என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி கொலை - 3 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43).
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் தான் சிவகங்கை மாவட்ட மீனவரணி துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த முத்துப்பாண்டி நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது.
அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள், வாளால் முத்துப்பாண்டியை வெட்ட வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிர்பிழைக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அந்த வெறி பிடித்த கும்பல் துரத்தி சென்று முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் அவர்கள் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் தப்பிச் சென்றனர்.
இதனிடையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
கொலை குறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் முத்துப்பாண்டி இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள், பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என கோஷமிட்டவாறு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முத்துப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல முடியாமல் கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் முத்துப்பாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிவகங்கை நகரில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி மீது கொலை வழக்கு, கட்ட பஞ்சாயத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணிடம் பண மோசடி செய்தது, கந்துவட்டி பிரச்சினை, இடம் விற்பதில் தகராறு என பல்வேறு புகார்கள் உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டியில் செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் முத்துப்பாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பாண்டிக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலப் பிரச்சினையால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து அவர்களை பிடிக்கும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் நகரின் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளில் கொலையாளிகள் நடமாட்டம் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முத்துப்பாண்டியை வெட்டிக் கொன்றது 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகள் பிடிபட்ட பின்பு முத்துப்பாண்டி கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
கொலையுண்ட முத்துப்பாண்டிக்கு ஸ்வேதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.






