என் மலர்
சிவகங்கை
- தேவகோட்டையில் 9 சுவாமிகள் கலந்து கொண்ட தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
- முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு 2-ம் தீர்த்தவாரி உற்சவம் நகரில் உள்ள சிவன், ரெங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
அதேபோல் கண்ணனை யாகிய தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல் அகத்தீஸ்வரர் சவுந்தரநாயகி அலங்கரிக்கப் பட்டு வீதி உலா வந்தார்.
கோட்டூர், மார்க்கண்டன் பட்டி வழியாக சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாதயாத்திரையாக வந்தனர். 9 சுவாமிகள் காந்தி பூங்காவில் வந்தடைந்தது. அதன் பின் சுவாமிகள் மணிமுத்து ஆற்றில் எழுந்தருளினர். அங்கு மூலவர்களுக்கு மஞ்சள், திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காரை சேர்க்கையாளர்களும் நாட்டார்களும் நகரத்தார்களும் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
- சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
காரைக்குடி
காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டி யில் கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியும் மோதின.
ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆகி டைபி ரேக்கர் வழங்கப்பட்டு அதி லும் சமனாகி வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான ரூ.50,001 மற்றும் வெள்ளி கோப்பையை என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியினர் பெற்றனர்.
இரண்டாம் பரிசு ரூ.40001 ஐ கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர். 3-வது மற்றும் 4-வது பரிசுகளை முறையே யுனைடட் கால்பந்து கிளப் காட்டு தலைவாசல் மற்றும் செய்யாறு அணிகளும் பெற்றன.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் அனைத்து கட்சி பிர முகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.பிரதர்ஸ் அணி தலைமை நிர்வாகி குமரன், உறுப்பி னர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.
- தேவகோட்டையில் அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
- பள்ளிக்கு செல்ல தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயில சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து நகர் பஸ்கள் மட்டும் வாயிலாக வந்து செல்கின்றனர்.
தேவகோட்டை பணி மனையில் சுமார் 27க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சரிவர பஸ்கள் இயக்கப்படாததால் பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.
தேவகோட்டையில் இருந்து கோட்டூர் காரை வழியாக செல்லும் வெற்றியூர் நகரப் பேருந்து இயக்கப்படாததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூ ரிகளுக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பும் அவல நிலை உள்ளது. சிலர் சரக்கு வாகனங்களில் பள்ளிக்கு செல்கின்றனர். அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பள்ளிக்கு தாமதமாக செல்வதும், இதனால் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
நகர பேருந்துகள் தரம் குறைந்தும் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நிற்பதாலும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பற்றாக் குறையாலும் நாளுக்கு நாள் நகரப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. நகர பேருந்துகளை மட்டும் நம்பி உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் சரிவர இயக்கினால் மட்டுமே மாணவ-மாணவிகள் கல்வி கற்க செல்ல ஏதுவாக அமையும். இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.
- அனைவரையும் ஈர்க்கக்கூடியது தமிழ்மொழி என கலெக்டர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூ ரியில் தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பேசியதா வது:-
நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உள்ளது. உலக மொழிகளில் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையிலும், சிறப்பு வாய்ந்த மொழி யாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழிக ளிலுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை எளிதில் உணர்ந்து, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. பல்வேறு காலச்சூழ் நிலையில் மாற்று மொழிக ளின் பயன்பாடுகள் அத்தி யாவசியம் அதிகரித்து வந்தாலும், தாய்மொழி பயன்பாட்டை தவிர்க்கக்கூடாது.
தாய்நாட்டில் முழுமையாக பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ் மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தாய்மொழியை காப்பதும் அதன் மூலம் அலுவலக செயல்பாடுகளை செயல்படுத்துவதும் என ஒவ்வொன்றையும் முழுமையாக பின்பற்றி அனைவரும் தமிழ்மொழியை பாதுகாத்திட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள், பொதுமக்கள் எதிர்ப்பால் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
- தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நன்றி கூட சொல்ல வராதவர்கள் இப்போது எதற்கு பூத் கமிட்டி கூட்டம் நடத்த வருகிறார்கள்?
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியம் புத்தூரணி களபங்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற இருந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக அங்குள்ள அரசு சமுதாயக்கூடத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் சமுதாயக் கூடம் முன்பு திரண்டனர். அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து பூத் கமிட்டி கூட்டத்தை நடத்த விட மாட்டோம் எனக்கூறி சமுதாயக்கூடத்திற்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு தெரியாமல் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறு கிறது. அதிகாரத்தை சிலர் துஷ்பிர யோகம் செய்கி றார்கள். கண்ணங்குடி ஒன்றியத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். இதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது பூத் கமிட்டி அமைக்க வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து ஓட்டு போட்டு எந்த பலனும் இல்லை. எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பூத் கமிட்டி அமைத்தது நியாயமற்றது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்றபிறகு நன்றி கூட சொல்ல வராதவர்கள் இப்போது எதற்கு பூத் கமிட்டி கூட்டம் நடத்த வருகிறார்கள்? என்றனர். நிர்வாகிகள், பொது மக்கள் எதிர்ப்பால் களபங்குடியில் நடைபெற இருந்த காங்கி ரஸ் பூத் கமிட்டி கூட்டம் ரத்தானது.
- தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
- இந்த விழாவில் முன்னாள் நீதிபதி கலந்து கொண்டு பேசினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு நூல் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மூத்த உறுபினர் களுக்கு விருது வழங்கினார். நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் சங்க புரவலர்களுக்கு விருது வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
ஒன்றாக சேருவது அனைத்தும் ஒரு காலத்திலே உடைவது என்பது காலத்தின் கட்டாயம், ஆனால் உடைந்தது எதுவும் சேருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. நான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை பற்றி சொல்லுகி றேன்.
பதவியை அடைய வேண்டும் என்கிற ஆசை வராத மனிதன் இந்த உலகத்தில் கிடையாது. அது குறிப்பாக தமிழர்களை பொருத்தவரை பதவி ஆசை என்பது இறப்பிற்கு பின்னா லும் உண்டு. அதனால்தான் சிவலோக பதவி அடைந்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவகங்கை அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் பாசறை மகளிரணி கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஊராட்சி தலைவர் கோமதி மணி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் பூத் கமிட்டி பட்டியலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய, வாக்குறுதிகளை நிறை வேற்றாத தி.மு.க. அரசு குறித்து பொதுமக்களிடம் பூத் கமிட்டி பொறுப்பா ளர்கள், நிர்வாகிகள் பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணி பாஸ்கரன், பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கருணாகரன், கலைப்பிரிவு செயலாளர் செந்தில்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சங்கர் ராமநாதன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடர் மழையால் வீடுகள், விவசாய கிணறுகள் இடிந்தன.
- சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால் வீடுகள், விவசாயக் கிணறு இடிந்து விழுந்தன.
மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராம பகுதிகளில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் தினமும் அந்த சாலைகளில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகிறார்கள்.
மேலும் பாசனக்கண்மாய்கள் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே மழைத் தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பியது. சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து இப்பகுதியில் விளைநிலங்களில் நடவு பணிகள் தீவிரமடைந்துள் ளன.
தொடர்மழையால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் மொத்தம் நான்கு வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியாகவும் இடிந்தன. மேலும் நேற்று திருப்பாச் சேத்தி அருகே மாரநாடு விலக்கு பகுதியில் முத்து என்பவரது 72 அடி உயர பெரிய அளவிலான விவசாயக்கிணறு இடிந்து உள்ளே விழுந்தது.
கிணற்றுக்குள் இருந்த இரு தண்ணீர் இரைக்கும் மோட்டார்களும் மண்ணுக் குள் புதைந்தன. இந்தக் கிணற்றுக்கு அருகே உள்ள கட்டடத்தின் தரைத்தளமும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அந்தக் கட்டி டமும் கீழே விழுந்து மண் ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது.
மழையால் இடிந்து போன வீடுகள் உள்ளிட்ட சேதம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மழையால் நடவுப் பணி தொடங்கியுள்ளதால் மானாமதுரை, திருப் புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க குவிந்து வருகின்றனர்.
- சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது.
- 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- சிங்கம்புணரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
- அரசின் நலத்திட்டங்களை பெற்று பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பெண்களுக்கு உரிமைத்ெதாகை வழங்கி 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,784 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 113 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 897 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 66 ஆயிரத்து 700 பெண்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக சராசரியாக 75 சதவீத பெண்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணைத்தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய அயலக அணி சன் சீமான் சுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெளிநாடுகள்-பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன.
- கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேட்டங்குடி பறவை கள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணால யத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் 5 மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசிவால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.
தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இதுகுறித்து வன அலுவலர் தெரிவிக்கையில். பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகைபுரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்குமிடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது. மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற வற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதக மான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர். கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்த இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வரு கிறது என்பது குறிப்பி டத்தக்கது.
- தேவகோட்டையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்் செய்யப்பட்டது.
- தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல் நிலை நகராட்சியாக உள்ள தேவகோட்டையை, தேர்வு நிலை நகராட்சியைாக தரம் உயர்த்தும் தீர்மானத்தை தலைவர் சுந்தரலிங்கம் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், தேவகோட்டை யில் தொழில் பூங்கா உரு வாக்க வேண்டும். சாலை களில் கழிவு நீர் கால் வாய்கள் அமைக்க வேண்டும், பன்றிகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சிமெண்ட், தார் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
அரசு பள்ளிக்கு மாற்று பாதையில் சாலை வசதி செய்து தர வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதற்கு சுந்தரலிங்கம் பதிலளிக்கையில், திருப்பத்தூரில் சாலையோரம் உள்ள மண் மேடுகளை அகற்றவும், தேவ கோட்டையில் தொழில் பூங்கா தொடங்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூடுதலாக கொள்முதல் செய்து 27 வார்டுகளிலும் கொசு மருந்துஅடிக்கப்படும் என்றார்.






