என் மலர்
சிவகங்கை
- மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மானாமதுரை நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கென ராஜகம்பீரம் தலைமை நீரேற்று நிலையத்தில்
15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன நிறுத்தம் தொடர்பாகவும் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் அலுவலகக் கட்டிடத்திற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய நகர்ப்புற சுகாதார மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சியின் உரக்கிடங்கு மையத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன்.
இந்த மையத்தின் கசடு கழிவு நிலைய மேலாண்மைப் பணிக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும், அரசக்குழி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பிரதான கால்வாய்களில் ரூ.28.80 கோடியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் புனர மைப்பு பணிகள் மற்றும் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயரச்செய்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், துரிதமாக பல்வேறு நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கண்மாய்கள் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மானாமதுரை , திருப்புவனம் வட்டங்களில் பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் வைகை யாற்றின் குறுக்கே விரகனூர் மதகணையில் இருந்து பிரியும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.28.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் மானா மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் உள்ள 40,743.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன் 82 கண்மாய்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பகுதியைச் சுற்றியுள்ள 3,180 ஏக்கர் இடைவெளி நிலங்களும் பயன்பெறும்.
மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை கிராமம் கீழப்பசலை மற்றும் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை சிவகங்கை சாலை இணைப்பு பாலத்திற்கு மேல்புறத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு ரூ.16.86 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அணைக்கட்டின் மூலம் கீழப்பசலை மேலப்பசலை ஆதனூர் மற்றும் சங்கமங்கலம் ஆகிய 4 கண்மாய்கள் வழியாக 461.82 எக்டேர் (1140.70 ஏக்கர்) பாசன நிலங்களும், கால்பிரிவு மற்றும் செய்களத்தூர் கிராமங்களில் உள்ள 27 விவசாய கிணறுகள் வழியாக 85.75 எக்டேர் (211.80 ஏக்கர்) பாசன நிலங்களும் பயன்பெறு கின்றன. மொத்தமாக 547.57 எக்டேர் (1352.50 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த அணைக்கட்டு மூலம் 9.36 மி.க.அடி (எம்.சி.எப்.டி) தண்ணீர் தேக்க இயலும். இதன் பொருட்டு அணைக்கட்டின் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதனால் பாசன வசதி பெற்று விவசாயிகளின் பொருளாதார வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெள்ள காலங்களில் வைகை யாற்றில் இருந்து உபரிவெள்ள நீரை மேலப்பசலை கண்மாய் வழியாக நாட்டார் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 கண்மாய்களுக்கும் ராமநா தபுரம் மாவட்டத்திலுள்ள 4 கண்மாய்களுக்கு இந்த அணைக்கட்டு மூலம் திருப்பிவிட இயலும்.
இந்த 10 கண்மாய்கள் மூலம் சுமார் 614.30 எக்டேர் (1517.32 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், இளம்பொறியாளர் போஸ், உதவிப்பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
- காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் க நடைபெற்றது. விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ரஜ்னீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முதல்நாள் நடைபெற்ற கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் காட்வின் சந்தீப், டாக்டர் குமரேசன், டாக்டர் கிரிதர்முத்து மற்றும் பொறி யாளர் கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கே.ஜி. மழலையர் பள்ளி மாண வர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை ஜோசபின் நன்றி கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- 11-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக சிவகங்கை-மதுரை 4 வழிச்சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஜெகன், கோபி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பாசறை இணைச்செய லாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரிக்கு இஸ்ரேல் பெண் கவிஞர் வருகை தந்தார்.
- கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற பெண் கவிஞர், கலைஞர் மற்றும் பெண் செயற்பாட்டாளருமான ஜ்மிரா போரான் ஜியான் விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவர் இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றி உள்ளார்.
சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன், முதல்வர் கருணாநிதி, ஆலோசகர் தர்மராஜ், கல்லூரி உதவிப்பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை வரவேற்றனர். விழாவில் புதுக்கோட்டை மௌன்ட் ஜியான் சர்வதேச பள்ளியின் அறங்காவலர் ஜோனதன் ஜெயபரதன் கலந்து கொண்டார். பின்பு மாணவர்கள் மத்தியில் ஜ்மிரா போரான் ஜியோன் சிறப்புரையாற்றினார். ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில்தான் இயற்றிய கவிதைகள் சிலவற்றையும் வாசித்து காட்டினார். முடிவில் கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.
- தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
- குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் கிராமத்தில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு திருவிழா வரும் மார்ச் 29-ந் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி இக்கோவிலில்தற்போது கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பகுதியில் உள்ள தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக தற்போது தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின்பு அருகே உள்ள வயல்களில் உள்ள மின்மோட்டார் மூலம் தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.
கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
- சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
- புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.
தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை அருகே சக்கந்தியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.
பொது மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் கடைகோடிவரை மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்கள்-ஓய்வூதியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்.
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து போராடினர். போராட்ட களத்திற்கு வந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்-அரசு ஊழிய ர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவர் உறுதியளித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
முதல்-அமைச்சர் பிறந்தநாளில் நாங்கள் கேட்காத கோரிக்கைகளான அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கையடக்க கணினி வழங்கப்படும் என்றும், அனைத்து ஆசிரியர்க ளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மானாமதுரை கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
- ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் மாசிமக விழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இந்த கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு மாசிமக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவர் அங்காள பரமேசுவரிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தார்.
அதன்பின் கோவிலை வந்தடைந்த அம்மன் தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். தெப்பம் 3 முறை வலம் வந்தது. திரளான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.
- பொதுபிச்சி அம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.
- இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் "ராவாத்தா" என்னும் மாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்- கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள். விழாவின் 10-ம் நாளில் இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
விழாவின் 10ம் நாளான நேற்று இரவு அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்- கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஏலம்விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்: 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணை யவழியில் (ஆன்லைனில்) பெறப்பட்ட வருமா னச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதா ரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இருவரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி த்துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






