search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக நிர்வாகி கொலை"

    • போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    நெல்லை:

    பாளை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 34). இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் வைத்து ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.

    இந்நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர கமிஷனருமான(பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.

    அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டராக காசிபாண்டியன் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கும், உதவி கமிஷனர் பிரதீப்புக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதுதொடர்பாக கொலை நடந்த அன்று காலை தான் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் விசாரணை நடத்தியதாகவும், அதற்கு முன்பாகவே முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் குற்றம் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
    • தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளர். திருமணம் ஆகாதவர்.

    கடந்த 30-ந்தேதி மூளிக்குளம் பகுதியில் வைத்து ஜெகனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், பாளையங்கோட்டையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், ராஜாகுடியிருப்பு விக்கி என்ற விக்னேஷ்வரன், வி.எம்.சத்திரம் வசந்த், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிமுத்து, திம்மராஜபுரம் மாணிக்கராஜா, தச்சநல்லூர் முத்துபாண்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். நேற்று காலையில் வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டையை சேர்ந்த பரமராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி ஜெகனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார், பிரபுவை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் பிரபு (46) சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் தி.மு.க. பிரமுகர் பிரபு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
    • பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). இவர் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜெகனை 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

    இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாளை பகுதியை சேர்ந்த அனீஸ் (28 ), அஜித்குமார்( 24), மூளிக்குளத்தை சேர்ந்த சந்துரு( 22), பாஸ்கர்( 22 ), ராஜா குடியிருப்பைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்( 27), வி.எம். சத்திரத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு (21)ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 6 பேரும் வெவ்வேறு காரணங்களை வாக்குமூலமாக போலீசாரிடம் கூறி வருகின்றனர். இதில் கைதான முதல் குற்றவாளியான விக்கி கூறுகையில், என்னிடம் ஜெகன் அடிக்கடி தொந்தரவு செய்யும் விதமாக பேசி வந்தார். இதனால் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். அனீஸ் கூறுகையில், என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு காரணமாக ஜெகன் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.

    மற்ற 4 பேரும் கூறுகையில், எங்கள் ஊரில் யார் பெரியவர் என்பது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை நடந்து வந்தது. மேலும் டாஸ்மாக் பார் தொடர்பாக பிரபுவிடம் அடிக்கடி ஜெகன் இடைஞ்சல் செய்யும் விதமாக நடந்து வந்தார். மேலும் ஜெகன் வேகமாக வளர்ந்து வருவது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருடன் சேர்ந்து கொலை செய்தோம் என்றனர். இவ்வாறாக கைதான 6 பேரும் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பிரபுவை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் முருகன், காசி பாண்டியன், வாசிவம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பிரபுவை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறி ஜெகனின் உறவினர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
    • ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தார்.

    இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்துக்கு சென்ற ஜெகன் தனது நண்பர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் ஜெகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், பாளை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொலை கும்பலை தேடியது. அதன் அடிப்படையில் 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ஜெகன் பா.ஜனதாவில் நிர்வாகியாக இருப்பதால் சமீப காலமாக தன்னை ஒரு பிரமுகராக வெளிக்காட்டி கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது எதிர்தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த 2002-ம் ஆண்டு அதே பகுதியில் நடந்த கொலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூளிக்குளத்தில் நடைபெற்ற கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று பிடிபட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். தகவல் அறிந்து பா.ஜனதா நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நிர்வாகிகளும் அங்கு வந்தனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளதாகவும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் எனவும் ஜெகன் தரப்பினர் போலீசாரிடம் கூறினர். அதுவரை உடலை வாங்க போவதில்லை என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

    ×