என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் செல்லத்துரை தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணைமின்நிலையம் மற்றும் திருப்பத்தூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெரும் உயரழுத்த மின்பாதையில் முக்கிய பராமரிப்பு பணிகள் நாளை(22ந்தேதி) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 10மணி முதல் 2மணி வரை திருப்பத்தூர் பீடர் பகுதியான மின்நகர், மீன் மார்க்கெட், மதுரைரோடு, காலேஜ்ரோடு, அஞ்சலக வீதி, 4ரோடு, கணேஷ்நகர் உள்ளிட்ட திருப்புத்தூர் நகர் முழுவதும் கே.வைர வன்பட்டி, தென்கரைபீடர் பகுதியான மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என்.வைரவன்பட்டி. மாதவராயன்பட்டி பீடர் பகுதியான திருக் கோஷ்டியூர், கருவேல் குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணாநகர், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, சுண் ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, எம். வலையபட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் வீட்டு கதவை உடைத்து நகை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் கனகவேல். இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சாந்தி பெரியகோட்டையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட யாரோ வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்று திரும்பிய ஆசிரியை சாந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. இதுகுறித்து காரைக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.
பீரோவில் இருந்த 18 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக சாந்தி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
மானாமதுரை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை ப்ளு நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் வரவேற்றார்.
கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர், இளையான்குடி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), வட்டார மேலாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை, மனிதவள மேலாளர் ராம்கி வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கினார். பின்னர் நடைபெற்ற நேர்முக தேர்வில் 151பேர் கலந்துகொண்டதில் 115பேர் தேர்வுபெற்றனர்.
தேர்வுபெற்றவர்களுக்கு கல்லூரி ஆட்சிகுழுஉறுப்பினர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ், நசீர் கான், அபூபக்கர் சித்திக், துணைமுதல்வர் ஜஹாங்கிர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ்கான், ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் இப்ராஹிம் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஷம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஆர்.சி.பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பிறப்பு முதல் 18வயது வரை நிரம்பிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதனரெட்டி தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அறுவைச்சிகிச்சை, உபகரணங்கள் சம்பந்தமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் வட்டாட்சியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பள்ளத்தூர். இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக்கிடங்கு உள்ளது. இங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூடைகள் கொண்டு வந்து சேமிக்கப்பட்டு அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.
15ஆயிரம் மெட்ரிக்டன் அளவில் நெல் மூடைகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டிருப்பது வழக்கம். தினமும் 21 ஆயிரம்டன் அளவில் அரிசி ஆலைகளுக்கு அர வைக்கு நெல் கொண்டு செல்லப்படுகிறது.பள்ளத்தூரில் மட்டும் 12தனியார் அரிசி ஆலைகள் அரசின் தானிய கிடங்கிற்கு நெல்லை அரைத்து கொடுக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் கடந்த 7ந்தேதி ஊர் பொதுமக்கள் ஒருசில அரிசி ஆலைகளுக்கு ரேசன் அரிசி கடத்தி வந்ததாக 4 வாகனங்களை பஸ்நிலையம் அருகே மடக்கி பிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 5 டன் ரேசன் அரிசி மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நேற்றும் கொத்தரி கிராமம் அருகே ஒரு லாரியை பொதுமக்கள் பிடித்து புட்செல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுமார் 16டன் ரேசன் அரிசி மூடைகள் பிடிபட்டது. இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், கிடங்கில் இருந்து பெறப்படும் நெல்லை ஒருசில ஆலைகள் வெளி மார்க் கெட்டில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றன.
10டன் நெல் வாங்கினால் அரவைக்குபின் 6.5டன் அரிசி கொடுக்க வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் இருந்து கடத்தி வரப்படும் ரேசன் அரிசியை இங்குள்ள சில மில்முதலாளிகள் குறைந்த விலைக்கு வாங்கி அரசிடம் அரவைக்குப்பின் ஒப்படைப்பதாக கொடுத்து விடுகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 100டன்னுக்கும் மேல் ரேசன் அரிசி கடத்தி வரப்படுகிறது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வு துறை காவல் அலுவலகம் சிவகங் கையில் உள்ளது.
எனவே ரேசன் அரிசியை கடத்துபவர்கள் தைரியமாக கடத்தி வருகின்றனர். அரசு ரேசன் அரிசியை கடத்துபவர்கள், வாங்கி விற்பவர்கள், முறைகேடு செய்யும் ஆலை முதலாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புட்செல் சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ஒரு சார்புஆய்வாளர், 4காவலர்கள் மட்டுமே உள்ளோம்.அலுவ லகம் சிவகங்கையில் உள்ளதால் சிரமமாக உள்ளது என்றார்.
நேற்று பிடிபட்ட லாரி நெல் மூடைகளுடன் காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தூர் அருகே வடகுடியில் ஒரு தனியார் குடோனிலும் ரேசன் அரிசி மூடைகள் பிடிபட்டுள்ளன.
