என் மலர்
சிவகங்கை
- கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்து பேசியதாவது:-
கீழடி அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில், செட்டி நாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளார்.
நமது முன்னோர்களான சங்ககால தமிழர்கள் நகர நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் ரீதியாக எடுத்துச் செல்லும் வகையில், அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா ஆய்வகத்தின் மூலம் அகழ் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்விற்குட்படுத்தப்பட்டது.
அதில் அந்த பொருட்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே, நமது முன்னோர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த பயிற்சிக்கென ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1,000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், கோவை, தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்திடவும் திட்ட மிடப்பட்டு, அதன் முதல் சுற்றாக மதுரை மண்டலத்தில்இந்த பயிற்சி தொடங்கப்பட்டு, வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆர்வத்தின் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்பட்டு, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக தாங்கள் அறியப்படும் வரலாற்று சிறப்பு அம்சங்கள் குறித்து மாணவ செல்வங்களிடம் எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும், தமிழர்களின் புகழையும் அறியச்செய்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுமட்டுமன்றி இந்த வரலாற்று சிறப்பு அம்சங்களை மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் கல்வி சுற்றுலாவும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, இயக்குநர்கள் அறிவொளி (தொடக்கக்கல்வி இயக்ககம்), லதா (மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்), இணை இயக்குநா்கள் குமார், ஸ்ரீதேவி, ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சக்கந்தி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:-
சிவகங்கை வட்டம் சக்கந்தி கிராமத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். சக்கந்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.
மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
- வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
- இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
- அக்னி வீரபத்திர சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது.
- 101 கிடாய்கள் பலியிட்டு விடிய, விடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்புவனம்
திருப்புவனம் கோட்டையில் அக்னி வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சார்பில் மகா வனபோஜனம், பச்சைக்குடில் உற்சவ விழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த மாதம் 21-ந் தேதி கோவிலில் கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 24-ந்தேதி முதல் வைகை ஆற்றங்கரையிலிருந்து தினமும் கரகம் எடுத்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர் சுற்றி வந்து பச்சை குடிலில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 101 கிடாய்கள் பலியிடப்பட்டு முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்பு மகா வனபோஜனம் என்னும் அன்னதானம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் தேரோடும் வீதி, பெருமாள் கோவில் வீதி, சிவன் கோவில் வீதி உள்பட பல வீதிகளில் பக்தர்கள் இருபுறமும் அமர்ந்து அன்னதான விருந்தை சாப்பிட்டனர்.
நள்ளிரவில் தொடங்கிய அன்னதானம் அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- இளையான்குடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
- இந்தப்பணிகள் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சிவகங்கை-பரமக்குடி சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் திருமலைமான் முடிகாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் தன்னிடமிருந்த பிஸ்கட், முந்திரி, உலர் திராட்சை பழங்களை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுரை மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ், இளையான்குடி பேரூராட்சி திட்ட பொறி யாளர் சந்திரமோகன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் கருத்தரங்கம் நடந்தது.
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை அனுப்பி வைத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் இந்திய சமூக ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது .
முதல் நாள் கருத்தரங்கில் துறை தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார் பேராசிரியர் நசீர்கான் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக புதுடெல்லி இந்திய பொது நிர்வாக நிறுவன பேராசி ரியர் சுரேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 140 ஆய்வு கட்டுரைகளை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பி வைத்தனர். அதை வணிகவியல் துறை சர்வதேச தரவரிசை புத்தகத்தை பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா, பாரதியார் பல்கலை கழக பேராசிரியை சுமதி ஆகியோர் வெளியிட அதை கல்லூரி ஆட்சி குழு தலைவர் அகமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அகது, ஆட்சி குழு உறுப்பினர் ஹமீது தாவூது, அப்துல் சலீம், சிராஜுதீன் முதல்வர் அப்பாஸ் மந்திரி பெற்றுக் கொண்டனர். உதவி பேராசிரியர் - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார் .
முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் சுமதி பங்கேற்று பேசினார். 2-ம் அமர்வில் சிறப்பு விருந்தினராக மைசூர் எஸ்.டி. எம். மேலாண்மை மேம்பாடு கல்வி நிறுவன பொருளாதார உதவி பேராசிரியர் ரியாஸ் அகமது பங்கேற்று பேசினார்.
கருத்தரங்கின் 2-ம் நாளில் உதவி பேராசிரியர் சம்சுதீன் இப்ராகிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின ராக மைசூர் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் நாகராஜா பங்கேற்று இந்திய பொருளாதாரத்தில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.
மற்றொரு அமர்வில் உதவி பேராசிரியர் பவுசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை தலை வர் கிருஷ்ணகுமார் நவீன வங்கி செயல்பாட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினார்.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் பிராந்திய இயக்குநர் சதக்கத்துல்லா பங்கேற்று பேசினார். உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வருகிற 11ந்தேதி மாலை சிவகங்கை அம்மா உணவகம் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.
இதையொட்டி சிவகங்கை யில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செய லாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சிவாஜி, சிவசிவஸ்ரீதர், சேவியர்தாஸ், பழனிச்சாமி, கோபி, ஜெகதீஸ்வரன், செல்வமணி, பாரதிராஜன், அருள் ஸ்டீபன், வாசு, சோனைரவி, செந்தில் குமார், மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் மற்றும் நகர செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலி தாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூவந்தியில் இருந்து பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு கழக பொதுச்செயலாளரை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
- கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.
இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.
முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
- விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை வழங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி ராஜ வித்ய விகாஸ். சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் 5-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அய்யப்பன் தலைமை தாங்கி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் பேசுகையில், இந்த பள்ளியில் விளை யாட்டுத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.
மாணவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இங்கு திரளாக கலந்து கொண்டுள்ள பெற்றோ ருக்கு நான் சொல்வ தெல்லாம் உங்கள் குழந்தை களை விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும். மாநில அளவில் சிறந்த பள்ளியாக உருவெடுக்க விளையாட்டு மிக முக்கியம் என்றார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளி களுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த கிரிக்கெட் அணியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது மிகப் பெரிய பொழுது போக்கு என்பது மட்டுமல்லாமல் வீரர்களுக்கு பெயர், புகழ் மற்றும் பணம் பெற்றுத் தருகிறது. ஒரு துறையில் சாதிக்க ஒரு வருடம் 2 வருடம் போதாது. எனது 14 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பிறகு தான் நான் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடிந்தது.
உடல் குறைபாடு உள்ள நாங்கள் சாதிக்கும்போது மாணவர்களாகிய நீங்கள் எளிதில் சாதிக்க முடியும். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை விளையாட்டின் மூலம் கிடைக்கபெற செய்ய முடியும். சுய ஒழுக்கம் விளையாட்டில் சாதிப்ப தற்கு முக்கிய காரணி என்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் டாக்டர் ஐஸ்வர்யா தேவி வரவேற்றார். ஓட்ட பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு பயிற்சி கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட வீர விளையாட்டுகளின் செயல் வடிவமும் இடம் பெற்றது. ஒட்டு மொத்த சாம்பிய னாக சிகப்பு இல்ல அணி தேர்வு செய்யப்பட்டது. நீல இல்ல அணி இரண்டாம் இடம் பிடித்தது. டிரஸ்டி பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயராஜா, அகாடமிக் இயக்குநர் டாக்டர் நிக்சன் அசரியா கல்லூரி முதல்வர் டாக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பழனியப்பன், மனோஜ் மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.
- அருங்காட்சியம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
- 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை சென்ற அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றிலும் பார்வையிட்டார்.
இந்த அருங்காட்சியம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. 8 கட்ட அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.






