என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தேவகோட்டையில் கட்டிட தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

    பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடியது மட்டுமின்றி, வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று விட்டார்.

    இந்தநிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அது பற்றி பூமிநாதனுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தனர்.

    மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பூமிநாதன் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார்.

    வீட்டில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததும், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ, மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25½ பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூமிநாதன் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பூமிநாதன் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து தடயங்கள் எதுவும் போலீசுக்கு கிடைத்து விடாமல் இருப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.

    இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    பூமிநாதனின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள், அவரது பக்கத்து வீடான நாச்சியப்பன் என்பவரது வீட்டிலும் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு நகை, பணம் எதுவும் கிடைக்காததால் அப்படியே சென்று விட்டனர்.

    பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடியது மட்டுமின்றி, வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தேவகோட்டை பகுதியை பொருத்தவரை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் போதுமான அளவிற்கு போலீசார் இல்லை எனவும், இதனால் ரோந்து, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் போலீசார் முழு வீச்சில் ஈடுபடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தேவகோட்டையில் போதுமான அளவில் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×