search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
    X

    நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

    • முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
    • பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). இவர் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மூளிக்குளத்தில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜெகனை 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

    இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாளை பகுதியை சேர்ந்த அனீஸ் (28 ), அஜித்குமார்( 24), மூளிக்குளத்தை சேர்ந்த சந்துரு( 22), பாஸ்கர்( 22 ), ராஜா குடியிருப்பைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்( 27), வி.எம். சத்திரத்தை சேர்ந்த வள்ளிக்கண்ணு (21)ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 6 பேரும் வெவ்வேறு காரணங்களை வாக்குமூலமாக போலீசாரிடம் கூறி வருகின்றனர். இதில் கைதான முதல் குற்றவாளியான விக்கி கூறுகையில், என்னிடம் ஜெகன் அடிக்கடி தொந்தரவு செய்யும் விதமாக பேசி வந்தார். இதனால் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். அனீஸ் கூறுகையில், என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு காரணமாக ஜெகன் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை கொலை செய்தேன் என கூறி உள்ளார்.

    மற்ற 4 பேரும் கூறுகையில், எங்கள் ஊரில் யார் பெரியவர் என்பது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சனை நடந்து வந்தது. மேலும் டாஸ்மாக் பார் தொடர்பாக பிரபுவிடம் அடிக்கடி ஜெகன் இடைஞ்சல் செய்யும் விதமாக நடந்து வந்தார். மேலும் ஜெகன் வேகமாக வளர்ந்து வருவது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருடன் சேர்ந்து கொலை செய்தோம் என்றனர். இவ்வாறாக கைதான 6 பேரும் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பிரபுவை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் முருகன், காசி பாண்டியன், வாசிவம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தி.மு.க பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பிரபுவை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறி ஜெகனின் உறவினர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை உள்ளிட்டவற்றை ஜெகனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×