சிவகங்கையில் இருந்து இன்றுதர ஆய்வு செய்யும் நிபுணர்கள் அரிசியை ஆய்வு செய்தபின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் மாசி&பங்குனி திருவிழா நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசித்தி பெற்ற மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி&பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
இந்தாண்டிற்கான மாசி பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 8ந் தேதி நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காப்பு கட்டிய நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்துதல், காவடி, பறவைக்காவடி எடுத்து வந்து அம்பாளுக்கு நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு அம்பாளுக்கு மது, முளைப்பாரி, கரகம், தீச்சட்டி எடுத்து வந்தனர். இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம், பூக்குழி இறங்குதல் செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.தினமும் பல்வேறு சமு தாயத்தினர், சங்கங்களின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின்படி காரைக்குடி துணை கண்காணிப்பாளர் வினோஜி தலைமையில் 500&க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையதுறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
சிவகங்கையில் நடந்த கபடி போட்டியில் ஏரியூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடிகழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி காரைக்குடி அமரா வதிபுதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டன.
இதில் முதல் பரிசை ஏரியூர் வலையபட்டி அணியும், 2ம் பரிசை குமார பட்டி அணியும், 3ம் பரிசை காரைக்குடி அணியும், 4ம் பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரியும் பெற்றன.
முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளையும் நினைவு பரிசுகளையும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா வழங்கினார்.
இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு வருகிற 18-ந்தேதி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற உள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணிக்காக ஆட உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செட்டியார் குளம் சீரமைக்கும் பணி நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள செட்டியார்குளத்தை சீரமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலை மையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி திட்ட இயக்குநர் ராஜா, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பல முத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில்குமார், பேரூராட்சி செயல்அலுவலர் ஜான்முகமது மற்றும் பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நகருக்கு மத்தியில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இடப்பற்றாக்குறை என காரணம் காட்டி அதனை நகருக்கு வெளியே 3 கி.மீ. தொலைவில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகருக்கு வெளியே புதிய பஸ்நிலையத்தை அமைக்காமல் தற்போதுள்ள பஸ்நிலையத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு தற்போதுள்ள பஸ் நிலையத்தை நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதிய பஸ்நிலையம் நகருக்கு வெளியே அமைக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி இன்று திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இளையான்குடி நகர்ப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தேவகோட்டையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
தேவகோட்டை,
சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் காவல்ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேவகோட்டை பஸ் நிலையம் அருகே இருசக்கர வாகனஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் 2 பேருக்குமேல் பயணம் செய்ய வேண்டாம், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம், மது அருந்தி வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் வாகனம் ஓட்டும் போது புகை பிடிக்க வேண்டாம் என்றும், நான்குசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் துணை கண் காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவ ணன் மற்றும் போலீசார் வழங்கினர்.
சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி, ரேக்ஸ், மற்றும் போக்குவரத்து துறை சார்பு ஆய்வாளர்கள், காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்திலுள்ள வேம்புடைய அய்யனார், கருப்பர், காளியம்மன், அக்னி காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, இரவுசேரி, சாத்திக் கோட்டை, தளக்காவயல் மற்றும் நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது. கோவிலில் வேம்புடைய அய்யனார், காளியம்மன், கருப்பருக்கு விமான கோபுரமும் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.
இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 12ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று காலை 4ம் கால யாகபூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி தொடர்ந்து காலை 5மணியளவில் அக்னி காளியம்மன் ஆலயத்தில் கலசங்களுக்கு புனிதநீர் சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு யாக சாலையில் இருந்து மேள தாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களுடன் காலை 6மணிக்கு புறப்பாடாகி 6.50மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகமும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளியில் சதுரங்க போட்டி நடந்தது.
காரைக்குடி
சிகரம் பெண்கள் சதுரங்க கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தோடு இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சதுரங்கக் கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரகாஷ், கூடுதல் செயலாளர் ஜெ.பிரகாஷ் மணிமாறன் மற்றும் சிகரம் பெண்கள் சதுரங்கக் சங்கத்தின் செயலாளர் செல்வி முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் பிரமிட் ஐ.ஏ.எஸ். அகடமி நிர்வாக இயக்குனர் கற்பகம் சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் சார்லஸ் ஜான்கென்னடி, இணைச்செயலாளர் ராமு, காயத்ரி மொபைல்ஸ் சுரேஷ் மற்றும் சீனிவாசன், சிகரம் பெண்கள் சதுரங்க கழகத்தின் பொருளாளர் நாச்சம்மை, தலைவர் காயத்ரி, துணை பொருளாளர் தேனம்மை, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிக போட்டியாளர்களை பங்கேற்க செய்த பள்ளிக்கான விருதை கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்யபார்தி பள்ளியும் பெற்றன. அதிக புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தட்டிச்சென்றது.






