search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை பா.ஜனதா நிர்வாகி கொலை: பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்.

    நெல்லை பா.ஜனதா நிர்வாகி கொலை: பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்டு'

    • போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.
    • கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    நெல்லை:

    பாளை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(வயது 34). இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் வைத்து ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பிரபு உள்பட 12 பேர் கும்பலை கைது செய்தனர்.

    இந்நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர கமிஷனருமான(பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.

    அதே நேரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டராக காசிபாண்டியன் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கும், உதவி கமிஷனர் பிரதீப்புக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதுதொடர்பாக கொலை நடந்த அன்று காலை தான் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் விசாரணை நடத்தியதாகவும், அதற்கு முன்பாகவே முறையாக விசாரணை நடத்தியிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் குற்றம் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×