என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.

    அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருங்காகோட்டை ஜல்லிக்கட்டில் புதிய நாச்சி காளைக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
    • கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் கிருங்காகோட்டையில் ஜெயமனி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை தமிழக அளவில் 7 வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி, ஜல்லிக்கட்டு பந்தயங்களில் புகழ் பெற்றுள்ளது.

    கடந்த டிசம்பர் 22-ந் தேதி அன்று திடீரென நாச்சி காளை மரணமடைந்தது. இந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ஜெயமனிக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாங்கள் சாமியாக கும்பிடும் ஜல்லிக்கட்டு காளை இறந்தால் அதை ஈடுகட்டும் விதமாக கிராம வழக்கப்படி பாரம்பரிய முறைப்பட்டி புதிய காளைக்கு பரிவட்டம் கட்டப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருங்காக்கோட்டையில் உள்ள குலதெய்வமான பெரிய நாச்சி கோவிலில் வைத்து தட்டில் திருநீற்றில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, புதிய நாச்சி காளைக்கு பரி வட்டம் கட்டப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து அங்கு நின்ற பெண் பக்தருக்கு அருள் வந்தது. காளைக்கு முன் நின்று திருநீரை கையில் எடுத்து புதிய காளையை நாச்சி என்று அழைத்தார். அதை கேட்டவுடனே ஆக்ரோச மாக துள்ளிய புதிய காளை நாச்சி சூடம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டை முன்பக்க காலை வைத்து தட்டி விட்டு சென்றது.

    அருள் வந்த பெண் தங்கள் நாச்சி காளை தட்டை தட்டி விட்டு சத்தியம் செய்ததாக எடுத்துக்கொண்டு வந்து ட்டாட நாச்சி... வத்துட்டாட நாச்சி... என கூறிய இந்த காட்சி இடம் பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.

    பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

    • வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
    • வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்திசிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து, அதே வளாகத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இந்த வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொ ணரவும், தமிழ் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது.

    இதுபோன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களை கவுரவிக்கும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், முதல்-அமைச்சர் சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக் கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • திருப்பத்தூர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து உற்சவரான நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    அதன் வழியாக சுவாமி வலம் வந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தது. சுவாமியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெருமாள் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
    • முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்று கிழக்குப்பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீர அழகர்கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் திரண்டனர்.

    மேள தாளத்துடன் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என வரவேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதேபோல் அப்பன் பெருமாள் கோவில், தியாக விநோத பெருமாள், உடைகுளம் மான்பூண்டி நல்லாண்டவர் பெருமாள் கோவில், வேம்பத்தூர் பூமி நீளாபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.

    தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

    அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

    மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    • சிவகங்கையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர்அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.35.37 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது வாரிசுதாரராகிய மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தொழிலாளர் நல ஆணையர் கோட்டீ சுவரி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம் தலைமை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் பிலால், அப்துல் கபூர், பகுசியா முன்னிலை வகித்தனர். காஜாமைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இனாயத்துல்லா வரவேற்றார். திருப்பத்தூர் நகரில் தமிழர்களின் மொழி, பண்பாடு, மத நல்லிணக்கம் பாதுகாக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் ஏற்படுத்துதல், "உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" என்ற பிரசாரத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, போன்ற பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் முகமது மணிப்புறா நன்றி கூறினார்.

    • சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.

    கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • 04575-299293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற உள்ளன.

    ஆண்-பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in–ல் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும், விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்களான 74017 03503 மற்றும் 04575-299293 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிள்ளையார்பட்டி கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
    • கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதி காலை முதல் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் டிரஸ்ட் சார்பில் கோவில் முழுவதும் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர், உணவு வசதி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

    ×