பதப்படுத்திய என பல்வேறு வகையிலான இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.
இந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் செக்ஷ 55ன் படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.மீண்டும் இந்த தவறு நிகழுமானால் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் தென்னரசு கூறுகையில், ஆரணியில் ஒரு சிறுமி இறந்ததால்தான் இப்படியான சோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே கொடுத்துள்ளார்கள்.இதைப்போன்ற தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு பெரிய அளவிலான அபராதம் விதித்து, சீல் வைத்திருக்கவேண்டும்.அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.வெறும் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே வழங்கி உள்ளது வேதனை அளிக்கிறது.இதைப் போன்ற சோதனை மீண்டும் ஒரு உயிர் பலியான பின்பு செய்யாமல் அடிக்கடி அதிரடி சோதனைகளை உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.செட்டிநாட்டின் அடையாளங்களில் முக்கியமானது செட்டிநாட்டு சமையல்.அதில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறாமல் பாதுகாப்பது அதிகாரிகளின் கடமையாகும்.மேலும் தொடர்ந்த சோதனைகளில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் உள்ள ஹோட்டல்களில் 25 கிலோ இறைச்சிகளும், காளையார்கோவிலில் உள்ள ஹோட்டல்களில் 10 கிலோ இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுடுகாட்டில் தலையில் வெட்டு காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கம்புணரியை சுற்றி பொது குளியல் தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் இந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் சிங்கம்புணரி சுடுகாட்டில் உள்ள நீர்தொட்டியில் குளிப்பார்கள்.
இன்று காலை குளிக்க சென்ற ஒருவர் அங்கு தலையில் வெட்டுக்காயத்துடன் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வாளர் சீராளன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், இறந்த நபரின் இரத்தம் இன்னும் உறையாத நிலையில் இருப்பதால் இந்த சம்பவம் அதிகாலையில் நடந்திருக்கலாம் என தெரிவித்தார்.
கொலையாளிகள் இறந்த நபரை தலையில் தாக்கிவிட்டு பின்னர் முகத்தை சிதைத்து அருகில் கிடந்த குப்பை மற்றும் துணிகளை போட்டு எரிக்க முயற்சித்துள்ளனர்.
டிப்-டாப் உடையுடன் இருப்பதால் இவர் வைத்திருந்த பணம் அல்லது நகைக்காக கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43).
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் தான் சிவகங்கை மாவட்ட மீனவரணி துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த முத்துப்பாண்டி நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது.
அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள், வாளால் முத்துப்பாண்டியை வெட்ட வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிர்பிழைக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அந்த வெறி பிடித்த கும்பல் துரத்தி சென்று முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் அவர்கள் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் தப்பிச் சென்றனர்.
இதனிடையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கொலை குறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் முத்துப்பாண்டி இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள், பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என கோஷமிட்டவாறு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முத்துப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல முடியாமல் கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் முத்துப்பாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிவகங்கை நகரில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி மீது கொலை வழக்கு, கட்ட பஞ்சாயத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணிடம் பண மோசடி செய்தது, கந்துவட்டி பிரச்சினை, இடம் விற்பதில் தகராறு என பல்வேறு புகார்கள் உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டியில் செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் முத்துப்பாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பாண்டிக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலப் பிரச்சினையால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து அவர்களை பிடிக்கும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் நகரின் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளில் கொலையாளிகள் நடமாட்டம் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முத்துப்பாண்டியை வெட்டிக் கொன்றது 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகள் பிடிபட்ட பின்பு முத்துப்பாண்டி கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
கொலையுண்ட முத்துப்பாண்டிக்கு ஸ்வேதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியைச் சேர்ந்தவர் ஆதப்பன். இவரது மனைவி இந்திரா (வயது 60). டாக்டரான இவர் மதுரையில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார்.
இன்று காலை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் வழியாக காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்றது. எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து டாக்டர் சென்ற கார் மீது மோதி அப்படியே கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய டாக்டர் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் காரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.
தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்த காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். டாக்டர் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






